Wednesday, 3 June 2026

உங்களுக்கான ஒரு கிரியேட்டிவ் விசிட்!

உங்களுக்கான ஒரு கிரியேட்டிவ் விசிட்!

நம் மூளை ஒரு விசித்திரமான மென்பொருள். அதைச் சும்மா வைத்திருந்தால் துருப்பிடித்துவிடும், ஓடிக்கொண்டே இருந்தால் ஹேங் ஆகிவிடும். இதற்கு ஒரு பேட்ச் ஒர்க்தான் கலை.

நம்மில் பலர், எனக்கு வரையத் தெரியாது சார், நான் பாடினால் கழுதை ஓடி வரும், நான் கவிதை எழுதினால் காமெடியாகும் என்று எஸ்கேப் ஆகிறோம். ஆனால், கலை என்பது கண்காட்சியில் வைப்பதற்கல்ல, உங்கள் மனதைச் சீரமைக்க!

மனநல நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? உணவு, உடற்பயிற்சிக்கு இணையாகக் கிரியேட்டிவிட்டி மனித ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். இது ஒரு மைண்ட்புல் தியானம். உங்கள் மூளையை ரீபூட் செய்ய எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இதோ சில வழிகள். உங்களுக்குப் பயன்படுகிறதா என்ற பாருங்கள்.

நீங்கள் ஓர் இளையராஜாவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு கருவியை மீட்டும்போது வரும் அந்த வைப்ரேஷன் உங்கள் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும். உங்களுக்கு வாசிக்கத் தெரியாவிட்டால், இதுவரை கேட்காத ஒரு புது இசையை மைண்ட்புல்லாகக் கேட்டுப் பாருங்கள்.

பழைய புகைப்படங்கள், டிக்கெட் துண்டுகள், பேப்பர் கட்டிங் இதையெல்லாம் ஒரு நோட்டில் ஒட்டுங்கள். இது ஒரு விஷுவல் டைரி. வெட்டுவது, ஒட்டுவது என உங்கள் கைகள் வேலை செய்யும்போது மூளை ஆட்டோபைலட் மோடிலிருந்து வெளியே வரும்.

மண்ணும் நீரும் சேரும்போது ஒரு உயிர் பிறக்கிறது. அதுதான் களிமண் கலை. இதற்காகப் பாட்டர் வீல்  தேவையில்லை. வெறும் கைகளால் அந்த மண்ணின் குளிர்ச்சியையும், தன்மையையும் உணருங்கள். அது மாற மாற உங்கள் மன இறுக்கமும் மாறும்.

இது நல்லாவே இல்லை, என்று உங்கள் தலைக்குள் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருக்குமே, அதை முதலில் மியூட் செய்யுங்கள். ஓவியம் என்பது விளையாட்டு. ஒரு இலக்கோ, முடிவோ இல்லாமல் வண்ணங்களைத் தீட்டுங்கள். நீங்கள் ஒரு ஆர்ட்டிஸ்ட் என்றால், உங்கள் ஸ்டைலைத் தூக்கி எறிந்துவிட்டுச் சுதந்திரமாக வரையுங்கள்.

இப்போது பெரியவர்களுக்கான கலரிங் புக்ஸ் சூப்பர் மார்க்கெட்டிலேயே கிடைக்கிறது. அந்தச் சிக்கலான டிசைன்களுக்குள் வண்ணம் தீட்டும்போது உங்கள் கவனம் சிதறாது. இது ஒரு போகஸ்டு மெடிடேஷன்.

கம்பளி நூலோடு விளையாடுவது ஒரு ப்ளோ நிலையை உருவாக்கும். அந்தத் தொடர்ச்சியான கை அசைவுகள் மூளையில் அமைதி தரும் கெமிக்கல்களைச் சுரக்க வைக்கின்றனவாம். உலகெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளை அமைதிப்படுத்த இந்தப் பின்னல் வேலையைச் சொல்லித்தருகிறார்கள். ஆகவே அதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இந்த உலகில் பலரும் இருப்பது வீடு எனும் சிறையில்தானே.

பீரோ நிறையத் துணி இருக்கு சார், ஆனா போட எதுவுமே இல்லை, என்கிற கவலை வேண்டாமென்றால், நீங்களே தைக்க ஆரம்பியுங்கள். இதை நான் செய்தேன் என்று சொல்லும்போது வரும் அந்தத் தன்மானம் இருக்கிறதே, அது எத்திகல் பேஷன் பக்கமும் உங்களை அழைத்துச் செல்லும்.

ஊசி வேலையும் பின்னல் வேலை போன்றதுதான். மெதுவாக, நிதானமாகச் செய்ய வேண்டிய ஒரு காரியம். நூல் சிக்கிக்கொண்டால் டென்ஷன் ஆகாதீர்கள். அந்தச் சிக்கலை எடுப்பதும் ஒரு கலைதான்.

சிறு வயதில் நாம் எல்லாரும் வரைந்தோம். எப்போது நிறுத்தினோம் என்று ஞாபகம் இருக்கிறதா? ஏதோ ஒரு புள்ளியில் அந்த ஆர்வம் நின்றுவிடுகிறது. அதை மீண்டும் ஆரம்பியுங்கள். ஒரு பேனாவை எடுத்து காகிதத்தில் கிறுக்கத் தொடங்குங்கள். உங்கள் மூளைக்கு ஒரு சின்ன இடைவேளை கொடுங்கள்.

வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத ஓர் ஆட்டோ பைலட் புரோகிராம் கிடையாது. இடையில் கொஞ்சம் எர்ரர் வரும், கொஞ்சம் பக் வரும். கலை என்பது அந்த சிஸ்டத்தை ரீவயரிங் செய்யும் ஒரு டூல்.

நான் ஒரு முட்டை கூட வரையத் தெரியாதவன், என்று ஒதுங்காதீர்கள். கலை என்பது சரியாக வரைவதல்ல. உண்மையாக உணர்வது.

இன்று ஒரு வெள்ளைத்தாளில் ஒரு பென்சிலால் உங்களுக்குத் தோன்றியதை வரையுங்கள். அது ஒரு கோடாக இருந்தாலும் சரி, ஒரு வட்டமாக இருந்தாலும் சரி. அந்தப் பென்சில் காகிதத்தில் உரசும் சத்தத்தைக் கவனியுங்கள். உங்கள் கிரியேட்டிவ் பயணம் அங்கிருந்து தொடங்கட்டும்!

கிறுக்கல்கள் என்று சொல்லி கவிதை எழுதினாலும் சரிதான். கிறுக்கல்கள் என்ற பெயரில் ஒரு கவிதை நூலை வெளியிட்டிருக்கிறார் ஒருவர். அப்புறம் என்ன?

லெட் ஸ்டார்ட் மியூசிக்!

*****

No comments:

Post a Comment