அமானுஷ்யங்களின் அட்ரஸ்!
அட்ரஸ் – 2
சாகாமலிருக்க ஒரு ரூட் மேப்!
இந்தப்
பேய்கள் எல்லாம் இந்த உலகில் எப்போது அட்மிட் ஆனார்கள் தெரியுமா?
சுமேரியர்
காலத்திலேயே கியூனிபார்ம் எழுத்துக்களில் பேய்களைப் பற்றி எழுதித் தள்ளியிருக்கிறார்கள்.
கில்காமேஷ்
பற்றி அங்கே காவியமே எழுதியிருக்கிறார்கள்.
யார்
இந்த கில்காமேஷ்?
கி.மு.
1800. மெசபடோமியாவில் உரூக் நகரத்தின் கிங்.
மூன்றில்
இரண்டு பங்கு கடவுள், ஒரு பங்கு மனிதன் என கில்காமேஷ் போன்ற ஒரு டிசைனை நீங்கள் எங்கும்
பார்க்க முடியாது.
கில்காமேஷ்
பயங்கரமான திமிர் பிடித்த ஆள். ஆஜானுபாகுவான உடம்பு, அதீத அறிவு, எக்கச்சக்க பவர் உள்ளவன்.
மக்களும்
கடவுளும் யோசித்தார்கள், இவனை அடக்க ஒரு ஆப்போசிட் போர்ஸ் வேண்டும் என்று. அப்படி உருவானவன்தான்
என்கிடு. அவன் ஒரு காட்டுவாசி. காட்டில் மிருகங்களோடு மிருகமாக, ஷேவிங் செய்யாத தாடி,
தலைமுடியுடன் சுற்றிக்கொண்டிருந்தான். அவனுக்கு நாகரிகம் கற்றுக்கொடுத்து, உரூக் நகரத்துக்குள்
அழைத்து வந்தார்கள்.
ஒரு
திருவிழா கூட்டத்தில் கில்காமேஷும் என்கிடுவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டார்கள்.
கமலும்
ரஜினியும் மோதுவது போன்ற சண்டை. செ மாஸ் பைட். உரூக் நகரத்தின் சுவர்கள் அதிர்ந்தன.
தூசிகள் பறந்தன. ஒரு கட்டத்தில் ட்விஸ்ட் அடித்தது ஸ்க்ரீன் ப்ளே... ‘டேய், நீ செம
கட்டைப்பா!’ என்று கில்காமேஷ் சிரிக்க, ‘நீயும் சளைச்சவன் இல்லை!’ என்று என்கிடு கையை
குலுக்கினான்.
இப்படி
எதிரிகளாக வேண்டிய இருவரும் தடிமனான நண்பர்களானார்கள்.
சும்மா
இருந்தால் கில்காமேஷுக்கு போர் அடிக்கும். "என்கிடு, வா ஒரு அட்வென்ச்சர் போவோம்.
அந்த சிடார் காட்டில் இருக்கும் 'ஹம்பாபா' என்ற அரக்கனைப் போட்டுத்தள்ளலாம். வரலாற்றில்
நம் பெயர் நிலைத்து நிற்க வேண்டும்" என்றான்.
என்கிடுவுக்கு
கொஞ்சம் பயம். "டேய், அவன் வாய் வழியா நெருப்பு வரும், வேணாம்டா" என்றான்.
"வாடா
பாத்துக்கலாம்!" என்று கில்காமேஷ் இழுத்துக்கொண்டு போனான். சூரியக் கடவுளின் உதவியோடு,
ஒரு ஹை வோல்டேஜ் சண்டைக்குப் பிறகு ஹம்பாபாவின் தலையை சீவினார்கள்.
இங்கேயும்
ஒரு ட்விஸ்ட் ஆரம்பமானது.
கில்காமேஷின்
சிக்ஸ்பேக் உடம்பையும் வீரத்தையும் பார்த்துவிட்டு, சொர்க்கத்தின் காதல் தேவதை இஷ்தார்
நேராக லேண்ட் ஆகி, "என்னை கல்யாணம் பண்ணிக்கோ" என்றாள்.
ஹீரோ
சும்மா இருப்பானா? செம நக்கல் அடித்தான்.
ஈகோ
டச் ஆன இஷ்தார், கடுப்பாகி சொர்க்கத்துக் காளையை பூமிக்கு அனுப்பி உரூக் நகரத்தை அழிக்கப்
பார்த்தாள். ஆனால், நம்ம தக் லைப் பார்ட்னர்கள் கில்காமேஷும் என்கிடுவும் சேர்ந்து
அந்த காளையையும் காலி செய்தார்கள்.
கடவுள்களுக்கு
கோபம் தலைக்கேறியது. "ரொம்ப ஆடுகிறான்கள். காளையையும் கொன்றுவிட்டார்கள். அதனால்
என்கிடு சாகட்டும்" என்று சாபமிட்டார்கள்.
என்கிடுவுக்கு
ஒரு விசித்திரமான நோய் வந்து, படுக்கையில் விழுந்து, கில்காமேஷின் கையைப் பிடித்தபடியே
இறந்து போனான்.
இங்குதான்
கில்காமேஷ் உடைந்து போனான். அதுவரை மரணத்தைப் பற்றி யோசிக்காதவனுக்குள் ஒரு பயங்கரமான
இருள் புகுந்தது.
'நாளைக்கு
நமக்கும் இதே நிலைமைதானா? இந்த உடம்பு, இந்த வீரம் எல்லாம் மண்ணோடு மண்ணாகிவிடுமா?'
என சயின்ஸ் மற்றும் பிலாசபி கலந்த ஒரு கேள்வி அவனுக்குள் எழுந்தது.
இந்தக்
கேள்வியால், மரணத்தை வெல்லும் ரகசியத்தைக் கண்டுபிடிக்க கில்காமேஷ் கிளம்பினான்.
உலகப்
பெருவெள்ளத்தில் தப்பித்து, கடவுள்களால் அமரத்துவம் கொடுக்கப்பட்ட உத்நாபிஷ்டிம் என்ற
கிழவரைத் தேடி காடு, மலை, இருட்டு குகைகள் என அலைந்தான். நம்ம ஊர் மார்க்கண்டேயன் கதை
மாதிரி இருக்கிறது என்கிறீர்களா? உலக நாடுகளின் எல்லா கதைகளும் இப்படித்தான் இருக்கும்
போல.
கடைசியில்
அந்தக் கிழவரைக் கண்டுபிடித்து விட்டான். அவர் ஒரு சீக்ரெட் சொன்னார். "கடலின்
அடியில் ஒரு மூலிகை இருக்கிறது. அதைச் சாப்பிட்டால் இளமை திரும்பும்."
கில்காமேஷ்
கடலுக்குள் குதித்து, அந்த மூலிகையைப் பறித்தான். "இதை ஊருக்குப் போய், வயசானவங்களுக்குக்
கொடுத்து டெஸ்ட் பண்ணிட்டு அப்புறம் நான் சாப்பிடுறேன்" என்று மெடிக்கல் எத்திக்ஸோடு
கிளம்பினான்.
வழியில்
ஒரு குளம். அப்பாடா என்று மூலிகையைக் கரையில் வைத்துவிட்டு, குளிக்கப் போனான் கில்காமேஷ்.
அப்போது
அங்கே மெதுவாக ஊர்ந்து வந்த ஒரு பாம்பு, அந்த மூலிகையை லபக் என்று விழுங்கிவிட்டு,
தன் பழைய தோலைக் உரித்துவிட்டு புதுப் பொலிவோடு இளமையோடு நகர்ந்து சென்றது.
கரையேறி
வந்த கில்காமேஷ் பார்த்தான். மூலிகை காலி. பாம்பு இளமையாகிவிட்டது.
அவனுக்கு
'க்ளிக்' என்றது.
அவனுக்குப்
புரிந்துவிட்டது. மனித உடலுக்கு எக்ஸ்பைரி டேட் உண்டு. அதை மாற்ற முடியாது. ஆனால்,
நாம் செய்யும் சாதனைகள், நாம் உருவாக்கும் கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் மூலம்
மரணத்தை வெல்ல முடியும்.
கடைசியில்
அவன் தன் கதையை, தான் கடந்து வந்த அத்தனை சாகசங்களையும், தோல்விகளையும், தேடல்களையும்
ஒரு கற்பலகையில் செதுக்கி வைத்தான்.
கில்காமேஷ்
செத்துப்போனான். ஆனால், 4000 வருடங்கள் கழித்து இன்று நாமும் அவனைக் குறித்துப் பேசிக்
கொண்டிருக்கிறோம். அவன் தேடிய மரணமில்லாப் பெருவாழ்வு அவனுக்குக் கிடைத்துவிட்டது...
அவன் எழுதிய எழுத்து வடிவில்!
இதுதான்
அந்த மெசபடோமியா தத்துவம். மனுஷன் சாவான். அவனது சாதனைகள் சாகாது. 4000 வருஷத்துக்கு
முன்னாடியே எழுதிட்டாங்க பாஸ்!
இருந்தாலும்
மெசபடோமியர்களுக்கு மறு உலகம் பற்றி சில கான்செப்ட்கள் உண்டு. அது குறித்தும் கொஞ்சம்
தெரிந்து கொள்வோம்.
மெசபடோமியர்களின்
மறு உலகம் ரொம்பப் போரடிக்கிற இடம். அங்கே ஆத்மாக்கள் வெறும் நிழல்களாக அலைவார்கள்.
அங்கே ஜாலியாக இருக்க ஒரே வழி என்னவென்றால், பூமியில் இருக்கும் உங்கள் வாரிசுகள் உங்களுக்கு
ஒழுங்காகப் படையல் போட வேண்டும் என்பதுதான். ஏழு பிள்ளைகள் பெற்றவனுக்கு அங்கே விஐபி
ட்ரீட்மென்ட். ஒரு பிள்ளை கூட இல்லாத பெண், அங்கே உடைந்த மண்பாண்டம் போல எறியப்படுவாள்.
சென்டிமென்ட் பிளஸ் பயம்!
அமானுஷ்யங்களின்
அட்ரஸ் என்று போட்டு விட்டு, இதில் இன்னும் பேய் வரவில்லையே என்கிறீர்களா? ப்ளீஸ் வெயிட்.
-
அட்ரஸைத் தேடுவோம்!
*****

No comments:
Post a Comment