Friday, 2 February 2024

NMMS தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான பயனுள்ள குறிப்புகள்!

NMMS தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான பயனுள்ள குறிப்புகள்!

தேர்வு நாள் : 03-02-2024

NMMS தேர்வு எழுதும் மாணவர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்திற்குச் செல்ல வேண்டும். இதனால் பதற்றம் இன்றித் தேர்வை எழுதலாம். அவர்களுக்கான தேர்வு கால அட்டவணை :

தேர்வு மையத்திற்குச் செல்லும் நேரம் :  காலை 8.30 - 9.00

இனி மற்ற கால அட்டவணை குறித்த விவரங்களைக் காண்போம்.

9.20 - 9.25 தேர்வறைக்குச் செல்லுதல்

 9.25 - 11.00 : MAT

11.00 - 11. 25 : இடைவேளை

11. 25 - 1.00 : SAT

தேர்வு முடிந்தவுடன் கவனமாக OMR தாளினை தேர்வறைக் கண்காணிப்பாளரிடம்  வழங்கிய பின், இரு வினாத்தாள்களையும் எடுத்துக் கொண்டு வெளியே வரலாம்.

முதல் முறை OMR தாளினை பயன்படுத்துபவர்கள்  விடைப் பகுதியில் சரியாக வட்டமாக Shade செய்யவும்.

கணினி மதிப்பீடு என்பதால் இரு விடையை Shade செய்தாலோ அல்லது ஒயிட்னர் மூலம் அழித்து வேறு ஒரு விடை Shade  செய்தாலோ அது தவறாக எடுத்துக் கொள்ளப்படும்.

OMR தாளில் பெயர் - புகைப்படம் விவரம் அச்சிடப்பட்டுள்ளதால், செய்ய வேண்டியவை கையெழுத்து இடுதல் மற்றும் அறை கண்காணிப்பாளர் Present shade செய்து கையெழுத்து பெறுதல் மட்டுமே.

வினாத்தாளில் உட்பகுதிகளில் குறித்தல் கூடாது. இறுதி இரு பக்கம் Rough work செய்து பார்க்க வெள்ளைத் தாள் இணைக்கபட்டுள்ளது. அதில் செய்து பார்க்கலாம்.

OMR தாளினை கருப்பு பால் பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்தி shade செய்ய வேண்டும்.

பொதுவாக செய்யும் தவறு : 5 வது கேள்வி தெரியாததால் Shade செய்யாமல் விட்டு விட்டு 6வது கேள்வி எழுதும் போது 5வது கேள்வியில் shade செய்து விடக் கூடும்.

இதனால் அடுத்து வரும் அனைத்து வினாக்களுக்கும் தவறாக Shade செய்யும் வாய்ப்பு உண்டாகும்.

எனவே ஒவ்வொரு வினாவிற்கும் விடையளிக்கும் போது வினா எண் பார்த்து shade செய்யவும்.

180 வினாக்களுக்கு விடையளிக்க 180 நிமிடங்கள் இருப்பதால் ஒரு வினாவிற்கு 1 நிமிட கால அளவு எடுத்துக் கொள்ளலாம். நீண்ட நேரம் ஒரே வினாவிற்கு தீர்வு காணாமல் அடுத்த கேள்விக்கு செல்லுதல் அவசியம்.

MAT பகுதி விடையளிக்கும் போது அனைத்து வகையிலும் யோசித்து முயற்சிக்கவும்.

வினாத்தாளில் கடைசி பக்கத்தில் (Rough work) எழுத வேண்டிய இடத்தில் பின்வருவனவற்றை முன்கூட்டியே எழுதி வைத்துக் கொள்ளலாம். இதனால் சில வினாக்களுக்கு விரைவில் தீர்வு காணலாம்.

ஆங்கில ALPHABET சார்ந்த வினாக்கள் அதிகம் இடம் பெறுவதால்

ABCDE... எழுதி 1234...

ZXYWV ... எழுதி 1234...

8 திசைகள் எழுதிக் கொள்ள வேண்டும்

வர்க்க எண் 20 வரை

கன எண் 10 வரை

பகா எண்கள் 30 வரை

பின்வரும் சில குறிப்புகளை நினைவில் கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

காலம் கணக்குகள் மட்டு

BODMAS விதி

இரு எண் கூடுதல் மூன்றாவது எண்

மூன்று எண் கூடுதல் நான்காவது எண்

முதல் எண் - மூன்றாவது எண்

இரண்டாம் எண் - நான்காம் எண் தொடர்பு

வரிசை கணக்குகளில் இடது , வலது

கடிகார திசை - கடிகார எதிர் திசை

வர்க்கம் + 1 / வர்க்கம் - 1

கனம் + 1 / கனம் - 1

இரு எண் பெருக்கல் மூன்றாவது எண்

எண்களின் மடங்கு எ. கா. x 3 , x 4

எண்களின் அடுக்கு

எ. கா. 2 x 2 , 2 x 2 x 2 , ...

பகா எண்களின் கூடுதல்

எண்கள் / எழுத்துகளின் கண்ணாடி பிம்பங்கள்

மேலும் பின்வரும் குறிப்புகளில் கவனமாக இருப்பதும் அவசியமாகும்.

SAT கூற்று காரணம் கேள்விகள்

பொருத்துக விடைகள்

எ. கா: i - a , ii - c , iii - d , iv - b

தவறான கூற்று எது ? என்ற கேள்விக்கு,

கேள்வியை சரியாக கவனிக்காமல் சரியான 3ல் ஒன்றை டிக் செய்வது

இயன்றவரை சிந்தித்து விடை தரவும்

இறுதி 10 நிமிடத்தில் விடுபட்ட அனைத்து வினாக்களையும் shade செய்யவும்.

Minus மதிப்பெண் இல்லை. எனவே அனைத்து வினாக்களுக்கும் விடை தருவது அவசியம்.

ஒவ்வொரு மதிப்பெண்ணும் அவசியம்.

எதிர்கால போட்டித் தேர்வுகளுக்கு விதையாக இத்தேர்வு அமையும்.

தேர்வெழுதும் மாணவர்களுக்கு நல்வாழ்த்துகள்!

*****

Thursday, 1 February 2024

ரத்தசோகையை எப்படிப் போக்கிக் கொள்வது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்!

ரத்தசோகையை எப்படிப் போக்கிக் கொள்வது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்!

ரத்தசோகை என்பது ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவால் ஏற்படுவது. ஹீமோகுளோபின் குறைவு இரும்புச் சத்து குறைவால் ஏற்படுவது. இரும்புச் சத்துள்ள உணவை முறையாக எடுத்துக் கொள்வதன் மூலமாக ரத்தசோகையைப் போக்கிக் கொள்ள முடியும்.

ரத்தசோகை இருக்கும் மாணவர்கள் சோர்வாகக் காணப்படுவர். அவர்களால் கல்வியில் கவனம் செலுத்திப் பயில முடியாது. பதற்றம், படபடப்பு போன்றவை ஏற்படவும் ரத்தசோகை காரணம். ரத்தசோகை தொடரும் பட்சத்தில் அது பல உடல்நலக் குறைபாடுகளை உண்டாக்கும். எனவே குழந்தைப் பருவத்திலேயே ரத்தசோகையைப் போக்கிக் கொள்ளும் வகையில் ஆரோக்கியமான உணவு முறையை அமைத்துக் கொள்வது நலமாகும் மற்றும் பலமாகும்.

உடனடியாக ரத்தசோகையைப் போக்கிக் கொள்ள தினந்தோறும் முருங்கைக்கீரைச் சாற்றினையும் வாரத்திற்கு இருமுறை ஆடு அல்லது கோழி இறைச்சியில் உள்ள ஈரலை எடுத்துக் கொள்வது பெரிதும் உதவும். ரத்தசோகையைப் போக்கிக் கொண்ட பின் மீண்டும் ரத்தசோகை ஏற்படாமல் இருக்க உணவை ஆரோக்கியம் நிறைந்த வகையில் கீழ்கண்ட உணவு வகைகள் நிறைந்ததாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ü எள் உருண்டை,

ü கம்பு உருண்டை,

ü உளுத்தங்களி,

ü நெல்லிக்காய் சாறு,

ü கம்பங்கூழ்,

ü முருங்கைக் கீரை மற்றும் பசலைக் கீரை,

ü முட்டை மற்றும் பால்,

ü கோழி மற்றும் ஆட்டு இறைச்சியில் உள்ள ஈரல்,

ü பழங்கள் மற்றம் அனைத்து விதமான காய்கறிகள்,

ü நாட்டு வெல்லம் மற்றும் கருப்பட்டி,

ü பேரீச்சம் பழம்,

ü கேழ்வரகு கஞ்சி மற்றும் அடை,

ü கடலை மிட்டாய்,

ü கறிவேப்பிலை துவையல்.

முக்கியமான உணவை வீட்டில் சமைத்து உண்ணுங்கள். கடைகளில் வாங்கி உண்ணும் துரித உணவுகளைத் தவிருங்கள். ஏனென்றால் துரித உணவில் இரும்புச்சத்து இருப்பதில்லை. மருந்து, மாத்திரைகள் மூலமாக ரத்தசோகையைப் போக்கிக் கொள்வதையும் தவிருங்கள். ஏனென்றால் உடல் உறுப்புகள் மருந்து, மாத்திரைகளிலிருந்து இரும்புச் சத்தை எடுத்துக் கொள்ள பழகி விட்டால் தொடர்ந்து நீங்கள் மருந்து, மாத்திரைகள் மூலமாகவே இரும்புச்சத்துக் குறைபாட்டைச் சரி செய்ய வேண்டியிருக்கும். அது சரியான முறையாகாது. நாம் உண்ணும் ஆரோக்கியமான உணவின் மூலமே இரும்புச்சத்தைப் பெறுவதே சரியான முறையாகும்.

ஆரோக்கியமான உணவின் மூலமாக ரத்தசோகை இல்லாமல் வாழுங்கள். இந்தப் பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிர்ந்து உதவுங்கள். ஆரோக்கியமான தலைமுறை உருவாக இந்தச் செய்தியை அனைவரும் அறிந்திருப்பது அவசியமாகும்.

*****

 

Monday, 29 January 2024

பிட்காயினின் மென்பொருளை அறிந்து கொள்ள…

பிட்காயினின் மென்பொருளை அறிந்து கொள்ள…

2016க்குப் பிறகு பரபரப்பாக உயர ஆரம்பித்து 2018இல் ஓர் உச்சம் தொட்டு பின்னர் மதிப்பு குறைந்து, மீண்டும் உயரத் தொடங்கி 2021இல் புதிய உச்சத்தை அடைந்து, மீண்டும் மிகப்பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து தற்போது உயரத் தொடங்கியிருக்கிறது பிட்காயின். உலகெங்கும் பிட்காயினில் முதலீடு செய்பவர்கள் அதிகம். அது சரி! எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த பிட்காயின்? பிட்காயின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது ப்ளாக்செயின் தொழில்நுட்பம். ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தில் இயங்கும் பிட்காயினின் மென்பொருளை அறிந்து கொள்ள வேண்டுமானால் கீழே உள்ள தளத்தைச் சொடுக்கவும்.

 https://github.com/bitcoin/bitcoin

*****

Sunday, 28 January 2024

ஜனவரி 2024க்கான சிறார் திரைப்படம் ‘ஹரிதாஸ்’

ஜனவரி 2024க்கான சிறார் திரைப்படம் ‘ஹரிதாஸ்’

ஜனவரி 2024 மாதத்திக்கான சிறார் திரைப்படமாக ‘ஹரிதாஸ்’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் நேரடித் தமிழ்த் திரைப்படமாகும்.

ஆட்டிசம் எனும் கற்றல் குறைபாட்டைப் பற்றி பேசும் இத்திரைப்படத்தை ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ளார்.

2013 இல் வெளியான இத்திரைப்படத்தில் கிஷோர், பிரித்விராஜ், சினேகா, சூரி, பிரதிப் ரவட் போன்றோர் நடித்துள்ளனர்.

கிஷோர் காவலராகவும் (என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்) ஆட்டிச பாதிப்புள்ள குழந்தையின் தந்தையாகவும் நடித்துள்ளார்.

பிரித்விராஜ் ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்துள்ளார்.

சினேகா மாநகராட்சிப் பள்ளி ஆசிரியையாகவும் ஆட்டிசம் பாதித்த குழந்தை மேல் உள்ள நேசம் கொண்டவராகவும் நடித்துள்ளார்.

சூரி நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

பிரதிப் ரவட் வில்லனாக நடித்துள்ளார்.

காவலராகத் தொழில் வாழ்க்கையின் நெருக்கடிகளுக்கு இடையே ஆட்டிசம் பாதித்த தன் குழந்தையின் தேவையைக் கிஷோர் எப்படி நிறைவு செய்ய முயற்சிக்கிறார் என்பதே இத்திரைப்படத்தின் திரைக்கதையாகும்.

குதிரையைக் கண்டு உற்சாகம் அடைவதைக் கண்டு ஓடுவதில் தனது குழந்தைக்கு இருக்கும் ஆர்வத்தைக் கண்டறியும் கிஷோர் பிரித்விராஜை ஓட்டப்பந்தய வீரனாக்க முயல்கிறார்.

அந்தக் கனவு நிறைவேறும் இடத்தில் நிறைவில் வில்லன்களைத் தீர்த்துக் கட்டி அவரும் இறக்கிறார். சினேகா அக்குழந்தையைத் தாங்கிப் பிடிக்கும் தாயாகக் கிஷோரின் இடத்தை நிறைவு செய்கிறார்.

11வது சென்னை பன்னாட்டுத் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் இரண்டாவது சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டது. குழந்தை நட்சத்திரத்திற்கான சிறப்பு விருதும் இத்திரைப்படத்திற்குக் கிடைத்துள்ளது.

இத்திரைப்படத்தை யூடியூப்பில் காண கீழே உள்ள இணைப்பை இயக்கவும். (ப்ளே செய்யவும்)

*****

Saturday, 27 January 2024

தமிழகத்தின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு சாத்தியம்தானா?

தமிழகத்தின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு சாத்தியம்தானா?

அண்மையில் சென்னையில் 2024 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. அம்மாநாட்டில் தமிழக முதல்வர் தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலராக மாற்றுவதே அரசின் இலக்கு என்று அறிவித்தார். உண்மையில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது தமிழகத்திற்குச் சாத்தியம்தானா?

இதற்கான பதிலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பதிலிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

ரகுராம் ராஜன் என்ன சொல்கிறார் தெரியுமா?

இந்தியாவில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு என்பது நான்கு சதவீதமாக மட்டுமே உள்ளது. இந்த நான்கு சதவீதம் என்பது 15 சதவீதமாக மாறினால்தான் பெரிய அளவில் வளர்ச்சியும் வேலை வாய்ப்பும் உண்டாகும். உற்பத்தித் துறையை வளர்க்க கூடுதல் சலுகை தருவதில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடாது. சலுகைகளால் மட்டுமே வளர்ச்சியைக் கொண்டு வந்து விட முடியாது.

முன்பு நம்மிடம் 2000 நபர்கள் பணிபுரியக் கூடிய ஆலைகள் மட்டுமே இருந்தன. தற்போது 20000 நபர்கள் பணி புரியக் கூடிய ஆலைகள் நம்மிடம் இருக்கின்றன. தமிழகம் ஒரு டிரில்லியன் டாலர் என்ற வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஆண்டுக்கு தமிழகம் 18 சதவீதம் வளர்ச்சி அடைய வேண்டும்.

தமிழகத்தின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது சாத்தியம்தான். ஆனால் அதற்கு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 18 சதவீதம் வளர்ச்சி அடைய வேண்டும். ஆண்டுக்கு 18 சதவீதம் பொருளாதாரம் வளர்ச்சியடையும் அளவிற்குத் தமிழகம் திட்டமிட்டால் மட்டுமே 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கைத் தமிழகம் எட்டிப் பிடிக்க முடியும்.

*****

Thursday, 25 January 2024

பயிற்சி பெற்ற Models, Datasets, Applications பற்றி அறிந்து கொள்ள …

பயிற்சி பெற்ற Models, Datasets, Applications பற்றி அறிந்து கொள்ள …

Machine Learning இல் பயிற்சி பெற்ற மாதிரிகள், தகவல் தொகுப்புகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்ள, கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://huggingface.co/

*****

Monday, 22 January 2024

உங்கள் பூனைகளைப் பற்றி அறிந்து கொள்ள …

உங்கள் பூனைகளைப் பற்றி அறிந்து கொள்ள …

பூனைகளைச் செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்கள் தங்களின் பூனையைப் பற்றியும், தங்கள் பூனையின் உடல் நிலை குறித்தும் அறிந்து கொள்ள ஒரு தளம் உள்ளது. இத்தளத்தில் உங்கள் பூனையைப் படமெடுத்து பதிவேற்றினால் போதும், உங்கள் பூனையின் தற்போதைய நிலை குறித்து அனைத்து விவரங்களையும் இந்தத் தளம் சொல்லி விடும். இத்தளத்திற்குச் செல்ல, கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.sylvester.ai/

*****