Saturday, 27 June 2026

ஆவிகளின் அரசாங்கம்

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 4

ஆவிகளின் அரசாங்கம்

மெசபடோமியா, எகிப்து என்று பார்த்துக் கொண்டே வந்தால் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனி அமானுஷ்ய வரலாறே இருக்கிறது. சீனாவை எடுத்துக் கொண்டால் அங்கு ஆவிகளுக்குத் தலபுராணமே இருக்கிறது.

இன்றைக்கு 3400 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கிமு 1400 வாக்கில் சீனாவில், ஷாங் வம்சத்து அரசர்களுக்குப் மரணம் என்பது ஒரு புல் ஸ்டாப் கிடையாது. அது வெறும் ஒரு டிரான்ஸ்பர்.

ஒருவர் இறந்துவிட்டால் அவர் நேராக குய் எனப்படும் ஆவியாக மாறிவிடுவார். இதுதான் சீனர்களின் அன்றைய நம்பிக்கை. இந்த ஆவிகளுக்கு ஏகப்பட்ட பசி, தாகம், மற்றும் ஈகோ இருக்கும். அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டியது பூமியில் இருக்கும் வாரிசுகளின் கடமை.

அப்படியே விட்டுவிட்டால்? அவ்வளவுதான்.

ஆபீஸ் மேனேஜர் கோபித்துக் கொண்டால் இன்க்ரிமென்ட்டை கட் செய்வது போல, இந்த மூதாதையர் பேய்கள் கோபித்துக் கொண்டால் வறட்சி, பஞ்சம், தலைவலி, காய்ச்சல் என்று குடும்பத்தையே காலி செய்துவிடுவார்கள்.

"இன்றைக்குப் போருக்குப் போகலாமா வேண்டாமா?"

"ராணிக்கு ஆண் குழந்தை பிறக்குமா?"

"நாளைக்கு மழை பெய்யுமா?" என இப்படி எந்தக் கேள்வி இருந்தாலும், அதை நேரடியாக அன்று ஆவிகளிடம் இமெயில் அனுப்பிக் கேட்க முடியாதுஎன்பதால் சீனர்கள் ஒரு விசித்திரமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்கள்.

அதன்படி ஆமை ஓடுகளையோ அல்லது மாடுகளின் தோள்பட்டை எலும்புகளையோ எடுத்துக் கொள்வார்கள். அதில் தங்களின் கேள்விகளைச் செதுக்குவார்கள். பிறகு, ஒரு பழுக்கக் காய்ச்சிய இரும்பு கம்பியை அந்த எலும்பின் மீது வைப்பார்கள்.

வெப்பம் தாங்காமல் அந்த எலும்பு டக் என்று வெடித்துப் பிளக்கும். அந்தப் பிளவுகளின் வடிவத்தை வைத்து, "ஆவிகள் 'ஓகே' சொல்லிவிட்டன" என்றோ "இல்லை, கோபமாக இருக்கின்றன" என்றோ ஜோசியர்கள் டீகோட் செய்வார்கள்.

ஷாங் வம்சத்து மக்கள் தங்களின் மூதாதையர் பேய்களை எப்போதும் வெல்வெட் கைகளில் கையாண்டார்கள். பேய்களுக்குப் பசித்தால் ஆபத்து என்பதால், வெண்கலப் பாத்திரங்களில் பிரமாதமான உணவு, ஒயின் போன்றவற்றை நிரப்பிப் படைத்தார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், அது பேய்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வகையான அன்பான லஞ்சம். நீங்கள் எவ்வளவு ராயலாகப் படைக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு பேய்கள் உங்களைக் காப்பாற்றும் என்ற விசித்திரமான லாஜிக் அது.

அறிவியல் வளராத அந்தக் காலத்தில், தற்செயலாக நடக்கும் நல்லவற்றுக்கும் கெட்டவற்றுக்கும் ஏதோ ஒரு காரணம் தேட மனித மூளை ஆசைப்பட்டது. சீனர்கள் அதற்கு ஆவிகள் என்று பெயரிட்டார்கள்.

இன்றைக்கு நாம் கம்ப்யூட்டர் க்ராஷ் ஆனாலோ, மொபைல் சிக்னல் கிடைக்கவில்லை என்றாலோ கஸ்டமர் கேரைத் திட்டி மெயில் அனுப்புகிறோம் அல்லவா?

அன்று ஷாங் வம்சத்துச் சீனன், தனக்குக் காய்ச்சல் வந்தால் "என் தாத்தாவின் ஆவிக்கு ஏதோ கோபம்" என்று ஆமை ஓட்டைத் தீயில் காட்டிப் பதில் தேடிக் கொண்டிருந்தான்.

தொழில்நுட்பம்தான் மாறியிருக்கிறது. மனிதனின் பயமும், யாராவது நம்மைக் காப்பாற்ற மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பும் அப்படியேதான் இருக்கிறது!

சீனாவின் விசயத்தை இத்தோடு முடித்து விடுவதற்கில்லை. அதற்கு முன்பே சுமார் 4200 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அமானுஷ்ய புராண வரலாறும் சீனாவுக்கு இருக்கிறது.

அது கிமு 2200. அங்கே கூகுள் மேப்ஸ் கிடையாது. வெதர் அப்ளிகேஷன் கிடையாது. ‘நாளை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும்’ என்று சொல்ல வானிலை மையம் கிடையாது. ஆனால், சீனா முழுக்க ஒரே ஒரு நதி. அதுதான் மஞ்சள் நதி.

இன்றைக்கு சென்னை மழையற்கே நாம் அலறுகிறோமே, அன்று அந்த மஞ்சள் ஆறு நினைத்தால் ஒரு நாடே காலி. திடீரென்று உடைந்த அணையாய் தண்ணீர் ஊருக்குள் புகுந்துவிடும். மக்கள் மரங்களின் மீதும் மலைகளின் மீதும் ஏறி நின்று, "ஆவிகளே, எங்களைக் காப்பாற்றுங்கள்!" என்று கதறிக் கொண்டிருந்த காலம் அது.

அப்போதுதான் மக்களைக் காப்பாற்ற ஒரு மனிதர் என்ட்ரி ஆகிறார். ஆவர்தான் யூ. ஆங்கிலத்தில் you என்று சொல்லும் யூ அல்ல, பெயரே ‘யூ’தான்.

யூ சாதாரண ஆள் இல்லை. இன்றைய ஐ.ஐ.டி சிவில் இன்ஜினியரிங் படித்தவர்கள் செய்யத் தயங்கும் ஒரு மெகா ப்ராஜெக்ட்டை அவர் கையில் எடுத்தார். அதுதான் மஞ்சள் ஆற்றின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது.

அதற்கு முன்னால் அவர் அப்பா குன் இதே ப்ராஜெக்ட்டை கையில் எடுத்து பெயிலியர் ஆகி, தேவர்களிடம் மரண தண்டனை வாங்கியிருந்தார்.

அப்பாவிடம் இல்லாத ஒரு விசேஷ டெக்னாலஜி யூவிடம் இருந்தது. அதுதான் அமானுஷ்யக் கூட்டணி!

யூ நேராகப் போனார். ஆற்றின் அடியில் இருந்த ஆவிகளுடனும், அசுரர்களுடனும் டீல் பேசினார்.

டீல் ஒர்க் அவுட் ஆக, ஒரு பெரிய மஞ்சள் டிராகன் தன் வாலால் தரையைக் கீறிக்கொண்டே போனது. அதுதான் யூவுக்கு ரூட் மேப்.

டிராகனுக்குப் பின்னால் ஒரு பெரிய கருப்பு ஆமை தன் முதுகில் அமானுஷ்ய சக்தியுள்ள மண்ணைச் சுமந்து கொண்டு வந்தது. எங்கே தண்ணீர் அதிகமாக இருக்கிறதோ, அங்கே அந்த மண்ணைப் போட்டால், அது ஸ்பாஞ்ச் போலத் தண்ணீரை உறிஞ்சி, தானாகவே வளர்ந்து பெரிய மலையாக மாறியது!

யூ என்ன செய்தார் தெரியுமா?

தண்ணீரைத் தடுத்து நிறுத்தாமல், அந்த அமானுஷ்ய ஆற்றின் ஆவிகளின் உதவியோடு மலைகளைத் துளைத்து கடலுக்குப் புதிய பாதைகளை அமைத்தார்.

இந்த அமானுஷ்யப் பணியில் யூ எவ்வளவு மும்முரமாக இருந்தார் என்றால், 13 வருடங்கள் தன் வீட்டின் வாசலைக் கடந்து போனாராம். உள்ளே மனைவியும் குழந்தையும் இருந்தும், தன் கடமையிலிருந்து விலகவில்லை.

ஒருவேளை வீட்டுக்குள் போனால் ஆவிகளின் சாபம் வேலை செய்யாமல் போய்விடுமோ என்ற பயம் அவருக்குள் இருந்திருக்கலாம்.

ஆமை மண் சுமப்பதாவது, டிராகன் வழி காட்டுவதாவது? இதெல்லாம் சயின்ஸா? என்ன விஜயராமன் இதெல்லாம்? சும்மா இப்படி கதை விடுகிறாய்? என்று நீங்கள் கேட்கலாம்.

அன்று மனிதனுக்குப் பெரிய தொழில்நுட்பம் கிடையாது. ஆனால், மஞ்சள் ஆற்றின் வெள்ளத்தைத் திசைதிருப்பிய யூ என்பவன் ஒரு பிரமாதமான இன்ஜினியர் என்பது நிஜம்.

ஒரு சாதாரண மனிதனால் இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய முடியாது என்று அன்றைய மக்கள் நினைத்தார்கள். எனவேதான், அவனுக்குப் பின்னால் ஒரு டிராகனையும், ஒரு மந்திர ஆமையையும் கிராபிக்ஸ் கார்டு போலச் சொருகி, அதை ஒரு அமானுஷ்யக் காவியமாக மாற்றிவிட்டார்கள்!

சுருக்கமாகச் சொன்னால், மனிதனின் அசாத்தியமான உழைப்புக்கு அன்று அவர்கள் கொடுத்த சூப்பர் நேச்சுரல் கலரிங்தான் இந்தச் சீனக் கதைகள்! இப்போது உங்களுக்கு ஓ.கே.தானே? அப்புறம், இன்னும் தேட வேண்டிய அட்ரஸ்கள் நிறைய இருக்கின்றன.

-  அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment