Friday, 7 June 2024

பழக்கம் உங்களை எப்படி மாற்றுகிறது தெரியுமா?

 


அது ஒரு கடற்கரை.

அந்தக் கடற்கரையில் பல்வேறு மனிதர்கள்.

அலைகளை ரசித்துக் கொண்டிருந்தனர் சிலர். கடலில் நீராடிக் கொண்டிருந்தனர் சிலர். கடற்கரையில் விளையாட்டும் கும்மாளமுமாகச் சிலர்.

ஒருவர் மட்டும் அந்தக் கடற்கரையில் தன்னிடம் எதுவுமில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

அந்தப் புலம்பிக் கொண்டிருந்த மனிதரைப் பார்த்தார் ஞானி ஒருவர்.

 ஒரு கூழாங்கல் குவியலைக் காட்டி இதற்குள் ஒரு வைரம் இருக்கிறது, தேடி எடுத்துக் கொள் என்றார்.

புலம்பிக் கொண்டிருந்த மனிதருக்குச் சந்தோசம்.

அந்தக் குவியலிலிருந்து ஒவ்வொரு கூழாங்கல்லாக எடுத்துப் பார்த்து வைரத்தைத் தேட ஆரம்பித்தார்.

ஒவ்வொரு கூழாங்கல்லை எடுத்துப் பார்த்ததும் அது வைரம் இல்லை என்று தெரிந்ததும் கடலில் எறிய ஆரம்பித்தார்.

இப்படியே செய்து கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் கையில் வைரம் வந்த போதும் பழக்க தோசத்தில் அதையும் கடலுக்குள் எறிந்து விட்டார்.

ஐயோ வைரம் என்று அவர் கடலுக்குள் குதித்து அதை எடுக்கப் பார்ப்பதற்குள் பெரிய அலை ஒன்று வந்து எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு கடலுக்குள் திரும்பிக் கொண்டிருந்தது.

பழக்கதோசம் ஒரு மனிதரின் அதிர்ஷ்டத்தை எப்படி பாதித்து விட்டது பார்த்தீர்களா?

பழக்கதோசத்தில் கையில் வைரம் கிடைத்து அவர் அதை எப்படி இழந்தார் பார்த்தீர்களா?

ஆகவே நம்முடைய பழக்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது புரிகிறதா?

ஒரு சிறிய தவறான பழக்கம் போதும், நமக்கு வரும் அதிர்ஷ்டத்தை நம்மிடமிருந்து தட்டிப் பறிந்து விட.

பழக்கங்களில் கவனமாக இருப்போம். ஏனென்றால் அவையே நம்மை அறியாமல் நம் செயல்களாக மாறுகின்றன. அந்தச் செயல்களே நம்முடைய வெற்றிகளையும் முன்னேற்றங்களையும் தீர்மானிக்கின்றன.

No comments:

Post a Comment