வரி தொடர்பான கணக்குகளில் பயன்படும் நேர் விகிதம்
தள்ளுபடி தொடர்பான கணக்குகளுக்கு
நேர் எதிரானது என்று வரி தொடர்பான கணக்குகளைச் சொல்லலாம்.
அது எப்படி என்றுதானே கேட்கிறீர்கள்.
தள்ளுபடி தொடர்பான கணக்குகளில்
குறித்த விலையிலிருந்து தள்ளுபடியைக் கழிக்கிறோம் அல்லவா! வரி தொடர்பான கணக்குகளில்
குறித்த விலையிலிருந்து வரியைக் கூட்ட வேண்டும். அவ்வளவுதான் தள்ளுபடி கணக்குகளுக்கும்
வரி கணக்குகளுக்கும் உள்ள வித்தியாசம்.
தள்ளுபடி செய்த பிறகு குறித்த
விலையிலிருந்து விற்பனை விலை குறைந்திருக்கும் என்றால் வரி செலுத்திய பிறகு குறித்த
விலையிலிருந்து விற்பனை விலை கூடியிருக்கும்.
இதனால் குறித்த விலையைச்
சதவீதத்தோடு தொடர்புபடுத்தும் போது 100 ஆகவும் விற்பனை விலையை 100 லிருந்து வரி சதவீத்தைக்
கூட்டியும் தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக வரி சதவீதம்
10% என வைத்துக் கொண்டால் விற்பனை விலையைச் சதவீதத்தோடு தொடர்புபடுத்தும் போது 110
ஆக எடுத்துக் கொள்ள வேண்டும்.
வரி தொடர்பான ஒரு கணக்கைப்
பார்த்து விடுவோமா? அதை நேர் விகிதத்தைப் பயன்படுத்திப் போட்டு விடுவோமா?
ஒரு கடிகாரத்தின் விலை ரூ.
500. அதற்கு 18% வரி விதிக்கப்பட்டால் அதன் விற்பனை விலையைக் காண்க.
என்ன காண்போமா?
முதலில் அட்டவணையை உருவாக்கி
விடுவோமா?
விலை |
500 |
x |
சதவீதம் |
100 |
118 |
குறித்த விலை
500 என கணக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அப்படியே எடுத்துக் கொண்டுள்ளோம். அதன் சதவீதம்
100 என்பதை அதன் கீழே குறித்துள்ளோம்.
விற்பனை விலையைத்தான் காண
வேண்டும். அதை x எனக் குறித்துள்ளோம். அதன்
சதவீதம் என்று பார்த்தால் குறித்த விலையான 100 சதவீதத்திலிருந்து வரி சதவீதமான 18 சதவீதத்தைக்
கூட்டிக் கிடைப்பதால் 118 எனக் குறித்துள்ளோம். என்ன சரிதானா?
இனி என்ன செய்ய வேண்டும்
என்று உங்களுக்குத் தெரியும்தானே?
விகிதங்களைச் சமப்படுத்திக்
குறுக்குப் பெருக்கல் செய்து விடையை அதாவது x இன் மதிப்பைக் காண வேண்டும்தானே?
500 / 100 = x / 118
5 = x / 118
5 × 118 = x
590 = x
x = 590
வரிக்குப் பிந்தைய விற்பனை
விலை ரூ. 590.
நேர் விகிதத்தைப் பயன்படுத்தி
எவ்வளவு எளிதாகக் கண்டுபிடித்து விட்டோம் பார்த்தீர்களா?
இனியென்ன வழக்கம் போல, ரூ.
500 மதிப்புள்ள கடிகாரத்திற்கு 18% வரி என்றால் நேர் விகித முறையைப் பயன்படுத்தி வரி
எவ்வளவு வரும் எனக் கண்டுபிடியுங்களேன்.
மேலும் நேர் விகித முறையைப்
பயன்படுத்தி ரூ. 590 விற்பனை விலையுள்ள 18% வரி விதிக்கப்பட்ட கடிகாரத்தின் குறித்த
விலை என்ன என்று கண்டுபிடித்துப் பாருங்களேன். குறித்த விலை ரூ. 500 என வருகிறதா எனச்
சரிபார்த்து விடலாம் இல்லையா!
அதை எல்லாம் செம ஜோராகச்
செய்து விடுவோம் என்கிறீர்களா?
சரி, அடுத்து என்ன என்றுதானே
கேட்கிறீர்கள்.
கோணங்களைப் பற்றித் தெரிந்து
கொள்ளலாமா?
அது பற்றி எங்களுக்கு நன்றாகவே
தெரியும் என்கிறீர்களா? என்றாலும் அதில் புரிந்து கொள்ள சில விசயங்கள் இருக்கின்றன.
அதை மட்டும் அடுத்ததாகப் பார்த்து விடுவோம்.
*****
No comments:
Post a Comment