அமானுஷ்யங்களின் அட்ரஸ்
ஓர் ஆவி பறக்கும் முன்னுரை
உங்களுக்குப்
பேய் பிடிக்குமா?
கேள்வியே
தப்பு என்கிறீர்களா?
உங்களுக்குப்
பேய்களைப் பிடிக்குமா என்று கேட்டிருக்க வேண்டும்.
பெரும்பாலானவர்களின்
பதில் 'இல்லை' என்பதாகத்தான் இருக்கும். ஆனால், நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு, தனியாக
இருக்கும்போது, பின்னால் ஏதோவொரு நிழல் அசைவது போல் தெரிந்தால்... சட்டென்று இதயத்துடிப்பு
எகிறுகிறதே, அது ஏன்?
விஞ்ஞானம்
இதை 'அட்ரினலின் ரஷ்' என்கிறது. பயம் என்பது மூளையின் அமிக்தலா பகுதி தரும் ஒரு தற்காப்பு எச்சரிக்கை. அவ்வளவுதான்.
இருந்தாலும்,
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக, மனித நாகரிகம் வளர்ந்த வேகத்திற்கு இணையாகப் பேய்க்
கதைகளும் வளர்ந்து கொண்டே இருக்கின்றனவே, அது எப்படி?
குகை
மனிதன் நெருப்பை விசித்திரமாகப் பார்த்த காலத்திலிருந்து, இன்றைய ஐடி ஊழியர் நள்ளிரவில்
லிப்ட்டில் தனியே போகப் பயப்படுவது வரை, பயம் மாறவில்லை. உருவங்கள் மட்டும்தான் மாறியிருக்கின்றன.
ஒரு
லாஜிக் என்னவென்றால், உலகில் இதுவரை பிறந்து இறந்த மனிதர்களின் எண்ணிக்கை சுமார் பத்தாயிரத்து
எண்ணூறு கோடி.
இவர்களில்
ஒரு சதவீதத்தினர் பேயாக மாறினாலும், இந்நேரம் உலக மக்கள் தொகையை விட பேய்களின் மக்கள்
தொகை அதிகமாக இருந்திருக்க வேண்டும். நிலைமை அப்படியானால், இந்நேரம் பஸ் ஸ்டாண்டிலும்,
தியேட்டரிலும், ஏன்... உங்கள் சோபாவிலும் கூட ஒரு பேய் உட்கார்ந்திருக்க இடமுண்டு.
ஆனால்,
நமக்கு ஏன் தெரிவதில்லை?
அப்படியென்றால்
பேய்கள் இல்லையா? அல்லது நம் கண்களுக்குத் தெரியாத ஏதோ ஒரு அலைவரிசையில் அவை இயங்கிக்
கொண்டிருக்கின்றனவா? சிலர் சொல்வது போல, "இருப்பதாக நினைத்தால் இருக்கிறது, இல்லாததாக
நினைத்தால் இல்லை" என்பதுதானா?
இப்போது
பேய்களைப் பற்றி உங்களுக்கும் யோசிக்கத் தோன்றுகிறதா?
ரொம்ப
நாளாகவே எனக்கும் ஓர் ஆசை. பேய்களைப் பற்றி ஒரு தொடர் எழுத வேண்டும் என்று.
ஆக இந்தத்
தொடரை ஆரம்பித்தால், உங்கள் யோசனைக்கும் ஒரு வடிகால் கிடைத்து விடும். எனக்கும் ஒரு
தொடர் எழுத வாய்ப்பு கிடைத்து விடும். ஒரே கல்லில் இரண்டு பேய், சாரி மாங்காய் கான்செப்ட்தான்.
இந்தத்
தொடர் எழுத வாய்ப்பளிக்கும் விஜயராமனுக்கு நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
அப்படியானால் இந்தத் தொடரை எழுதுவது யார்? அதுவும் விஜயராமன்தான். அப்படியானால் இந்தத்
தொடரை எழுதும் விஜயராமனுக்குத் தொடரை எழுத வாய்ப்பு தரும் விஜயராமனும் நன்றித் தெரிவித்துக்
கொள்ள வேண்டுமா என்றால் அதுவும் சரிதான். இதென்ன கொலைவெறி கான்செப்ட்டாக இருக்கிறதா
என்று நினைத்தால், நீங்கள் ‘அமானுஷ்யத்தின் அட்ரஸ்’ தொடருக்குத் தயாராகி விட்டீர்கள்.
இந்தத்
தொடர் பேய்களைப் பிடிப்பதற்கானது அல்ல. நம் ஆழ்மனதில் ஒளிந்திருக்கும் பயத்தின் வேர்களைப்
பிடிப்பதற்கான ஒரு சிறு முயற்சி. கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் அனுபவம், நிறைய அமானுஷ்யம்
நிறைந்தது.
ஜன்னலை
மூடிவிடுங்கள். கதவைத் தாழிடுங்கள். விளக்கை அணைக்க வேண்டாம்... கொஞ்சம் டிம் மட்டும்
செய்து கொள்ளுங்கள்.
தொடங்குவோம்.
நாளையிலிருந்து
ஒவ்வொரு அட்ரஸாகத் தேடுவோம்.
*****

No comments:
Post a Comment