Saturday, 6 June 2026

மூளைச் சுருளின் அன்வாண்ட்டட் பைல்களை டெலீட் செய்வது எப்படி?

மூளைச் சுருளின் அன்வாண்ட்டட் பைல்களை டெலீட் செய்வது எப்படி?

நம் மூளை எப்போதும் ஒரு ஓவர்லோடு ஆன ஹார்டு டிஸ்க் போல இருக்கிறது. வாட்ஸ்அப் மெசேஜ், ஆபீஸ் மெயில், இன்ஸ்டா ரீல்ஸ் எனத் தகவல்கள் நம்மைத் தாக்குகின்றன.

விளைவு?

சிஸ்டம் ஹேங் ஆகிறது.

இந்த ஹேங் ஓவரை எப்படித் தவிர்ப்பது?

இதற்கு நியூரோ சயின்டிஸ்ட்கள் சில வழிகளைச் சொல்கிறார்கள். அதைக் கொஞ்சம் பார்ப்போமா?

ஒரு நல்ல தூக்கம் உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் வாய்ப்பை இரண்டு மடங்காக்குகிறது. ஒரு நாளைக்கு 7 முதல் 10 மணி நேரத் தூக்கம் அவசியம். குளிர்ந்த, இருட்டான அறைதான் மூளைக்கு பிடிக்கும். பகல் தூக்கம் 40 நிமிடங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. அதற்கு மேல் போனால் சிஸ்டம் ஸ்லீப் மோடுக்குப் போய்விடும்!

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று நம் முன்னோர்கள் எப்போதோ சொல்லி விட்டார்கள். இப்போதும் அதுதான் பொன் செய்யும் மருந்து. சூப்பர் மார்க்கெட்டில் 50 வகை தானியங்கள், ட்ரிப் அட்வைசரில் 200 ஹோட்டல்கள் என ஒரு நாளைக்கு நம் மூளை இவ்வளவுதான் முடிவுகள் எடுக்க வேண்டும் என்று ஒரு லிமிட் இருக்கிறது. அதற்கு மேல் போனால் நியூரல் பேட்டிக் வந்துவிடும். அப்புறம் தவறான முடிவுகளை எடுப்போம்.

எல்லா விஷயத்திலும் பெஸ்ட் தேடாதீர்கள். ஓரளவுக்கு ஓகே என்கிற முடிவை எடுங்கள். முக்கியமான முடிவுகளுக்கு மூளைச் சக்தியை மிச்சப்படுத்துங்கள்.

சாவி எங்கே? கத்தரிக்கோல் எங்கே? என்று தேடுகிறோம். கார் சாவியைத் தேடுவது போல காரைத் தேடுவதில்லை, ஏன்? இதற்கான பதிலை நீங்களே கொஞ்சம் யோசியுங்கள்.

ஒரே பொருளைப் பல இடங்களில் பயன்படுத்தினால், இரண்டு மூன்று வாங்கி வையுங்கள். கிச்சனுக்கு ஒரு கத்தரிக்கோல், ஆபீஸிற்கு ஒன்று. வீட்டுக்குள் நுழைந்ததும் சாவியைத் தொங்கவிட ஒரு கீ ஹூக்.

பால் வாங்க வேண்டும் என்று ஞாபகம் வர வேண்டுமா? ஒரு காலி பால் பாக்கெட்டை வாசலில் போட்டு வையுங்கள். மூளைக்குத் தரும் வேலையைக் குறையுங்கள். இதை விசுவல் ரிமைண்டர் என்கிறார்கள்.

எப்போதும் எதையாவது கவனித்துக்கொண்டே இருக்காதீர்கள். ரயிலில் வேடிக்கை பார்க்கும்போது அல்லது குளிக்கும்போதுதான் அந்த யுரேகா மொமென்ட் வரும். இதுதான் மூளையின் கிரியேட்டிவ் மோடு. இதற்காக எப்போதும் ஒரு நோட்புக் கையில் இருக்கட்டும். அந்த நேரத்தில் தோன்றும் ஐடியாக்களை உடனே பிடித்துவிடுங்கள்.

எப்போதும் டிஜிட்டல் வேண்டாம்.  பேப்பர் மற்றும் பென்சில் பெஸ்ட். டிஜிட்டல் உங்கள் மூளையை உங்களுக்கே தெரியாமல் சோர்வடைய வைக்கும். பேப்பர் மற்றும் பென்சில் உங்கள் மூளையை ரீஜெனரேட் செய்யும். டிஜிட்டலில் நோட்ஸ் எடுப்பதை விடப் பேப்பரில் எழுதுவது மூளைக்குக் கூடுதல் தெளிவைத் தரும்.

மூளைக்குள் எல்லாவற்றையும் போட்டு வைக்காதீர்கள். உங்கள் வேலைகளை நான்காகப் பிரியுங்கள். அவையாவன,

1) இப்போதே செய்ய வேண்டியவை. மிக முக்கியமான வேலைகள்.

2) முக்கியமான வேலை, ஆனால் உடனே முடிக்க வேண்டியதில்லை. காத்திருக்கலாம். பொறுமையாகச் செய்ய வேண்டிய வேலைகள்.

3) இப்போது முக்கியமில்லை, ஆனால் படிப்படியாகச் செய்ய வேண்டிய வேலைகள்.

4) செய்யவே தேவையில்லாதவை. இந்த வேலைகளைத்தான் முதலில் களையெடுக்க வேண்டும். ஏனென்றால் இவை வேலைகளே அல்ல. ஆக இந்தக் களையெடுத்தலைத்தான் முதலில் செய்ய வேண்டும்!

ஒரே நேரத்தில் நாலு வேலை செய்வது திறமை என்று நினைக்காதீர்கள். அது உங்களை மெதுவாக்கும். எனவே, மல்டி டாஸ்க்கிங் என்ற மாயையில் விழாதீர்கள்.

மொபைல் நோண்டிக்கொண்டே டிவி பார்ப்பது மூளையைக் குழப்பும்.

டிவி பார்த்துக்கொண்டே படித்தால் அந்தத் தகவல் ஸ்ட்ரியட்டம் பகுதிக்குப் போகும்  அது திறமைகளைச் சேமிக்கும் இடம். டிவி பார்க்காமல் படித்தால் அது ஹிப்போகாம்பஸ் பகுதிக்குப் போகும். அது தகவல்களைச் சேமிக்கும் இடம்.

எனவே, ஒரு நேரத்தில் ஒரு வேலை. போரடிக்கும் வேலையாக இருந்தாலும், அதை முடித்துவிட்டு அடுத்ததற்குப் போங்கள்.

ஒரு மெயில் நோட்டிபிகேஷன் வரும்போது உங்கள் ஐக்யூ 10 புள்ளிகள் குறைகிறதாம்! இதைத்தான் நீங்களே விரும்பி ஏற்றுக் கொள்ளும் டெக்னாலஜி டார்ச்சர் என்கிறார்கள் நியூரோ சயின்டிஸ்ட்கள். மெயிலை ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் பாருங்கள், 50 முறை அல்ல!

மூளை ஒரு விஷயத்தில் முழுமையாக செட்டில் ஆக 50 நிமிடம் ஆகும். கடினமான வேலைகளுக்கு அந்த நேரத்தை ஒதுக்குங்கள். ஒவ்வொரு 90 நிமிடத்திற்கும் ஒரு பிரேக் எடுத்து 30 நிமிடம் நடப்பது அவசியம்.

அப்புறம் ஒரு முக்கியமான விசயம். வேலைகளைத் தள்ளிப்போடுதல் – இது சோம்பேறித்தனம் அல்ல, தன்னம்பிக்கை குறைவு என்கிறது ஆய்வு. தோற்றுவிடுவோமோ என்கிற பயத்தில்தான் வேலையைத் தள்ளிப்போடுகிறோம். இதை ப்ரோக்ராஸ்டினேஷன் என்கிறார்கள்.

இதற்கு என்னதான் தீர்வு என்றால், இந்த வேலை ஜெயிச்சாலும் தோற்றாலும் நான் நான் தான் என்று உங்களை நீங்களே தேற்றிக் கொள்ளுங்கள். வெற்றி பெற்றவர்களை விடத் தோல்வி கண்டவர்களிடம்தான் மூளை அதிகம் கற்றிருக்கிறது என்கிறார்கள் நியூரோ சயின்ட்ஸ்ட்கள்.

வாழ்க்கை என்பது ஒரு பெரிய அல்காரிதம். அதைச் சிக்கலில்லாமல் ரன் செய்ய வேண்டும் என்றால், தேவையில்லாத பைல்களை அடிக்கடி டெலீட் செய்ய வேண்டும். மூளை என்பது ஒரு ஸ்டோரேஜ் டிவைஸ் மட்டுமல்ல, அது ஒரு பிராசஸர். அதற்கு அதிக லோடு கொடுக்காதீர்கள்.

இன்று மாலை உங்கள் ஸ்மார்ட்போனை ஆப் செய்துவிட்டு, ஜன்னல் ஓரம் அமர்ந்து ஒரு பத்து நிமிடம் சும்மா இருங்கள். உங்கள் மூளைத் திரையில் ஓடும் தேவையற்ற பாப்அப் விளம்பரங்கள் மெல்ல மறையும். அதுதான் உண்மையான மெண்டல் கிளாரிட்டி!

*****

No comments:

Post a Comment