Monday, 10 October 2022

பின்னுரையாக ஒரு முன்னுரை

பின்னுரையாக ஒரு முன்னுரை

எளிமையாகக் கணிதத்தை அணுகுவதற்கான அனைத்து அடிப்படைகளையும் இதுவரை நாம் பார்த்திருக்கிறோம். இவ்வளவுதான் அடிப்படைகள் என்று அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும் இந்த அடிப்படைகளைக் கொண்டு நீங்கள் உயர் கணிதத்தை நன்கு புரிந்து கொண்டு அணுக முடியும். அந்த அளவில் போதுமான அளவில் கணித அடிப்படைகளை நாம் பார்த்திருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதற்கு மேலும் அடிப்படையான கணித கருத்துகளும், புரிந்து கொள்வதற்கான விசயங்களும் இருக்கின்றனதான். ஒரு முதல் பாகம் என்ற அடிப்படையில் இவை போதும் என்றாலும் மேலதிக அடிப்படைகளையும் புரிதலுக்கு உதவும் விசயங்களையம் நாம் இரண்டாம் பாகத்தில் பார்ப்போம்.

அடுத்தாக நாம் பார்க்க வேண்டியது நன்றிகளைத்தான். இதுவரை படித்து அறிந்து கொண்ட உங்களுக்கு என் நன்றிகள்.

அத்துடன் நான் பலருக்கும் நன்றி கூற வேண்டும். அந்தப் பட்டியல் பெரியது. இருப்பினும் நான் குறிப்பாக இருவருக்குப் பெயர் குறிப்பிட்டு நன்றி சொல்ல வேண்டும்.

இதை நான் எழுதுவதற்கும் மற்றும் தொடர்ந்து எழுதுவதற்கும் அந்த இருவரும் முக்கியமானவர்கள்.

முதலாமவர் எனது நண்பர் தமிழரசனின் மகன் கபிலன்.

இரண்டாமவர் எனது இலக்கிய அண்ணனும் அன்புத் தோழருமான செ. சித்தார்த்தன்.

கபிலனுக்கு நான் கணிதம் கற்றுத் தர வேண்டும் தமிழரசனுக்கு மிகுந்த ஆவல். அந்த ஆவல் நிறைவேறாமல் பல காலம் அப்படியே கிடந்தது. இப்போதும் அப்படியேத்தான் கிடக்கிறது. இருவரும் சந்தித்துக் கொள்வதற்கான நேரம் அமையாமல் போனாலும் அந்த ஆவலை எப்படித் தீர்ப்பது என்ற யோசனையில் உருவானதுதான் நான் தொடர்ந்து எழுதி வந்த எளிய கணித அணுகுமுறை.

நான் கபிலனுக்காகத்தான் இதைத் தொடர்ந்து எழுதினேன். ஒருவேளை இந்த வலைதள வாய்ப்பு இப்போது இருப்பது போல இல்லையென்றாலும் நான் கடிதமாக எழுதி கபிலனுக்கு அனுப்பியிருப்பேன்.

கபிலனுக்காக எழுதத் துவங்கிய பிறகுதான் தெரிந்தது, பல பெற்றோர்களுக்கு இந்தத் தொடர் அவர்களின் பிள்ளைகளுக்கு எளிமையாகக் கணிதத்தை அணுகுவதற்கு உதவிய விசயம். அத்துடன் ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களுக்குக் கணிதத்தை எளிமையாகக் கொண்டு சேர்ப்பதற்கு இந்தத் தொடர் உதவியதாகக் கருத்துத் தெரிவித்தனர்.

இப்படி எழுதப் போவதாகத் தீர்மானித்து அந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்ட போது என் வெளிநாடு வாழ் நண்பர்கள் சிலர் தங்கள் பிள்ளைகளுக்காக இதை ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதன் காரணமாக தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுத வேண்டிய தேவை உண்டானது.

இதை எழுத ஆரம்பித்த பிறகு சில இடங்களில் நான் வளவளவென்றும் தொணதொணவென்றும் பேசிக் கொண்டு செல்கிறேனோ என்ற மயக்கம் எனக்கு ஏற்பட்டது.

அது தேவைதான் என்பதை அண்ணன் சித்தார்த்தன் தெளிவு செய்தார்கள். கணிதம் போன்ற Abstract Nature கொண்ட ஒன்றை அவ்வபோது தளர்த்திக் கொள்வதற்கும் நெகிழ்வாக எடுத்துச் சொல்வதற்கும் அந்த வளவள, தொணதொண ரொம்பவே உதவுவதாக அண்ணன் சித்தார்த்தான் சொன்னார்கள்.

அத்துடன் இத்தொடரின் ஒரு சில இடங்கள் ரொம்ப பிரமிப்பாகவும் ஆச்சரியம் ஊட்டுவதாகவும் குதூகலம் தருவதாகவும் சித்தார்த்தன் அண்ணன் குறிப்பிட்டார்கள்.

நான் தொடர்ந்து எழுதிக் கொண்டே வந்ததற்கு அண்ணன் தந்த ஊக்கம் காரணம். ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’ என்று சொல்வதை நான் ‘அண்ணன் உடையான் எழுத அஞ்சான்’ என்று சொல்வேன்.

கபிலன் என்ற பனிரெண்டு வயது நிரம்பிய சிறுவனை மனதில் வைத்து எழுதப்பட்ட தொடர் என்றாலும் இது அனைத்துத் தரப்பினரையும் பெரிதாக ஈரத்திருப்பதை அறியும் போது மகிழ்கிறேன்.

மீண்டும் ஒரு முறை கபிலனுக்கும் சித்தார்த்தனுக்கும் உங்களுக்கும் என்றென்றும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதைப் புத்தகமாகப் படிக்க விரும்புபவர்களுக்காக அமேசான் கிண்டிலிலும் வெளியிடுகிறேன்.  அமேசான் கிண்டில் மின் நூலுக்கான இணைப்பு : https://www.amazon.in/dp/B0BHL2G6X6/ref=sr_1_20?crid=XT6CSBPXEDRB&keywords=vikatabharathi...&qid=1665193287&qu=eyJxc2MiOiIxLjM3IiwicXNhIjoiMC4wMCIsInFzcCI6IjAuMDAifQ%3D%3D&sprefix=vikatabharathi...%2Caps%2C286&sr=8-20

எளிய கணித அணுகுமுறையை இனி தொடர்ச்சியாக எழுதாவிட்டாலும் அவ்வபோது எழுதும் யோசனை இருக்கிறது. ஆகவே அவ்வபோது இந்த வலைப்பூவின் முகவரிக்கு வருகை தந்து பாருங்கள் என்ற அழைப்பையும் இப்போதே விடுக்கிறேன்.

என்றும் அன்புடன்

விகடபாரதி

*****

No comments:

Post a Comment