Wednesday, 17 June 2026

ப்ரீத்திங் டாட் காம் – மூச்சோடு ஒரு நேர்காணல்!

ப்ரீத்திங் டாட் காம் – மூச்சோடு ஒரு நேர்காணல்!

நாம் ஒரு நாளைக்குச் சராசரியாக 17,000 தடவை மூச்சு விடுகிறோம். ஆனால், அதில் எத்தனை மூச்சு ஒழுங்கான மூச்சு?

சிறுவயதிலிருந்தே உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தப் பழகி, நம் தசைகளை இறுக்கி வைத்துக்கொண்டதால், இயற்கையாக மூச்சு விடும் திறனை நாம் தொலைத்துவிட்டோம்.

மூச்சு விடும் முறையை மாற்றினால், உங்கள் உடல் நலம் மட்டுமல்ல, மனநலமும் வெர்ஷன் 2.0 ஆக மாறும்.

நம்மில் பலர் நெஞ்சுக்கூடு வழியாக மட்டுமே மூச்சு விடுகிறோம். உண்மையில் உதரவிதானம் எனப்படும் அந்தத் தசைதான் வேலையைச் செய்ய வேண்டும்.

பதற்றமாக இருக்கும்போது மூச்சு ஆழமில்லாமல் வேகமாக இருக்கும். இது உங்கள் எனர்ஜியை உறிஞ்சும் ஒரு மால்வேர்.

நீங்கள் தப்பாக மூச்சு விடுகிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள் சில இருக்கின்றன.

அடிக்கடி பெருமூச்சு விடுதல் முதல் அறிகுறி. உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும்போது மூளை தரும் வார்னிங் இது.

அடிக்கடி கொட்டாவி விடுவது இரண்டாவது அறிகுறி. இன்னும் ஆக்சிஜன் வேண்டும் என உடல் கேட்கிறது.

இரவில் பற்களைக் கடிக்கும் பழக்கம் மூன்றாவது அறிகுறி. இது தீவிரமான ஸ்ட்ரெஸ்ஸைக் குறிக்கிறது. இதனால் மூச்சில் கவனம் மிஸ்ஸாகி ஏதோ அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கிறது.

கழுத்து மற்றும் தோள்பட்டை வலி நான்காவது அறிகுறி. நெஞ்சால் மட்டுமே மூச்சு விடுபவர்களுக்கு, கூடுதல் காற்றுக்காகக் கழுத்துத் தசைகள் கஷ்டப்பட்டு வேலை செய்ய ஆரம்பிக்கும். அதன் விளைவுதான் இந்த வலி.

இதை எப்படிச் சரி செய்வது என்கிறீர்களா?

தூக்கத்திற்கு முன் செல்போனை நோண்டுவதற்குப் பதில், மூச்சையும் மனதையும் இப்படிச் சீராக்கலாம்.

உங்களுக்குப் பிடித்தமான நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சிறிது நேரம் செலவிடுவது மனதை லேசாக்கும். அதுவே மனதை நேராக்கி உங்கள் மூச்சைச் சீராக்கும்.

கிண்டில் போன்ற டிஜிட்டல் திரைகள் வேண்டாம். காகிதப் புத்தகங்கள் உங்கள் ஸ்ட்ரெஸ் லெவலைக் குறைத்து, அல்சைமர் வராமல் தடுக்கும் ஒரு கேடயம். உங்கள் ஸ்ட்ரெஸ் குறையும் போது உங்கள் மூச்சும் முறையாகும்.

மெல்லிசைப் பாடல்கள் இதயத் துடிப்பைச் சீராக்கும். இதயத்துடிப்பு சீரானால் மூச்சும் சீராகும்.

இன்று நடந்ததை விட, நாளை என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு பேப்பரில் குறித்து வையுங்கள். அப்போதுதான் மூளை கவலையை டவுன்லோட் செய்துவிட்டு நிம்மதியாகத் தூங்கும். மனக்கவலையோ, மனஇறுக்கமோ இல்லையென்றால் மூச்சு ரிலாக்ஸாக இயங்கும்.

மூச்சு என்பது வெறும் காற்று உள்ளே போய் வருவது மட்டுமல்ல, அது உங்கள் உடலின் ரிதம்.

மூச்சு விடக்கூட நேரமில்லை சார் என்று சொல்லாதீர்கள். ஐந்து நிமிடம் அமைதியாகப் படுத்துக்கொண்டு உங்கள் வயிற்றின் அசைவைக் கவனிப்பதன் மூலம் நீங்கள் ஒரு புது மனிதராகலாம்.

அப்புறம், பிராணாயமம். ஒரு மாஸ்டரைப் பிடித்துக் கற்றுக் கொண்டு தினம் ஐந்து நிமிடம் செய்தால் கூட போதும். மூச்சு சீராவதற்கு அது ஒரு நல்ல முறை. 

நடைபயிற்சி, உடற்பயிற்சி, யோகா, விளையாட்டு இவையெல்லாம் உங்கள் மூச்சைச் சீராக்க பெரிதும் உதவும். இவற்றில் உங்களுக்குப் பிடித்த ஒன்றை தினமும் இருபது நிமிடமாவது செய்யுங்கள்.

இன்று இரவு படுக்கும்போது, ஒரு ஐந்து நிமிடம் உங்கள் கையை வயிற்றின் மேல் வைத்து ஆழமாக மூச்சு விடுங்கள். வயிறு பலூன் போல உப்பி இறங்கட்டும். அந்த ஓர் அமைதி. அதுதான் நீங்கள் தேடும் ஆரோக்கியம். நாளை காலை நீங்கள் ஒரு புது மனிதராக எழுவீர்கள். ஆல் தி பெஸ்ட்!

*****

No comments:

Post a Comment