Friday, 26 June 2026

மம்மிக்களைத் தோண்டினால் மரணம் நிச்சயமா?

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 3

மம்மிக்களைத் தோண்டினால் மரணம் நிச்சயமா?

எகிப்தியர்களைப் பொறுத்தவரை சாவு என்பது ஒரு லாங் டிராவல். உடல் கெடாமல் இருக்க மம்மி ஆக்க வேண்டும், கல்லறைக்குள் தங்கம், பொருள் எல்லாம் வைக்க வேண்டும்.

இதிலாவது அவர்கள் அமைதியாக இருந்தார்களா?

இல்லை.

அவர்களின் நம்பிக்கையின்படி, யாராவது கல்லறையைத் தோண்டினாலோ அல்லது வாரிசுகள் திதி கொடுக்கக் காசு கஞ்சத்தனம் பண்ணினாலோ, ஆத்மா நேராக பூமிக்கு வந்து விசிட் அடிக்கும்.

ஒரு கணவன் தன் இறந்த மனைவிக்கு ஒரு லெட்டர் எழுதி அவளது கல்லறையிலேயே வைத்தானாம், "உனக்கு நான் என்ன குறை வைத்தேன்? ஏன் என் உடம்பை இப்படிப் படுத்துகிறாய்?"  - ஆவியுடன் ஒரு நேரடி முதல் கடிதப் போக்குவரத்து இதுதான்.

எகிப்தியர்கள் ஏன் உடம்பைக் கெடாமல் பாதுகாத்தார்கள்? அவர்களுக்குப் பேய் ஆவதில் ஆசையா? இல்லை.

அவர்களுடைய தியரிப்படி மனிதனுக்கு இரண்டு ஆன்மாக்கள் உண்டு. ஒன்று 'கா', இன்னொன்று 'பா'. மனிதன் இறந்த பிறகு இந்த ஆன்மாக்கள் பிரபஞ்சத்தைச் சுற்றிவிட்டு மீண்டும் சொந்த உடம்பிற்குள் வந்து புகுந்துகொள்ளும். அப்படி வரும்போது பாடி டேமேஜ் ஆகி அழுகிப் போயிருந்தால் ஆன்மாவுக்குக் கோபம் வந்துவிடும். பிறகு அது அலைந்து திரியும்.

இதான் பின்னாட்களில் மம்மி பேய் கதைகளாக உருமாறியது. எகிப்தியர்கள் உடலைத் தைத்த விதம் ஒரு அட்வான்ஸ்டு சர்ஜரி.

முதலில் மூக்கு வழியாக ஒரு கொக்கியை விட்டு மூளையை வெளியே இழுத்துவிடுவார்கள். ஏனெனில் மூளைதான் முதலில் அழுகும்.

பிறகு கல்லீரல், நுரையீரல், குடல் போன்ற உள்ளுறுப்புகளைத் தனியாக எடுத்து கனோபிக் ஜாடிகளில் வைப்பார்கள்.

இதயத்தை மட்டும் உடம்பிற்குள்ளேயே விட்டுவிடுவார்கள். ஏன் தெரியுமா? அனுபிஸ் என்ற எகிப்திய கடவுள், மறுஉலகில் மனிதனின் இதயத்தை ஒரு பறவையின் இறகோடு வைத்து எடை பார்ப்பாராம். பாவம் அதிகமாக இருந்தால் இதயம் கனக்குமாம். நல்ல கற்பனைதான் இல்லையா?!

பிறகு நேட்ரான் என்ற உப்புக்கலவையில் உடலை நாற்பது நாட்கள் ஊறவைத்து, மல்லிகை, லாவண்டர் எண்ணெய் தடவி, கிலோமீட்டர் கணக்கான லினன் துணியால் சுற்றுவார்கள். அவ்வளவுதான், நூடுல்ஸ் ரெடி என்று மம்மிக்கள் சொல்வது போல, இப்போது மம்மிக்கள் நிஜமாகவே ரெடி.

உண்மையில் எகிப்தியர்கள் மம்மிகளைப் பேய்களாகப் பார்க்கவில்லை. அவை மதிக்கப்பட வேண்டிய முன்னோர்கள் என்றே பார்த்தார்கள்.

பிறகெப்படி மம்மிக்கள் குறித்த பேய்க்கதைகள் உருவாகின என்கிறீர்களா?

மம்மி பேய்க்கதைகளுக்கு மிக முக்கியமான ஸ்டார்ட்டிங் பாயிண்ட் ஹோவர்ட் கார்ட்டர் என்பவர்தான். அவர்தான் 1922 இல் இவர் துட்டன்காமனின் கல்லறையைக் கண்டுபிடித்தார்.

அந்தக் கல்லறை வாசலில் ஒரு எகிப்திய வாசகம் எழுதப்பட்டிருந்தது: "பாரோவின் தூக்கத்தைக் கெடுப்பவன் எவனோ, அவனுக்கு மரணம் தன் சிறகுகளால் தீர்ப்பளிக்கும்."

ஜஸ்ட் ஒரு எச்சரிக்கை போர்டுதான். நாமெல்லாம் 'இங்கே வண்டி நிறுத்தாதே' என்று போர்டு வைப்பதில்லையா, அதுபோல.

ஆனால், அடுத்த சில மாதங்களில் அந்தக் கண்டுபிடிப்போடு சம்பந்தப்பட்ட லார்ட் கார்னர்வான் ஒரு கொசு கடித்து, அது இன்ஃபெக்ஷன் ஆகி இறந்துபோனார். அடுத்தடுத்து அந்த டீமில் இருந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்தார்கள். ஆனால் ஹோவர்ட் கார்ட்டர் இறக்கவில்லை என்பது வேறு விசயம்.

உடனே மீடியாக்கள் கிளம்பின. "சாபம்! மம்மியின் சாபம்!" என்று பேப்பர்களை விற்றார்கள்.

இது மம்மிக்களின் பேய்த்தனமான வேலையா?

அதெல்லாம் எதுவும் இல்லை.

மூவாயிரம் வருஷமாக மூடி வைக்கப்பட்ட ஒரு ஏர் டைட் அறைக்குள் சூரிய வெளிச்சமே பட்டிருக்காது இல்லையா!

அங்கே அஸ்பெர்கிலஸ் நைகர் போன்ற ஆபத்தான பூஞ்சைகளும், பாக்டீரியாக்களும் மியூட்டேஷன் ஆகி, ஒரு பயோ வெப்பன் போலக் காத்திருந்தது.

கதவைத் திறந்தவுடன் அதைச் சுவாசித்தவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார்கள்.

அப்படியானால் ஹோவார்ட் கார்ட்டர் எப்படித் தப்பித்தார்?

அவர் சில நாட்கள் மட்டும் எகிப்துக்கு வந்துவிட்டுப் போனவர் அல்ல; பல வருடங்கள் எகிப்தியப் பாலைவன தட்பவெப்பநிலையிலேயே வாழ்ந்ததால், அவரது நோய் எதிர்ப்புச் சக்தி அந்தச் சூழலுக்குப் பழகியிருந்தது.

அவர் மற்றவர்களைப் போல அவசரப்படவில்லை. அவர் ஒரு தேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர். அந்தப் பெட்டகத்தைத் திறந்தவுடனேயே உள்ளே இருக்கும் பழமையான காற்றைச் சுவாசிப்பது ஆபத்து என்பதை உணர்ந்து, முறையான காற்றோட்ட வசதிகளைச் செய்த பிறகே உள்ளே முழுமையாக வேலை செய்ய ஆரம்பித்தார்.

அவசரப்பட்டவர்களும், திடீர் விசிட்டில் கண்டுபிடிப்பாளர்களாக ஆசைப்பட்டவர்களும்தான் காலியானார்கள். கார்ட்டர் காலியாகவில்லை.

பேய்களை விடவும் மனிதர்களின் கற்பனைக்குத்தான் சக்தி அதிகம் என்பதற்கு ஹோவர்ட் கார்ட்டரின் வாழ்க்கையே ஒரு சாட்சி!

ஸோ, பேய் இல்லை, பூஞ்சைதான் வில்லன்! ஆனால், வில்லன் பட்டத்தைத் தட்டிக்  கொண்டு போனது பேய்கள்தான். இந்தப் பேய்த்தனத்தை வைத்துக் கொண்டு ஹாலிவுட் பேய் படங்களாகச் சுட்டித் தள்ளியது. பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம் என்ற கதைதான் இந்தப் பேய் கதையிலும்.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment