Saturday, 20 June 2026

முடிவுரையின் முகவுரை!

முடிவுரையின் முகவுரை!

நிறைவுரையாக ஒரு முன்னுரை.

ஸ்லோ லிவ்விங் என்று சொன்னாலும் இதனை மெதுவாக வாழ்தல் என்பதை விட நிதானமாக வாழ்தல் என்பது பொருத்தமாக இருக்கும்.

நம் முன்னோர்கள் இப்படி வாழவில்லை. அவர்களின் வாழ்க்கையில் இவ்வளவு அவரசரத்துக்கான நெருக்கடிகளும் தேவைகளும் இருந்திருக்கவில்லை.

மரண அவசரத்தில் போய்க் கொண்டிருக்கும் நாம் முன்னோக்கிப் போவதில் மட்டும் கவனமாக இருக்கிறோம். அவ்வபோது கொஞ்சம் நிறுத்தி பின்னோக்கிப் பார்ப்பதற்கான நேரமே இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஒருத்தன் பயங்கர பாஸ்ட் லைப் வாழ்ந்துட்டு இருந்தான். காலையில 2 நிமிஷத்துல குளியல், 1 நிமிஷத்துல இன்ஸ்டன்ட் பிரேக்பாஸ்ட், கார்ல 120 கிமீ வேகத்துல ஆபீஸ், அங்கேயும் டார்கெட் டெட்லைன்னு பறந்துகிட்டே இருந்தான்.

ஒருநாள் அவசர அவசரமாகக் காரை ஓட்டும்போது சிக்னலை மதிக்காமப் போய், ஒரு லாரி மேல மோதிட்டான்.

கண்ணைத் திறந்து பார்த்தா, முன்னாடி வெள்ளை உடம்போட எமதர்மன் நின்னுகிட்டு இருந்தார்.

இவன் பதறிப்போய், "ஐயோ எமதர்மராஜா! எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல, சொத்து சேர்க்கல, உலகமே பாக்கல. அதுக்குள்ள என் உயிரை எடுக்க வந்துட்டீங்களே! இது நியாயமா?" அப்படின்னு அழுது புலம்பினான்.

அதற்கு எமதர்மன் தன் கணக்குப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக் கொண்டே சொன்னார், "யோவ்! எனக்கென்னய்யா வேலை வெட்டி இல்லையா? உன் ஆயுசு முடிய இன்னும் 40 வருஷம் இருக்குய்யா!"

இவன் ஆச்சரியமாகி, "அப்புறம் ஏன் இப்பவே என்னை இழுத்துட்டு வந்தீங்க?" அப்படின்னு கேட்டான்.

எமதர்மன் கடுப்பாகிச் சொன்னார், "நீதான் பாஸ்ட் லிவ்விங் பண்றேன்னு எமலோக எக்ஸ்பிரஸ் வேகத்துல வண்டியை ஓட்டிட்டு வந்திருக்க. நான் பாட்டுக்கு என் எருமை மாட்டுல ஸ்லோ லிவ்விங் பண்ணிக்கிட்டு மெதுவாத்தான் போயிட்டு இருந்தேன். நீயே வந்து என் பாசக்கயித்துல தலையை மாட்டினா, நான் என்னய்யா பண்ணுவேன்?! தவளையே தானே வந்து பாம்பு வாய்க்குள்ள புகுந்தா அது என்னய்யா பண்ணும்?"

நீங்கள் எவ்வளவுதான் 5G வேகத்துல ஓடினாலும், எமதர்மன் இன்னும் இப்போதும் 2G எருமை மாட்டின் மேல்தான் வருகிறார். எமதர்மனே ஸ்லோ லிவ்விங் வாழ்க்கைதான் வாழ்கிறார். அவரிடம் போய்ச் சேரும் மனிதர்கள் பாஸ்ட் லிவ்விங் வாழ்க்கையை அடம் பிடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆகவேதான் மெதுவாக வாழும் இந்த நிதானமான வாழ்க்கை இன்றைய அவசர யுகத்துக்கு அவசியமான அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. ஆமை மெதுவாகவும் நிதானமாகவும் நீண்ட நாட்கள் வாழ்கிறது. அவசரப்படும் மனிதர்கள் அறுபதாண்டு ஆயுளை நெருங்குவதற்குள் சர்க்கரை, இரத்த அழுத்தம், கொழுப்பு என்று அவதிப்படுவதைப் பார்க்க முடிகிறது.

மனிதர்களின் நோய்கள், மரணங்கள் எல்லாவற்றுக்கும் அவசர வாழ்க்கைதான் காரணம் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி விட முடியாது என்றாலும், அவசர வாழ்க்கையும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.

இன்றைய அவசர வாழ்க்கையை எந்த அளவுக்கு மாற்ற முடியும் என்பது மாபெரும் கேள்விக்குறி. அதை மாற்று முடிகிறதோ, முடியவில்லையோ அது அடுத்த விசயம். குறைந்தபட்சம் நாம் அவசர அவசரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளவாவது வேண்டுமல்லவா!

வெறும் அறிதலோடு நின்று விடாமல், அது குறித்த புரிதைலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது. அத்துடன் இந்த அவசர வாழ்வை மாற்றுவதற்கு ஏதேனும் வழிகள், தீர்வுகள் உள்ளனவா என்று யோசிக்க வேண்டிய ஒரு மாற்றுப் பார்வையையும் உருவாக்க வேண்டியுள்ளது.

இந்த அவசர யுகத்தில் தங்களது அவசர வாழ்க்கையை மாற்றிக் கொள்வதும், மாற்றிக் கொள்ள விருப்பமில்லாமல் அதில் இயங்குவதும் அவரவர் விருப்பமே. ஆகவே, யாருடைய விருப்புரிமையில் குறுக்கிடாமலும், இது சரியென்று பட்டால் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை உருவாக்கும் விதத்திலும் ஸ்லோ லிவ்விங் பற்றிய ஒரு தொடர் எழுத வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இது நாள் வரை 34 நாட்களாகத் தொடர்ச்சியாக வந்த இப்பத்திகள்.

இவ்வலைப்பூவில் பாடத்திட்டம் சார்ந்தும், கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் சார்ந்தும், கல்வி மற்றும் பொதுஅறிவு சார்ந்தும் பதிவுகள் செய்து வந்த நிலையில் ஒரு வாழ்வியல் தொடர் இடம் பெறுவது இதுவே முதல் முறை. இத்தொடர் பத்திகள் எப்போதும் இந்த வலைப்பூவிலேயே இருக்கும்.

உங்களுக்கு இப்பத்திகள் பயன்பட்டிருந்தால், நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் பகிருங்கள். ‘பகிர்வோம் அறிவை, அறிவில் செய்வோம் விரிவை’ என்பதுதான் இவ்வலைப்பூவின் நோக்கம் என்பதால் நல்லதொரு வாழ்வியல் பகிர்வைச் செய்த வகையில் மகிழ்கிறேன்.

மேலும் அறிவியல், உளவியல், சமூகவியல், கல்வியியல், ஆளுமை மேம்பாட்டியல் சார்ந்தும் தொடர்ந்து எழுத விழைகிறேன் உங்கள் அன்பான ஆதரவோடும், இப்பகிர்வுகள் உங்களுக்கு என்னென்றும் நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையுடனும்.

*****

No comments:

Post a Comment