Tuesday 4 June 2024

காந்தி & கண்ணதாசன் பற்றிய உளப் பகுப்பாய்வு!

உளப்பகுப்பாய்வு முறை என்பது சிக்மண்ட் பிராய்டால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவரைப் பின்பற்றி பிரபலங்கள் பலரின் உள்ளங்களைப் பகுப்பாய்வு செய்து ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

அப்படி காந்தியடிகளைப் பற்றிச் செய்யப்பட்ட உளப்பகுப்பாய்வு என்ன சொல்கிறது தெரியுமா?

‘உள் எதிரியை வன்முறையின்றி எதிர்கொள்வது’ என்பதுதான் காந்தியின் எழுத்துகளிலிருந்து அவரது உள்ளத்தைப் பகுப்பாய்வு செய்து பெறப்பட்ட முடிவு. இதுவே அவரது அகிம்சையின் அடிப்படை. மனதின் உள் முரண்பாடுகளையும் எதிர்த் தன்மைகளையும் வன்முறையின்றி எதிர்கொள்ளும் தன்மை அவருக்கு வெளியுலகிலும் ஆங்கிலேயரை வன்முறையின்றி எதிர்கொள்ளும் தன்மையைத் தந்தது என்கிறது அந்த ஆய்வு. இந்த ஆய்வைச் செய்தவர் எரிக் எரிக்சன்.

கண்ணதாசன் பற்றிய உளவியல் பகுப்பாய்வானது அவரது இரு துருவ மனநிலை குறித்துப் பேசுகிறது. படைப்பாற்றல் மிக்கவர்கள் இது போன்ற இரு துருவ மனநிலைக்கு ஆளாவதாகவும், இரு துருவ மனநிலைக்கு ஆளாகுபவர்கள் இது போன்ற படைப்பாற்றல் தன்மையோடு இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ‘எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!’ என்ற பாடலையும் ‘உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக’ என்ற கண்ணதாசன் பாடல்களை அவரது இரு துருவ மனநிலையின் படைப்பாற்றல் உளப்பகுப்பாய்வுக்குச் சான்றாகச் சொல்லலாம். இந்த ஆய்வைச் செய்தவர் ஓ. சோமசுந்தரம்.

இந்திராகாந்தி, அவரது மகன் சஞ்சய் காந்தி போன்றோர் வரலாற்றில் ஓர் அடையாளத்தை உருவாக்க விரும்பியோர் ஆவர். அதனால் அவர்கள் வளர்ச்சியின் வேகத்தை விரைவுபடுத்த விரும்பினர். இது அவர்களை ஓரளவு சர்வாதிகாரத் தன்மை மற்றும் இரக்கமற்ற தன்மையை நோக்கி நகர்த்தியது. அம்மனநிலை அவர்களை அனுசரணையற்ற உறவுமுறைக்குக் கொண்டு சென்றது என்று அவர்களது உள்ளத்தைப் பகுப்பாய்வு செய்த ஆஷிஷ் நந்தி கூறுகிறார்.

இது போன்ற உளப்பகுப்பாய்வுகள் நமக்குத் தலைவர்கள் பற்றி கூடுதலாகப் பல விசயங்களைப் புரிந்து கொள்ள உதவுகிறதுதானே.

ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்தைப் பகுப்பாய்வு செய்து பார்ப்பதன் மூலம் தங்கள் நடத்தைகள் குறித்த பல உண்மைகளை அறிந்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment