Sunday, 4 May 2025

வீடு கட்ட கடன் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை!

வீடு கட்ட கடன் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை!

வீடு கட்ட கடன் வாங்கும் முன் சில முக்கிய அவதானிப்புகளைச் செய்து விட்டு அதற்குப் பின் வீட்டுக் கடன் வாங்குவதா, வேண்டாமா என முடிவெடுத்தால் வீட்டுக்கடனால் எந்த வித பிரச்சனையும் இருக்காது. அப்படி செய்ய வேண்டிய நான்கு விதமான அவதானிப்புகள் என்னவென்றால்,

1. ஆண்டு வருமானத்தைப் போல 5 மடங்கு

உங்களுடைய ஆண்டு வருமானத்தைப் போல ஐந்து மடங்கு அளவுதான் நீங்கள் வாங்கப் போகும் வீட்டுக்கடன் இருக்க வேண்டும். அதாவது உங்கள் வீடு கட்டுவதற்கான பட்ஜெட் என்பது உங்களது ஆண்டு வருமானத்தின் ஐந்து மடங்கிற்குள்ளே இருக்க வேண்டும். அதைத் தாண்டி இருப்பது உங்கள் கடனுக்கான அபாய அளவை நீங்களே உயர்த்திக் கொள்வது போன்றதாகும். உங்கள் ஆண்டு வருமானம் 5 லட்சம் என்றால் நீங்கள் 25 லட்ச ரூபாய்க்குத்தான் வீட்டுக்கடன் வாங்க வேண்டும்.

2. வீட்டுக்கடன் தவிர வேறு கடன் கூடாது

வீட்டுக்கடன் வாங்குவது என்று நீங்கள் முடிவெடுத்து விட்டால் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான அடுத்த அவதானிப்பு என்னவென்றால், உங்களுக்கு வேறு எந்த விதமான கடனும் இருக்கக் கூடாது. இது ஏனென்றால் வீட்டுக்கடன் வாங்கி விட்டால் அதற்கு மாதாந்திர தவணைத் தொகை கட்டவே சரியாக இருக்கும். இதில் மற்றக் கடன்களும் இருந்தால் உங்கள் நிலைமை சிரமமாகி விடும்.

3. தவணைத்தொகை 40 சதவீதம்

வீட்டுக்கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகையைத் தீர்மானிப்பதிலும் ஒரு முக்கிய அவதானிப்பு அடங்கியிருக்கிறது. உங்கள் தவணைத் தொகையானது உங்கள் மாதாந்திர வருமானத்தின் 40 சதவீதத்திற்குள்தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் உங்களுடைய மற்றைய செலவினங்களை உங்களால் சமாளிக்க முடியும். 40 சதவீதத்தைத் தாண்டினால் உங்கள் பொருளாதாரம் அபாய நிலையை எட்டி விடும்.

4. ஒரே இடத்தில் இருப்பீர்களா?

இதை விட ஒரு முக்கியமான அவதானிப்பு என்னவென்றால், நீங்கள் வீடு கட்ட கடன் வாங்குவதற்கு முன், நீங்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றுவீர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் கஷ்டப்பட்டு, சின்னாபின்னபட்டு வீட்டுக்கடன் வாங்கி ஆசை ஆசையாய் வீட்டைக் கட்டி முடித்ததும் உங்களுக்கு வேலையில் மாறுதல் வந்தால் பிறகு நீங்கள் அப்படி கட்டிய வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு, நீங்கள் ஒரு வாடகை வீட்டில் குடியேற வேண்டியிருக்கும். இது தேவையா என்ன?

ஆகவே வீட்டுக்கடன் வாங்குவதற்கு முன் மேற்கண்ட அவதானிப்புகளை முழுமையாகச் செய்து முடித்து விட்டு அதன் பின் வீட்டுக்கடன் வாங்குவது குறித்து முடிவெடுங்கள்.

*****

No comments:

Post a Comment