Wednesday, 24 June 2026

பேயோகம் = பேய் + யோகம் – பேய்களின் யோகம்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் - 1

பேயோகம் = பேய் + யோகம் – பேய்களின் யோகம்!

இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை வாழ்ந்த மனிதர்களில் வெறும் ஒரு சிறு பகுதிதான் இப்போது உயிரோடு இருக்கிறோம். மிச்சம் பேர் எங்கே?

எங்கே போயிருப்பார்கள்? ரீசைக்கிளிங் ஆகியிருப்பார்களா? அல்லது பேய்களாகப் பின்னால் நின்று நாம் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களா?

அந்த நிழல் மனிதர்கள்

நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இடத்திலும், முன்பு வாழ்ந்து மறைந்த டஜன் கணக்கான மனிதர்களின் நிழல்கள் ஒளிந்திருக்கின்றன. சிலருக்கு அந்த நினைவுகளே போதும். ஆனால் சில ஆத்மாக்களுக்கு அது மட்டும் போதவில்லை. அவர்கள் பேய் என்கிற லேபிளோடு ரீஎன்ட்ரி கொடுக்கிறார்கள்.

இது ஏதோ நேற்று நேரு ஸ்டேடியத்தில் ஆரம்பித்த கதையல்ல. எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே, மனிதன் மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பதையும், அங்கிருந்து ரிட்டர்ன் டிக்கெட் எடுத்து வருபவர்களைப் பற்றியும் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

பேய்கள் குறித்த நாட்டுப்புறவியல்

ஏன் சில ஆத்மாக்களால் அந்தப் பக்கம் செட்டில் ஆக முடியவில்லை?

பேய்களின் நாட்டுப்புறவியலில் இதற்குச் சில பதில்கள் உண்டு. அது என்ன கூறுகிறது என்றால்,

பழிவாங்கும் ஆவிகள் : கணக்கு தீர்க்க வராதவர்கள்.

சோக கீதங்கள் : இன்னும் அந்தப் பழைய நினைவிலேயே சுற்றிக் கொண்டிருப்பவர்கள்.

பாசப் போராட்டங்கள் : அன்புக்குரியவர்களைப் பிரிய மனமில்லாத சென்டிமென்ட் பேய்கள்.

இது கலாச்சாரங்களைக் கடந்த ஒரு விஷயம். எகிப்திய பிரமிடு முதல் இன்றைய இமெயில் யுகம் வரை பேய்கள் நம்மைத் துரத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

சயின்ஸ் vs நம்பிக்கை

"என்ன சார், 2026 இல் உட்கார்ந்து பேய் என்கிறீர்களே?" என்று கேட்கலாம். ஒரு புள்ளிவிவரம் இதோ. இதற்குப் பிறகு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

2019 இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, 45 சதவீத அமெரிக்கர்கள் இப்போதும் பேய்களை நம்புகிறார்கள்.

பகுத்தறிவு என்னதான் டார்ச் அடித்துப் பார்த்தாலும், மரணம்தான் முடிவு என்பதை ஏற்க நம் மூளையின் ஒரு பகுதி மறுக்கிறது. இந்த மெட்டீரியலிச உலகத்துக்கும், ஆவிகள் உலவும் மாய உலகத்துக்கும் நடுவே ஏதோ ஒரு லிங்க் இருக்கிறது. அது குவாண்டம் பிசிக்ஸா அல்லது வெறும் மனப்பிரமையா என்ற தேடல் இப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

மர்மங்களின் தேடல்

மதங்களும் புராணங்களும் பேய்களுக்கு ஏகப்பட்ட விளக்கங்களைக் கொடுத்துவிட்டன. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் இவை எல்லாமே நம் நரம்பு மண்டலத்தின் விளையாட்டாகவோ அல்லது இன்ப்ரா சவுண்ட் போன்ற அலைவரிசைகளின் விளைவாகவோ இருக்கலாம்.

ஆனால், ஒரு திறந்த மனதுள்ள ஆராய்ச்சியாளனுக்குத் தேவைப்படுவது ஆதாரங்கள். ஒரு சில ஆத்மாக்களுக்கு வெறும் நினைவுகளாக இருப்பது மட்டும் போதவில்லை; சில நேரங்களில் அவர்கள் பேய்களாகவே திரும்பி வருகிறார்கள் என்பதுதான்பேய்களைப் பற்றிப் பேசுவர்களின் அடிநாதம்.

கடைசியாக…

பேய்கள் இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல. அந்த பயம் தரும் த்ரில் இருக்கிறதே... அதுதான் மனிதன் கண்டுபிடித்ததிலேயே மிகச் சிறந்த பொழுதுபோக்கு! ஆக இது குறித்து அறிந்து கொள்ள நிறைய இருக்கிறது. அறிந்து கொள்வோம் ஒவ்வொன்றாக.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment