Tuesday, 31 December 2024

ஒரு கோடி ரூபாய் எப்படி வருமானம் தருகிறது?

ஒரு கோடி ரூபாய் எப்படி வருமானம் தருகிறது?

உங்களிடம் ஒரு கோடி ரூபாய் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். அத்தொகை எப்படியெல்லாம் வருமானம் தரும் என்பதை இப்போது காண்போமா?

நீங்கள் ஒரு கோடியை 8 சதவீதம் வருமானம் தரும் திட்டத்தில் முதலீடு செய்தால் மாதத்திற்கு 66,666 வருமானம் தரும். ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம் தரும்.

அதுவே ஒரு கோடியை 10 சதவீதம் வருமானம் தரும் திட்டத்தில் முதலீடு செய்தால் மாதத்திற்கு 83,333 வருமானம் தரும். ஆண்டுக்கு 10 லட்சம் வருமானம் தரும்.

அதுவே ஒரு கோடியை 12 சதவீதம் வருமானம் தரும் திட்டத்தில் முதலீடு செய்தால் மாதத்துக்கு 1 லட்சம் வருமானம் தரும். ஆண்டுக்கு 12 லட்சம் வருமானம் தரும்.

இதைக் கொண்டு வருமானம் இல்லாமல் நீங்கள் வாழ முடியும். ஆனால் இந்த ஒரு கோடியைச் சேர்க்கும் வரை நீங்கள் ஒரு கோடிக்காக வேலை செய்துதான் ஆக வேண்டும்.

இதைத்தான் வள்ளுவர், “முதல் இலார்க்கு ஊதியம் இல்லை” (குறள், 449) என்கிறார்.

எவ்வளவு நுட்பமாகச் சொல்கிறார் பாருங்களேன்!

PPF, EPF, NPS எது சிறந்தது?

PPF, EPF, NPS எது சிறந்தது?

பொது சேமநல நிதி (Public Provident Fund),

பணியாளர் சேமநல நிதி (Employee’s Provident Fund),

தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme)

ஆகிய மூன்று திட்டங்களில் ஒருவர் வருங்காலத்திற்காக முதலீடு செய்யலாம். இந்த மூன்று திட்டங்களில் எதில் முதலீடு செய்வது சிறப்பானது? அதை அறிந்து கொள்வதற்குப் பின்வரும் அட்டவணை உங்களுக்கு உதவியாக இருக்கும்.

PPF

EPF

NPS

கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

15 சதவீதம் மட்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.

பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

பழைய வருமான வரி முறையில் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் வரை வரிச்சலுகை உள்ளது. புதிய வருமான வரி முறையில் இல்லை.

பழைய வருமான வரி முறையில் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் வரை வரிச்சலுகை உள்ளது. புதிய வருமான வரி முறையில் இல்லை.

பழைய வருமான வரி முறையில் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் வரை வரிச்சலுகை உள்ளது. புதிய வருமான வரி முறையிலும் உள்ளது.

மத்திய அரசு திட்டம் என்பதால் முதலீட்டு அபாயம் இல்லை.

மத்திய அரசு திட்டம் என்பதால் முதலீட்டு அபாயம் இல்லை. 15 சதவீதம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டாலும் அதற்கான முதலீட்டு அபாயத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது.

பங்கு மற்றும் கடன் பத்திர சந்தையைச் சார்ந்த முதலீட்டு அபாயங்களுக்கு உட்பட்டது.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி வீதம் குறித்து அரசு அறிவிக்கிறது.

ஆண்டுக்கு ஒரு முறை வட்டி வீதம் குறித்து அரசு அறிவிக்கிறது.

முதலீட்டு வளர்ச்சி என்பது பங்குச் சந்தையைச் சார்ந்தது.

தற்போதைய ஆண்டு வட்டி 7.1 சதவீதமாக உள்ளது.

தற்போயைத ஆண்டு வட்டி 8.25 சதவீதமாக உள்ளது.

12 சதவீதத்துக்கு மேல் வருமானம் கிடைக்கலாம். அது பங்குச் சந்தையின் செயல்பாட்டைப் பொருத்தது.

15 ஆண்டு காலத் திட்டம்.

பணியாளரின் பணி ஓய்வுக் காலம் வரை அல்லது பணியிலிருந்துவிலகும் வரையிலான திட்டம்.

60 வயது வரையிலான திட்டம்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு முழு பணத்தையும் எடுத்துக் கொள்ள முடியும்.

பணி நிறைவுக்குப் பிறகு முழுத் தொகையையும் எடுத்துக் கொள்ள முடியும்.

60 வயதில் பணி ஓய்வு பெறும் போது 60 சதவீதத் தொகை வழங்கப்படும். மீதி 40 சதவீதத் தொகை ஓய்வூதியம் வழங்க எடுத்துக் கொள்ளப்படும்.

மேற்படி அட்டவணையைக் கொண்டு உங்களது வருங்காலத்துக்கு ஏற்ற சிறந்த திட்டம் எது என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். இத்திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் முதலீடு செய்வதை விட, இரண்டிலோ அல்லது மூன்றிலும் கூட நீங்கள் விரும்பினால் முதலீடு செய்து கொள்ளலாம்.

தற்போது இம்மூன்று திட்டங்கள் பற்றியும் சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால்,

பாதுகாப்பான நிலையான வருமானத்தை விரும்புவோருக்கு PPF மற்றும் EPF ஏற்றதாக இருக்கும். இதில் வட்டி மூலம் கிடைக்கும் முதலீட்டுப் பெருக்கம் குறைவாக அதே நேரத்தில் நிலையானதாக இருக்கும்.

முதலீட்டில் அபாயத்தை எதிர்கொள்ள விரும்புவோருக்கு NPS திட்டம் ஏற்றதாக இருக்கும். இதில் பங்குச் சந்தையின் நீண்ட கால செயல்பாட்டின் அடிப்படையில் முதலீட்டுப் பெருக்கம் கூடுதலாகப் அமைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. எனினும் இக்கூடுதல் முதலீட்டுப் பெருக்கம் என்பது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.

மூன்றிலும் கலந்து முதலீடு செய்யும் போது முதலீட்டு அபாயம் பரவலாக்கப்படுவதுடன், கூடுதல் முதலீட்டுப் பெருக்கம் பெறவும் வாய்ப்புள்ளது.

*****

2025 ஆம் ஆண்டின் எண்ணியல் சிறப்புகள்!

2025 ஆம் ஆண்டின் எண்ணியல் சிறப்புகள்!

இன்று 2025 ஆம் வருடம் பிறக்கிறது.

2025 என்ற இந்த ஆண்டின் எண்ணில் பல சிறப்புகள் உள்ளன.

இது ஒரு வர்க்க எண். அதாவது 45 × 45 = 452 = 2025.

அத்துடன் 52 × 92 இன் மதிப்பும் 2025.

அது மட்டுமில்லாது 402 + 202 + 52 என்கிற மூன்று வர்க்க எண்களின் கூடுதலும் 2025.

மேலும் 13 + 23 + 33 + 43 + 53 + 63 + 73 + 83 + 93 என ஒன்றிலிருந்து ஒன்பது வரையுள்ள எண்களின் கனங்களின் கூடுதலாக அமையும் சிறப்பும் 2025க்கு உள்ளது.

ஆண்டுகளில் இதற்கு முன் வர்க்க எண்ணாக அமைந்த ஆண்டு 1936. அதாவது 1936 என்பது 44இன் வர்க்கமாக அமைவதாகும். அதைத் தொடர்ந்து தற்போது வர்க்க எண்ணாக அமையும் ஆண்டு 2025 என்பது குறிப்பிடத்தக்கது.

2025 ஆம் ஆண்டின் இலக்கங்களின் கூட்டுத்தொகை 9. எனவே இந்த ஆண்டின் எண்ணானது மூன்றாலும், ஒன்பதாலும் மீதியின்றி வகுபடும். மேலும் இந்த ஆண்டு 5 மற்றும் 25 ஆகிய எண்களாலும் மீதியின்றி வகுபடும். 

இத்துணை கணித எண்ணியல் சிறப்புமிக்க ஆண்டாக 2025 ஆண்டு அமைவதை இந்த ஆண்டின் துவக்கத்தில் எண்ணிப் பார்ப்பது சிறப்புதானே!

Monday, 30 December 2024

திருக்குறள் - தகவல் துளிகள்!

திருக்குறள் - தகவல் துளிகள்!

திருக்குறளில் இடம் பெற்றுள்ள இரு மலர்கள் எவை?

அனிச்சம், குவளை.

 

திருக்குறளில் இடம் பெற்றுள்ள ஒரே பழம் எது?

நெருஞ்சிப் பழம்.

 

திருக்குறளில் இடம் பெற்றுள்ள ஒரே விதை எது?

குன்றிமணி.

 

திருக்குறளில் இடம் பெற்றுள்ள இரண்டு மரங்கள் எவை?

பனை, மூங்கில்.

 

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்து எது?

னி.

 

திருக்குறளில் ஒரே குறளில் அதிக முறை பயன்படுத்தப்பட்டுள்ள சொல் எது?

பற்று.

 

திருக்குறளில் ஒரே முறை மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ள இரு எழுத்துகள் எவை?

ளீ, ங.

 

திருக்குறளில் இடம் பெறாத இரண்டு சொற்கள் எவை?

தமிழ், கடவுள்.

 

நரிக்குறவர்கள் பேசும் வக்ரபோலி மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்தவர் யார்?

கிட்டு சிரோன்மணி.

 

‘திருவள்ளுவர் திடுக்கிடுவார்’ என்ற நூலை எழுதியவர் யார்?

நாமக்கல் வெ. இராமலிங்கம்.

 

‘திருக்குறள் உரை விபரீதம்’ என்ற நூலை எழுதியவர் யார்?

சாமி. தியாகராஜன்.

 

திருவள்ளுவமாலை தொகுக்கப்பட்ட காலம் எது?

11 ஆம் நூற்றாண்டு.

 

திருவள்ளுவமாலை பாடிய புலவர்களின் எண்ணிக்கை எத்தனை?

53.

 

திருக்குறளைத் திருத்த ஒப்புக் கொள்ளாது கோபப்பட்ட தமிழறிஞர் யார்?

பூவாளூர் தியாகராஜ செட்டியார்.

 

தவறான திருக்குறள் பிரதியை விலை கொடுத்து வாங்கி தீயிலிட்டவர் யார்?

பாண்டித்துரை தேவர்.

 

திருக்குறளை ஆங்கிலத்தில் முழுமையாக மொழி பெயர்த்த ஜி.யு. போப் பிறந்த நாடு எது?

கனடா.

 

ஜி.யு.போப் மொழிபெயர்த்த திருக்குறள் யாருடைய நூலைத் தழுவியது?

பரிமேலழகர் உரையைத் தழுவி சரவணப் பெருமாள் வெளியிட்ட நூல்.

 

டால்ஸ்டாய் அடிக்கடி மேற்கோள் காட்டிய குறட்பாக்கள் யாவை?

1) சிறப்பீனும் செல்வம் பெறினும் (குறள், 311)

2) செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்த பின் (குறள், 313)

 

பெர்னாட்சா அடிக்கடி மேற்கோள் காட்டிய குறள் எது?

கொல்லான் புலானை மறுத்தானை (குறள், 260)

 

இங்கர்சால் அடிக்கடி மேற்கோள் காட்டி குறள் எது?

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் (குறள், 423)

 

ஜெர்மனியின் ஸ்கோபன்ஹவர் வியந்த குறள் எது?

மக்களே போல்வர் கயவர் (1071)

*****

NMMS – 2025 தேர்வு குறித்த அறிவிப்பு

NMMS – 2025 தேர்வு குறித்த அறிவிப்பு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வானது 22.02.2025 (சனிக் கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு குறித்து கீழே காண்க. 


Sunday, 29 December 2024

நீட் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் - 2025 New NEET Syllabus - 2025

நீட் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் - 2025

New NEET Syllabus - 2025

2025 ஆம் ஆண்டிலிருந்து மருத்துவ இளநிலைத் தகுதித்தேர்வுக்குப் புதிய பாடத்திட்டம் பின்பற்றப்பட உள்ளது. புதிய பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://www.nmc.org.in/MCIRest/open/getDocument?path=/Documents/Public/Portal/LatestNews/neetUG2025.pdf

 

திருக்குறளின் சிறப்புகள்

திருக்குறளின் சிறப்புகள்

ஒன்றா?

இரண்டா?

திருக்குறளின் சிறப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். அறிஞர் பெருமக்கள் திருக்குறளின் சிறப்புகளைப் பலவிதமாக விதந்தோதுகின்றனர்.

இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை

மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்

மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் என்ற வாசகம் திருக்குறளின் சிறப்பை உணர்த்தும்.

திருவள்ளுவர் பிறந்தது கி.மு. 31 என்று மறைமலையடிகள் தலைமையில் அறிஞர்கள் கூடி முடிவெடுத்தனர். திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிட நடப்பு ஆண்டோடு 31 ஐக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

திருக்குறளுக்கு முதன் முதலில் இசையமைப்பு செய்து, இறை வணக்கப் பாடலாகப் பாடியவர் தண்டபாணி தேசிகர்.

1730 இல் திருக்குறளை முதன் முதலில் லத்தீனில் மொழி பெயர்த்தவர் வீரமா முனிவர். இதுவே திருக்குறளின் முதல் ஐரோப்பிய மொழிபெயர்ப்பு ஆகும். வீரமான முனிவர் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலை மட்டுமே மொழிபெயர்த்தார். இன்பத்துப் பாலை மொழிபெயர்க்கவில்லை. அவர் திருக்குறளை,

இருளிலே வீசும் விண்மீன்

பாலைவனத்தில் பூத்த அழகு மலர்

அறியாமையை அகற்றும் ஒளிச்சுடர்

உலகிற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் எனச் சிறப்பிக்கிறார்.

1794 இல் ஆங்கிலத்தில் முதன் முதலில் மொழி பெயர்த்தவர் கிண்டர்ஸ்லி. திருக்குறளை ஆங்கிலத்தில் முழுமையாக மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப்.

உலகில் அதிக மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. 107 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறளின் மூல ஒலைச்சுவடியைக் கண்டெடுத்தவர் கந்தப்பன். இவர் அயோத்திதாச பண்டிதரின் பாட்டனார் ஆவார்.

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் 1812 இல் அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசப் பண்டிதர். மொழிபெயர்க்கப்படாமல் தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூல் என்ற சிறப்பு திருக்குறளுக்கு உண்டு.

பெசண்ட் நகர் உ.வே.சா நூலகத்தில் உள்ள 16 ஆம் நூற்றாண்டு ஓலைச்சுவடி திருக்குறள் மூலத்திலிருந்து படியெடுக்கப்பட்ட கடைசி ஓலைச்சுவடி ஆகும். இதுவே திருக்குறளுக்கு உள்ள உலகின் பழமையான ஓலைச்சுவடி ஆகும்.

ரஷ்ய கிரெம்ளின் மாளிகையின் குண்டு துளைக்காத பாதுகாப்பு அறையில் உள்ள உலகின் தலைசிறந்த புத்தகங்களுள் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.

விக்டோரியா மகாராணி அரண்மனை நூலகத்திலும் திருக்குறள் இடம் பெற்றுள்ளது.

திருக்குறள் ஒலித்த பிறகே தமிழ்நாடு சட்டமன்ற அவை நடவடிக்கைகள் தொடங்குகின்றன.

மேலும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரைச் சிறப்பிக்கும் வகையில், திருநெல்வேலியில் உள்ள ஆசியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலத்தின் பெயர் திருவள்ளுவர் மேம்பாலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

திருக்குறளைச் சிறப்பிக்கும் வகையில் கன்னியாகுமரி – புதுடெல்லி விரைவுத் தொடர்வண்டியின் பெயர் திருக்குறள் விரைவுத் தொடர்வண்டி எனச் சூட்டப்பட்டுள்ளது.

வள்ளுவத்தின் சிறப்பைப் பறைசாற்றும் வகையில் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை 2000 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

திருக்குறளின் பாதிப்பால் ஆல்பர்ட் சுவைட்சர், பெர்னாட்ஷா போன்றோர் புலால் மறுப்பைத் தங்கள் வாழ்க்கையில் இறுதி வரை பின்பற்றினர்.

ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் திருக்குறளின் மீது பெருமதிப்பு கொண்டிருந்தார். அவரே காந்தியடிகளுக்குத் திருக்குறளை அறிமுகம் செய்தார். திருக்குறளைப் படிப்பதற்காகவே காந்தியடிகள் தமிழ் பயில விரும்பினார்.

*****

 

 

Saturday, 28 December 2024

நிர்வாகத்தில் அறிவு மற்றும் சமயோசிதத்தின் முக்கியத்துவம்!

நிர்வாகத்தில் அறிவு மற்றும் சமயோசிதத்தின் முக்கியத்துவம்!

நிர்வாகத்தில் அறிவும் சமயோசிதமும் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை விளக்கும் சம்பவம் ஒன்றை இங்கு காண்போம்.

டாட்டா ஸ்டீல் தலைவராக ருச்சி மோடி இருந்த சமயம்.

அப்போது கழிவறைத் தொடர்பான பிரச்சனை ஒன்று அவரிடம் வந்தது.

அதிகாரிகளின் கழிவறைகள் தூய்மையாகவும், தொழிலாளர்களின் கழிவறைகள் தூய்மையற்றும் இருந்தன.

இந்தப் பிரச்சனையைச் சரி செய்ய எத்தனை நாட்களாகும் என்று அதிகாரிகளிடம் கேட்டார் ருச்சி மோடி. அதிகாரிகள் ஒரு மாத காலம் ஆகும் என்றனர்.

ருச்சி மோடி அதை ஏற்கவில்லை. உடனடியாகச் சரி செய்ய வேண்டிய பிரச்சனைக்கு எதற்கு ஒரு மாத காலம் என்று கேட்டார்.

அத்துடன் நிற்காமல், அவர் உடனடித் தீர்வை யோசித்துச் செயல்படுத்தினார்.

அதிகாரிகளின் கழிவறை என்று எழுதப்பட்ட போர்டைத் தொழிலாளர்களின் கழிவறை என்றும் தொழிலாளர்களின் கழிவறை என்று எழுதப்பட்ட போர்டை அதிகாரிகளின் கழிவறை என்றும் மாற்ற சொன்னார். இந்த மாற்றத்தை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மாற்றி மாற்றி செய்யுமாறு ஆணையிட்டார். அன்றே இந்தப் பிரச்சனை தீர்ந்தது. அன்றிலிருந்து அதிகாரிகளின் கழிவறைகளைப் போலவே தொழிலாளர்களின் கழிவறையும் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டது. ஏனென்றால் அன்றிலிருந்து தொழிலாளர்களின் கழிவறைகளைத்தானே அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும். இதுதான் தங்கள் கழிவறை என்று நினைத்து அதை மட்டும் தூய்மையாகப் பராமரிக்க நினைத்தால் அடுத்த பதினான்காவது நாள் அவர்கள் தொழிலாளர்களின் கழிவறைகளுக்கு மாறியாக வேண்டும். ஆகவே இப்போது அனைத்துக் கழிவறைகளையும் சரிசமமாகக் கருதி தூய்மையாகப் பராமரிப்பதைத் தவிர அதிகாரிகளுக்கு வேறு வழியில்லை. அதனால், அதற்குப் பின் கழிவறைத் தொடர்பான பிரச்சனை டாட்டா ஸ்டீல் நிறுவனத்தில் எழவில்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அறிவும் சமயோசிதமும் நிறைந்த நிர்வாகத் திறன் பெரிதும் உதவக் கூடியது என்பதை இச்சம்பவம் நிரூபிக்கிறது அல்லவா!

இத்தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இது போன்ற பயனுள்ள தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி. வணக்கம்.

******

Friday, 27 December 2024

பண மோசடிகளின் பல வகைகள்!

பண மோசடிகளின் பல வகைகள்!

நம்ப முடியாத லாபம் குறித்த தகவல்கள் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மட்டுமல்லாது சமீப காலமாகச் சமூக வலைதளங்களிலும் பகிரப்படுகின்றன. இவற்றின் நோக்கம் ஏமாற்றிப் பணம் பறிப்பதே. பொதுவாக சமூக வலைதளங்கள் மூலம் பகிரப்படும் பண மோசடிகளை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்.

1. ‘இன்சைடர் டிப்’ மோசடி :

விரைவில் விலை உயரப் போகும் பங்குகள் பற்றிய ரகசிய தகவலை அளிப்பதாக வரும் குறுஞ்செய்திகள், வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் தகவல்கள் இவ்வகையினவை. அப்படி லாபம் தரப் போகும் பங்கு பற்றி உங்களுக்கு ஏன் அவர் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று யோசியுங்கள். அதைப் பயன்படுத்தி அவரே லாபம் சம்பாதிக்கலாமே. ஆகையால் இது எத்தகைய பெரிய மோசடி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

2. உத்திரவாத வருமான மோசடி :

பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தால் ஒரே ஆண்டில் ஒரு லட்சம் திரும்பப் பெறலாம் என்பன போன்றவை இவ்வகை மோசடிகளைச் சேர்ந்தவை. இது போன்ற நம்ப முடியாத அளவுக்கு லாபம் தரும் திட்டங்கள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி மோசடிகளைச்  சேர்ந்தவையே.

3. போலி நிபுணர் மோசடி :

பங்குச் சந்தைகளில், கிரிப்டோ சந்தைகளில், மியூட்சுவல் பண்டுகளில், ரியல் எஸ்டேட்டுகளில் நிபுணர்கள் என்று கூறிக் கொண்டு உங்களை முதலீடுகளைச் செய்யச் சொல்லி ஏமாற்றுவது இவ்வகை மோசடியாகும். ஆரம்பத்தில் இலவசமாக ஆலோசனைகளைத் தருவது போலத் தந்து துவக்கத்தில் லாபத்தைக் காட்டி, போகப் போக ஆலோசனைக் கட்டணம் என்ற பெயரில் மிகப் பெரிய தொகையை வாங்கிக் கொள்வதுடன் உங்கள் முதலுக்கே மோசம் தரும் ஆலோசனைகளால் உங்களை நிதி இழப்பு அபாயத்தில் தள்ளி விட்டு அடுத்த வாடிக்கையாளரை ஏமாற்றச் செல்வது இவ்வகை மோசடியாளர்களின் உத்தியாகும்.

4. உடனே வாங்கத் தூண்டும் மோசடி :

இந்த அரிய வாய்ப்பு ஒரு மணி நேரத்துக்கு மட்டுமே என்று சொல்லி உங்களை வாங்கத் தூண்டுவார்கள். இதன் மூலம் போலியான அழுத்தத்தை உருவாக்கி ஒன்றுக்கும் உபயோகமே இல்லாத பொருட்களை வாங்க வைத்து நிதி இழப்புகளை ஏற்படுத்தி விடுவார்கள். உபயோகமற்ற பொருட்களை உங்கள் தலையில் கட்டுவதே இவ்வகை மோசடியாகும்.

5. பொன்சி மோசடி :

புதிதாக வரும் முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைத் திரட்டி முந்தைய முதலீட்டாளர்களுக்கு வருமானமாகத் தந்து மக்களிடையே லாபத்தின் நம்பிக்கையைப் போலியாக உருவாக்குவதுதான் பொன்சி மோசடித் திட்டமாகும். இது போன்ற திட்டங்கள் ஒரு கட்டத்தில் மோசடி என்று அம்பலமாகி நிதி இழப்புகளை ஏற்படுத்தி விடும்.

இது போன்ற மோசடிகளில் சிக்காமல் எப்படித் தப்பிப்பது?

எந்த ஒரு முதலீட்டுத் திட்டத்திலும் நிச்சய வருமானம் 12 சதவீதத்துக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. அதைத் தாண்டி 20 சதவீதம், 30 சதவீதம் நிச்சய வருமானம் என்று சொன்னால் நீங்கள் எச்சரிக்கையாக வேண்டும்.

முதலீட்டு விசயத்தில் எப்போதும் அவசரப்படாமல் நிதானமாக இருக்க வேண்டும். உங்களை யாரும் அவசரப்படுத்தினால் நீங்கள் எச்சரிக்கையாக வேண்டும்.

எந்த முதலீட்டுப் பரிந்துரையாக இருந்தாலும் நீங்களே ஒரு முறை மதிப்பாய்வு செய்து கொள்ளுங்கள். விவரங்களின் நம்பகத் தன்மையை ஆராயுங்கள்.

உங்களுடைய வங்கி விவரங்கள், ஆதார் விவரங்கள், PAN விவரங்கள் போன்றவற்றை யாருடனும் தேவையில்லாமல் பகிராதீர்கள்.

முதலீடு செய்யும் போது நம்பகமான இணையதளங்கள், செயலிகளைப் பயன்படுத்துவது முக்கியம்.

சமூக வலைதளங்களில் வரும் தேவையற்ற இணைப்புகளை ஒரு போதும் பின்தொடர வேண்டாம்.

பங்குக் குறிப்புகள் என்று வரும் தகவல்களை ஒரு போதும் நம்ப வேண்டாம்.

முதலீட்டுக் கல்விக்கான வழிமுறைகள் :

இந்திய பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு வாரியமான செபியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://investor.sevi.gov.in என்பதிலிருந்து உங்களுக்கான முதலீட்டுக் கல்வியைப் பயிலத் துவங்குங்கள்.

பெஞ்சமின் கிரகாம் எழுதிய The Intelligent Investor, பீட்டர் லிஞ்ச் எழுதிய One Up On Wall Street போன்ற புத்தகங்களைப் படியுங்கள்.

பண மோசடிகளிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள். மன மகிழ்வோடு வாழுங்கள்.

இத்தகவல்கள் உங்களுக்குப் பயனள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற பயனுள்ள தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி! வணக்கம்!

*****

Thursday, 26 December 2024

பயத்தை வெல்லுங்கள்! உலகை வெல்லுங்கள்!

பயத்தை வெல்லுங்கள்! உலகை வெல்லுங்கள்!

ஏன் பயத்தை வெல்ல வேண்டும் தெரியுமா?

இலக்குகளை அடைய திறமையின்மை ஒருபோதும் காரணமாக இருப்பதில்லை. நம்பிக்கையின்மைதான் காரணமாக இருக்கிறது.

இந்த நம்பிக்கையின்மையை உருவாக்கும் எதிரி பயம்தான்.

எனவே,பயத்துடன் சண்டையிட்டு அதை வெல்லுங்கள்.

எதற்காகப் பயப்படுகிறோம்?

சரியான முடிவை எடுக்காமல் போய் விடுவோமோ, வாழ்க்கையில் தோல்வி அடைந்து விடுவேமோ என்றெல்லாம் பயப்படுகிறது.

ஒரு வேளை தோற்று விட்டால் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்த உலகத்தை எதிர்கொள்வது, மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் நினைத்துப் பயப்படுகிறோம்.

ஆனால் நீங்கள் பயப்படவே வேண்டியதில்லை.

நீங்கள் வாழும் உலகில் உங்களுடைய எதிரியைப் பற்றியும், உங்களைப் பற்றியும் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தால் நீங்கள் செய்யப் போகும் சண்டையின் முடிவு எப்படி இருக்குமோ என நீங்கள் பயப்பட வேண்டியதில்லை.

ஆகவே, நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள்.

ஏனென்றால்,

பயம் என்பது நம் வாழ்க்கையை ஓர் அனுபவமாகப் பார்த்து வாழ விடாமல், நமக்குள் ஒரு போர்க்களத்தை உருவாக்கி விடுகிறது. ஒரு காலத்தில் பயம் என்பது நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் விசயமாக இருந்தது. இன்றைக்கு பயம் நம்முடைய சுதந்திரத்துக்குத் தடை போடும் எதிரியாக உருவாகி விட்டது.

இதனாலேயே இந்தத் தடைகளை எதிர்கொள்ளும் பலரும் சவால்களை எதிர்கொள்ளும் தைரியத்தை இழந்து எந்த ஒரு காரியத்தையும் இறுதி வரை செய்து முடிக்காமல் பாதியிலிலேயே கைவிட்டு விடுகின்றனர்.

நீங்களும் அப்படி எதையும் கைவிட்டு விடக் கூடாது இல்லையா?

வாழ்க்கையில் நாம் ஓரளவு வெற்றி கண்ட பின்னும் கூட நாம் தகுதியான மனநிலையில் இல்லாவிட்டால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஏனென்றால் நம்முடைய மனம் சரியாக இல்லாவிட்டால் நமக்குத் திருப்தி என்பது கிடைக்காது. இன்னும் சொல்லப் போனால் இந்த உலகில் நிறைய  பேர் அபரிமிதமான திறமையுடன் நல்ல குணங்களுடன் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் மனத்திருப்தி இல்லாமலேயே வாழ்கிறார்கள்.

நீங்களும் அப்படி மனத்திருப்தி இல்லாமலேயே வாழலாமா?

உங்கள் வாழ்க்கையையே பாருங்கள். உங்கள் திறமைக்கேற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாலுமே என்னடா இந்த வாழ்க்கை என்ற எண்ணம் அவ்வபோது வந்து போகிறதா? அப்படி வந்து போனால் அது சரியான வாழ்க்கை இல்லை.

அப்படியானால், சரியான வாழ்க்கையை எப்படி வாழ்வது?

பயமே சாதனைகளைச் செய்ய விடாமல் தடுக்கிறது. இலக்குகளையும் கனவுகளையும் அடைவதற்கான தடைகளை உருவாக்குகிறது. இதனாலேயே எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவது என்பது சிலருக்கு மட்டுமே உரித்தானது என்று நினைத்துக் கொள்கிறோம்.

வாழ்க்கை என்பது நாம் எடுக்கும் முடிவுகளால் ஆனது எனில் பயந்து செயலற்றுக் கிடப்பதும் நாம் எடுக்கும் முடிவுதானே?

பயத்தை எதிர்கொள்ள நாம் மற்றவர்களை வழிநடத்திச் செல்ல வேண்டும். யாரும் நம்மை வழிநடத்திச் செல்ல அனுமதிக்கக் கூடாது.

நாம் உருவாக்க வேண்டும். யாரோ உருவாக்கியதை நாம் உபயோகித்துக் கொண்டிருக்கக் கூடாது.

பிரச்சனைகளைத் தீர்ப்பவராக இருக்க வேண்டும்.

இதில் பிரச்சனை, அதில் பிரச்சனை என்று குறை கூறுபவராக இருக்கக் கூடாது. இதன் மூலம் மன உளைச்சல், அழுத்தம், ஏக்கம், வலி, காயப்படுதல், சோகம் என அனைத்தும் நம்மை விட்டு விலகிச் செல்லும். பயமில்லா மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழ முடியும்.

இந்த உலகில் வெற்றி பெற்றவர்கள் யார் தெரியுமா?

வாழ்க்கையில் வெற்றி பெற்ற அனைவருமே தடைகளை உடைத்து முன்னேறத் தெரிந்தவர்களே.

தடைகளைத் தடைகளாகப் பார்க்க எது காரணமாகிறது?

பயம்தான். பயம் நம்முடன் போரிட்டு நம்முடைய நம்பிக்கைகளை வீழ்த்தி விடுகிறது. இந்தக் காரியத்தை நம்மால் செய்ய முடியுமா என்கிற ரீதியில் சிந்திக்க வைத்து விடுகிறது. இந்தச் சிந்தனையின் காரணமாகத் தோல்வி குறித்த அச்சம் கொள்கிறோம். எந்தக் காரியத்தையும் செய்ய தயங்குகிறோம். இதனால் எந்தக் காரியத்தையும் ஆரம்பித்த உடனேயே வரும் சின்ன சின்ன தடைகளையும் சவால்களையும் கண்டு கலங்கி உடனடியாக முயற்சிகளைக் கைவிட்டு விடுகிறோம்.

இவ்வளவு கூறியும் பயப்படுவதை நிறுத்த முடியவில்லை என்றால் அதற்குக் காரணமென்ன தெரியுமா?

பயப்படுவது மனித இயல்பு. பயத்தை வெல்வது ஒன்றே இதற்கான வழி. பயத்தை வெல்ல நாம் ஏன் பயப்படுகிறோம்? நமக்குள்ளே தோன்றும் பயம் என்ற எதிரியை வெல்ல வேண்டிய போர் வீரன் நாமேதான், வேறு யாருமல்ல.

ஓர் போர் வீரனாய் உங்களுக்குள் இருக்கும் பயத்தை வெல்லுங்கள். பிறகு நீங்கள் இந்த உலகையே வெல்வீர்கள்.

நீங்கள் உலகை வெல்ல வாழ்த்துகள்!

*****

Wednesday, 25 December 2024

ஓரெழுத்தை நீக்கினாலும் பொருள் தரும் ஆங்கிலச் சொற்கள்!

ஓரெழுத்தை நீக்கினாலும் பொருள் தரும் ஆங்கிலச் சொற்கள்!

Price என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தை நீக்கிப் பாருங்கள்.

Rice.

Rice என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தை நீக்கிப் பாருங்கள்.

Ice.

 

Chair என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தை நீக்கிப் பாருங்கள்.

Hair.

Hair என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தை நீக்கிப் பாருங்கள்.

Air.

 

That என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தை நீக்கிப் பாருங்கள்.

Hat.

Hat என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தை நீக்கிப் பாருங்கள்.

At.

 

Stable என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தை நீக்கிப் பாருங்கள்.

Table.

Table என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தை நீக்கிப் பாருங்கள்.

Able.

 

Crash என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தை நீக்கிப் பாருங்கள்.

Rash.

Rash என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தை நீக்கிப் பாருங்கள்.

Ash.

 

This என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தை நீக்கிப் பாருங்கள்.

His.

His என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தை நீக்கிப் பாருங்கள்.

Is.

 

Heat என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தை நீக்கிப் பாருங்கள்.

Eat.

Eat என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தை நீக்கிப் பாருங்கள்.

At.

 

Stone என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தை நீக்கிப் பாருங்கள்.

Tone.

Tone என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தை நீக்கிப் பாருங்கள்.

One.

 

Skin என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தை நீக்கிப் பாருங்கள்.

Kin.

Kin என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தை நீக்கிப் பாருங்கள்.

In.

 

Twin என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தை நீக்கிப் பாருங்கள்.

Win.

Win என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தை நீக்கிப் பாருங்கள்.

In.

 

Spin என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தை நீக்கிப் பாருங்கள்.

Pin.

Pin என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தை நீக்கிப் பாருங்கள்.

In.

*****