Sunday 2 October 2022

லாப நட்ட கணக்குகளுக்கு நேர் விகிதம்

லாப நட்ட கணக்குகளுக்கு நேர் விகிதம்

இப்படி ஒரு கணக்கைக் கருதிக் கொள்வோம்.

ஒரு நாற்காலியை ரூ. 540 க்கு விற்பதால் 8% லாபம் கிடைக்கிறது என்றால் அந்த நாற்காலியின் அடக்கவிலை என்ன?

இந்தக் கணக்கில் விலையும் சதவீதமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் கண்டுபிடிக்க வேண்டியது விலை அதாவது அடக்கவிலை.

நாம் இந்தக் கணக்கை நேர் விகித முறையில் போடப் போவதால் நமக்கு வேண்டிய இரண்டு மாறிகள் விலையும் சதவீதமும்தான்.

நமக்கு விற்பனை விலை கொடுக்கப்பட்டிருக்கிறது. அது ரூ. 540. இதைச் சதவீதமாகச் சொல்வதென்றால் எப்படிச் சொல்வது?

அதற்கு முன்பு அடக்கவிலையைச் சதவீதத்தில் சொல்ல வேண்டும் என்றால் அது எப்போதும் 100 தானே? அப்படியானால் விற்பனை விலையை அடக்க விலைச் சதவீதத்தோடு லாபச் சதவீதத்தையும் கூட்டித்தானே சொல்ல வேண்டும். அதாவது 100 + 8 = 108 சதவீதம் எனச் சொல்ல வேண்டும்தானே?

அது ஏன் 8 சதவீதத்தை 100 சதவீதத்தோடு கூட்டுகிறீர்கள் என்றால் கணக்கிலே லாபம் 8 சதவீதம் என்று சொல்லியிருக்கிறார்களே. அதை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம்.

லாபமாக இருந்தாலும் சரிதான், நட்டமாக இருந்தாலும் சரிதான் நாம் சதவீதத்தைக் கண்டுபிடிக்க அடக்கவிலைதான் அடிப்படை என்பதால் அடக்க விலையின் சதவீதம் எப்போதும் 100 தான் அல்லவா?

மேற்காணும் கணக்கில் லாபம் கிடைக்காமல் நட்டம் கிடைப்பதாகக் கொண்டால் நீங்கள் விற்பனை விலையை எப்படி சதவீதத்தில் அமைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

ஆம், சரிதான். அடக்க விலையான 100 சதவீதத்திலிருந்து 8 சதவீதத்தைக் கழித்து 92 சதவீதம் என்றுதானே வைத்துக் கொள்வீர்கள்.

ஆக, அடக்க விலை - விற்பனை விலை கணக்குகளில் அடக்க விலையைச் சதவீதத்துக்குச் சமப்படுத்தும் போது 100 எனவும் விற்பனை விலையைச் சதவீதத்துக்குச் சமப்படுத்தும் போது லாபம் என்றால் 100 உடன் லாப சதவீதத்தைக் கூட்டியும், நட்டம் என்றால் 100 லிருந்து நட்ட சதவீத்தைக் கழித்தும் எடுத்துக் கொள்ள வேண்டும்தானே?

அவ்வளவுதான் விசயம்.

இப்போது மேற்கண்ட கணக்கிற்கு அட்டவணை அமைத்துக் கொள்வோமா? என்ன இனியும் அட்டவணையா? நாங்கள் நேரடியாக விகிதத்தை உருவாக்கி அதைச் சமப்படுத்திக் குறுக்குப் பெருக்கல் செய்து மதிப்பைக் கண்டுபிடித்து விடுவோம் என்கிறீர்களா?

அப்படித்தான் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வளவு விரைவாக விடையைக் கண்டுபிடிக்க இந்த நேர் விதிக முறை மிகவும் உதவக் கூடியது.

இருப்பினும் அட்டவணையை அமைத்துக் கொண்டு அதை நாம் இங்கே செய்வது யாருக்கும் புரியாமல் போய் விடக் கூடாது என்பதற்காகத்தான்.

விலை

x

540

சதவீதம்

100

108

என்ன சரிதானே?

அடக்க விலைதானே நாம் கண்டுபிடிக்க வேண்டும். அது 100 சதவீதத்துக்குச் சமமான விகித விலைதானே. அதனால் கண்டுபிடிக்க வேண்டிய அந்த அடக்க விலையை நாம் x என 100 சதவீதத்திற்கு மேலே வைத்துக் கொண்டுள்ளோம்.

540 என்பது லாபத்துடன் விற்ற விலை என்பதால் லாப சதவீத்தோடு கூட்டி 108 சதவீதத்துக்கு விகிதப்படுத்தி வைத்துள்ளோம்.

இப்போது நேர் விகிதகக் கணக்கு முறையில்

x / 100 = 540 / 108

x = (540 ×100) / 108

x = 500

ஆக அடக்க விலை என்பது ரூ. 500.

இந்த ரூ. 500 க்கு நீங்கள் நேர் விகித முறையில் 8 சதவீதம் லாபம் எவ்வளவு எனக் கணக்கிட்டுப் பாருங்கள். அத்துடன் அதன் விற்பனை விலை ரூ. 540 எனக் கொடுக்கப்பட்டிருந்தாலும் நீங்கள் ரூ. 500 மதிப்புள்ள நாற்காலியை 8 சதவீத லாபத்தில் விற்றால் விற்பனை விலை என்ன என்பதை விடை காண வேண்டிய கணக்காகக் கருதிக் கொண்டு அதன் விடை என்ன என்பதைக் கண்டுபிடித்துப் பாருங்களேன். நாம் தீர்வு கண்ட கணக்கின் விடை சரிதானா என்பதை நாமே கண்டுபிடித்து விடலாம்தானே?

அட நேர் விகிதத்தைப் பயன்படுத்தி இவ்வளவு வித்தைகள் காட்டமுடியுமா என்கிறீர்களா? ஆமாம், பிறகு நீங்கள் நேர் விகிதத்தைச் சாதாரணமாகவா நினைத்து விட்டீர்கள்?

மேலும் நாம் தள்ளுபடி கணக்குகளுக்கும் நேர் விகிதத்தைப் பயன்படுத்தலாம். அதை அடுத்துக் காண்போம்.

*****

No comments:

Post a Comment