சதவீதம் காண உதவும் நேர் விகிதம்
சதவீதம் என்றால் என்ன என்பது
குறித்து உங்களுக்குத் தெரியும்தானே? எந்த ஒரு மதிப்பையும் நூற்றுக்கு எவ்வளவு எனக்
கணக்கிடுவதுதான் சதவீதம்.
சதம் என்றால் நூறு என்பது
பொருள். வீதம் என்பது ஒவ்வொன்றுக்கும் தலா எவ்வளவு வரும் என்பதைக் குறிப்பது. ஆக சதவீதம்
என்பது ஒவ்வொரு நூறுக்கும் தலா எவ்வளவு வரும் எனக் கணக்கிடுவதுதான் சதவீதம்.
உதாரணத்துக்கு நீங்கள் ஒரு
மிதிவண்டியை ரூ. 2500 க்கு வாங்குவதாக வைத்துக் கொள்வோம். அதை நீங்கள் ரூ. 3000 க்கு
விற்பதாக வைத்துக் கொள்வோம். இப்போது உங்களுக்குக் கிடைத்திருக்கும் லாபம் ரூ. 500
அல்லவா!
இதே லாபம் நீங்கள் அந்த மிதிவண்டியை
100 க்கு வாங்கி விற்றிருந்தால் உங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும் என்ற வினாவை
எழுப்பினால் என்ன சொல்வீர்கள்?
100 என்பது கணக்கிட எளிதானது.
அதன் மடங்குகளில் நாம் எந்த எண்ணையும் மாற்றிக் கொள்ளலாம் என்பதால் நூற்றுக்கு எவ்வளவு
என்பதைக் கணக்கிட்டுக் கொண்டால் கணக்கீடுகளை எளிதாகச் செய்து கொள்ளலாம் என்பதன் அடிப்படையில்தான்
கணக்கிலும் நடைமுறை வாழ்விலும் சதவீதம் பயன்படுகிறது.
இப்போது மேலே உள்ள கணக்கிற்கு
வருவோம். ரூ. 2500 க்கு லாபம் ரூ. 500 என்றால் 100 க்கு லாபம் எவ்வளவு எனத் தெரிய வேண்டும்
என்றால் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் புரிந்து கொண்டீர்கள்தானே?
நேர் விகிதத்தைக் கொண்டு
எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்தானே!
நாம் 2500 லிருந்து 100 ஐ
நோக்கிச் செல்கிறோம் அதாவது குறைவை நோக்கிச் செல்கிறோம் என்றால் 500 லிருந்து நாம்
கண்டுபிடிக்க வேண்டிய நூற்றுக்கு எவ்வளவு என்பதின் x மதிப்பும் குறைவாகத்தானே இருக்கும்.
ஆக இங்கே ரூபாய் குறைய சதவீதமும்
குறையத்தானே செய்யும். ஆகவே இது நேர் விகிதம் என்பதில் உங்களுக்கு எந்தச் சந்தேகமும்
இருக்காது.
வேண்டுமானால் நாம் ரூபாய் / சதவீதம் என்கிற மாதிரியான அட்டவணையை
அமைத்துக் கொள்வோமே!
ரூபாய் |
2500 |
500 |
சதவீதம் |
100 |
x |
இப்போது இவ்விகிதம்
நேர் விகிதம் என்பதால் நாம் விகிதங்களைப் பின்னங்களாக்கிச் சமப்படுத்த வேண்டியதுதான்.
அதன்படி,
2500 / 500 = 100 / x
2500x = 500 ×100
2500x = 50000
x = 50000 / 2500
x = 20 என வருகிறதா? இதுதான்
ஒவ்வொரு நூறுக்கும் கிடைக்கும் லாபம். இதைத்தான் நாம் சதவீதம் என்கிறோம். அதாவது
20%.
ஒவ்வொரு நூறுக்கும் 20 ரூபாய்
லாபம் கிடைக்கும் என்றால் 2500 இல் இருக்கும் 25 நூறுகளுக்கும் 20 ரூபாய் லாபம் வீதம்
25 × 20 = 500 லாபம்தானே கிடைக்கும்?
ஆகா! எவ்வளவு எளிதாகக் கண்டுபிடித்து
விட்டோம் என்கிறார்களா? இப்படி சதவீதக் கணக்குகளில் நேர் விகிதத்தைப் பயன்படுத்தினால்
ரொம்ப எளிதாக விடை கண்டுபிடித்து விடலாம். இனிமேல் சதவீத கணக்குகள் என்றால் அந்தக்
கணக்குகளை நீங்கள் நேர் விகிதக் கணக்குகளா? எதிர் விகித கணக்குகளா? என்று கூட நீங்கள்
யோசிக்க வேண்டியதில்லை. கண்ணை மூடிக் கொண்டு நேர் விகிதக் கணக்குள் என்று முடிவு செய்து
கொண்டு கணக்குகளைப் போட்டு மிக எளிதாக நீங்கள் விடைகளைச் சொல்லலாம்.
அடுத்தாக வாங்கிய விலை, விற்ற
விலை தொடர்பான கணக்குகளிலும் சதவீதம் எப்படி பயன்படுகிறது எனப் பார்ப்போம்.
*****
No comments:
Post a Comment