Tuesday, 4 October 2022

தள்ளுபடியில் பயன்படும் நேர் விகிதம்

தள்ளுபடியில் பயன்படும் நேர் விகிதம்

ஆடி மாதம் தொடங்கி விட்டால் தள்ளுபடி காலம் தொடங்கி விட்டது என்றுதானே பொருள். இதனால் தள்ளுபடியையே ‘ஆடித் தள்ளுபடி’ என்று சேர்த்துதானே சொல்கிறார்கள்.

எவ்வளவு தள்ளுபடி கொடுக்கிறோம் என்பதைக் கடைக்காரர்கள் சதவீதத்தில்தானே சொல்கிறார்கள். மொத்தத்தில் சதவீதம் என்ற சொல்லைக் கேள்விபடாதவர்கள் கூட கேள்விப்படும்படி வைத்து விடுகிறது இந்த ஆடி மாதம்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் சதவீதம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதோடு தள்ளுபடியில் சதவீதக் கணக்குகள் இருக்கின்றன என்பதையும் சொல்வதற்காகத்தான்.

சதவீதக் கணக்குகளை நாம் நேர் விகிதத்தைப் பயன்படுத்தி எளிமையாகச் செய்ய முடியும் என்பதால் சதவீதத்தோடு தொடர்புடைய தள்ளுபடி கணக்குகளையும் நாம் நேர் விகிதத்தைப் பயன்படுத்தி எளிமையாகச் செய்யலாம்.

அதை எப்படி என்பதைப் பார்ப்போம். அதற்கு முன் ஒரு சில விசயங்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்.

ஒரு பொருளைத் தள்ளுபடியில் தருகிறார்கள் என்றால் ஒரு விலையைக் குறித்து அந்த விலையிலிருந்துதானே தள்ளுபடி செய்து விற்கிறார்கள்.

அந்த விலையைக் கூட லேபிளில் குறித்து அதை × குறி போட்டு அடித்திருப்பார்கள் இல்லையா? அந்த விலைதான் குறித்த விலை. அதற்குக் கீழே ஒரு குறைக்கப்பட்ட விலையை அதாவது தள்ளுபடி போக ஒரு விலையைக் குறிப்பிட்டு இருப்பார்களே, அதுதான் விற்பனை விலை.

இந்தக் குறித்த விலையைச் சதவீதத்தோடு தொடர்புபடுத்தினால் 100 சதவீதம் ஆகும். இதிலிருந்துதான் 10 சதவீதம், 15 சதவீதம், 50 சதவீதம் என்று தள்ளுபடி செய்வார்கள்.

உதாரணத்துக்கு 10 சதவீதம் தள்ளுபடி என்றால் 100 சதவீதத்திலிருந்து 10 சதவீதத்தைக் கழித்து விட்டால் அதுதான் விற்பனை விலை அல்லவா!

ஆக விற்பனை விலையைச் சதவீதத்தோடு தொடர்புபடுத்த 100 லிருந்து தள்ளுபடி செய்யும் சதவீத்தைக் கழித்துக் கொள்ள வேண்டும் அல்லவா!

இவ்வளவுதான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்.

இப்போது தள்ளுபடி தொடர்பான ஒரு கணக்கைப் பார்த்து விடுவோம்.

ஒரு புடவையை 6% தள்ளுபடி செய்து ரூ. 940 ஒரு கடைக்காரர் விற்றால் அந்தப் புடவையின் குறித்த விலை என்ன?

இந்தக் கணக்கை எப்படிப் போடுவது? நேர் விகிதம் இருக்க பயமேன்?

நீங்கள் நேரடியாகப் போடுவதாக இருந்தாலும் சரிதான், அல்லது அட்டவணைப்படுத்திப் போடுவதாக இருந்தாலும் சரிதான். அதை உங்கள் விருப்பத்துக்கே விட்டு விடுகிறேன்.

அனைவருக்கும் புரிய வசதியாக முதலில் அட்டவணைப்படுத்திக் கொள்வோமா?

விலை

x

940

சதவீதம்

100

94

இந்த அட்டவணையில் நமக்குக் குறித்த விலை தெரியாது என்பதால் அதை x என வைத்துக் கொண்டுள்ளோம். ஆமாம், அதைத்தானே இந்தக் கணக்கில் நாம் கண்டுபிடிக்க வேண்டும். குறித்த விலையின் சதவீதம் 100 என்பதால் அதன் கீழே 100 ஐக் குறித்துள்ளோம்.

விற்பனை விலை ரூ. 940 எனக் கணக்கில் கொடுக்கப்பட்டிருப்பதால் அதை அப்படியே குறித்துக் கொண்டுள்ளோம். அதற்கான விகித சதவீதம் வேண்டும் அல்லவா! அது குறித்த விலையின் சதவீதமான 100 லிருந்து தள்ளுபடி சதவீத்தைக் கழித்து வருவது என்பதால் 100 – 6 = 94 எனக் குறித்துள்ளோம்.

இதெல்லாம் எங்களுக்குத் தெரியும் என்கிறீர்களா? இருப்பினும் ஒரு விளக்கம் கொடுத்து விடுவது நல்லதுதானே!

இனியென்ன? நேர் விகிதப்படி விகிதங்களைச் சமப்படுத்திக் குறுக்குப் பெருக்கல் செய்து விடையை அதாவது x இன் மதிப்பைக் கண்டுபிடிக்க வேண்டியதுதான்.

x / 100 = 940 / 94

94x = 940 × 100

94x = 94000

x = 94000 / 100

x = 1000

எனவே குறித்த விலை ரூ. 1000.

இந்த ஆயிரம் ரூபாய்க்கு 6% தள்ளுபடி செய்தால் என்ன வரும் என்று நீங்கள் நேர்விகித அட்டவணையை உருவாக்கிக் கண்டுபிடித்துப் பாருங்களேன். அல்லது நேரடியாகத்தான் கண்டுபிடித்துப் பாருங்களேன்.

அத்துடன் விற்பனை விலை தெரியவில்லை என வைத்துக் கொண்டு ரூ. 1000 குறித்த விலையுள்ள புடவையை 6% தள்ளுபடி செய்து விற்றால் விற்பனை விலை என்ன என்பதையும் கண்டுபிடித்து விற்பனை விலை சரியாக வருகிறதா என்பதையும் சோதித்துப் பாருங்களேன்.

இப்போதெல்லாம் எங்களுக்கு வீட்டுப்பாடம் போலக் கணக்குக் கொடுக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். கணக்கு என்றால் பயிற்சிதானே. நிறைய கணக்குகளைப் பயிற்சி செய்து பார்க்கும் போதுதானே நீங்களும் கணக்கில் வல்லவராக முடியும். அதற்காகத்தான்.

அடுத்தது என்ன என்கிறீர்களா?

வரி தொடர்பான கணக்குகளை எப்படி நேர் விகிதத்தைப் பயன்படுத்திச் செய்வது என்பதுதான்.

அடுத்து அதைப் பார்க்க தயாராக இருங்கள். அதையும் ஒரு கை பார்த்து விடுவோம்.

*****

No comments:

Post a Comment