ஒரு நேர் விகித கணக்கீடு
விகிதம் தொடர்பான ஒரு கணக்கீட்டை
இப்போது காண்போம்
12 மிட்டாய்களின் விலை ரூ.
30 எனில் 48 மிட்டாய்களின் விலை எவ்வளவு?
இந்தக் கணக்கிற்கு எவ்வாறு
விடை காண்பீர்கள்?
12 மிட்டாய்களின் விலையிலிருந்து
ஒரு மிட்டாயின் விலையை வகுத்துக் கண்டறிந்து அதிலிருந்து 48 மிட்டாய்களின் விலையைப்
பெருக்கிக் காணலாம் என்கிறீர்களா?
ஆனால் பாருங்கள், இங்கு நேர்
விகிதத்தைப் பயன்படுத்தினால் மிக எளிதாக விடையானது கிடைத்து விடும் அல்லவா!
அதெப்படி நேர் விகிதம் என்கிறீர்களா?
மிட்டாய்களின் எண்ணிக்கை
அதிகரிக்கும் போது அதன் விலையும் அதிகரிக்கும் அல்லவா! அதனால் நேர் விகிதம்தானே?
நேர் விகிதத்திற்கான விகித
அமைப்பு பின்ன வடிவிலானது அல்லவா! அதாவது எண்ணிக்கை
/ விலை என்று இந்தக் கணக்கைப் பொருத்த வரையில் அமையும்.
அதன்படி 12 மிட்டாய்களின்
விலை ரூ. 30 என்பதை 12 / 30 என அமைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா!
அடுத்ததாக 48 மிட்டாய்களின்
விலையைக் காண வேண்டும். அதன் விலையை x என எடுத்துக் கொண்டால் இதற்கான விகிதத்தை 48
/ x என எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லவா!
இனியென்ன? இரண்டு விகிதங்களையும்
சமப்படுத்திக் குறுக்குப் பெருக்கல் செய்ய வேண்டும். இதோ செய்து விடுவோம்.
12 / 30 = 48 / x
12x = 30 × 48
12x = 1440
x = 1440 / 12
x = 120
எனவே 48 மிட்டாய்களின் விலை
ரூ. 120.
எப்படிக் கண்டுபிடித்து விட்டோம்
பார்த்தீர்களா? இது போன்ற கணக்கீடுகளைப் பழகப் பழக மனதுக்குள்ளாகப் போட்டு சில நொடிகளில்
விடை சொல்லும் திறன் உங்களுக்கு வந்து விடும்.
அடுத்ததாக எதிர் விகிதம்
தொடர்பான ஒரு கணக்கீடையும் போட்டுக் காட்டி விடுங்கள் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.
அதற்கென்ன போட்டுக் காட்டி விடுவோம்.
*****
No comments:
Post a Comment