கராத்தே பயிற்சி
பெறும் மாணவிகளுக்கான பட்டியல் தயார் செய்து அனுப்புவதற்கானப் படிவம். Excel மற்றும்
PDF ஆகிய இருவடிவங்களில் தேவையானதைப் பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே உள்ள இணைப்புகளைச்
சொடுக்கவும்.
Monday, 23 September 2019
Sunday, 22 September 2019
தமிழா! நினது நீர் நிலைகள்!
குளம், குட்டை, ஆறு, ஓடை, வாய்க்கால்,
ஏரி, கண்மாய், கிணறு, கடல் - இப்படி நாம் அறிந்த
நீர் நிலைகளின் பெயர்கள் குறைவு. இதுவும் காலப்போக்கில் குளம், குட்டைகள், ஏரிகள்
இல்லாமல் போய் இன்னும் குறைய வாய்ப்பு இருக்கிறது. அண்மையில் நீர்நிலைகள் தொடர்பாக
தமிழில் புழங்கும் நாற்பத்துக்கும் மேற்பட்ட பெயர்களை அறிந்த போது அசந்து போனேன்.
அப்பெயர்களைத் தமிழின் செழுமைக்கும், தமிழர்களின் நீர் மேலாண்மைக்கும் மிகச் சிறந்த
சான்றுகளாகக் கருதுகிறேன்.
நீரே வளமைக்கு ஆதாரம். தமிழின் வளமைக்கும்
நீர் நிலைகள் குறித்த இப்பெயர்கள் பெரிய சான்றாதாரம்.
திருக்குறளில் 'ஊருணி' என்ற நீர் நிலையின்
பெயரைக் காணலாம்.
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. (குறள் எண் : 215)
என்ற குறளில்
'ஊருணி' என்ற அச்சொல்லைக் காணலாம். தமிழின் வளமான அச்சொற்களைக் காப்பதற்காகவேனும்
நீர்நிலைகளை நாம் காக்கலாம் என்று அச்சொற்கள் ஒவ்வொன்றையும் படிக்கும் போது தோன்றியது.
உங்களுக்கும் அப்படித் தோன்றலாம். படித்துப் பாருங்கள். இவையன்றி உங்கள் பகுதியில்
புழங்கும் இன்னபிற சொற்களும் இருக்கக் கூடும். அப்படி இருப்பின் அவை பற்றிப் பின்னூட்டம்
இடுங்கள். இப்பட்டியலில் கூடுதல் வரவாகட்டும்.
1. அகழி,
2. அருவி,
3. ஆறு,
4. இலஞ்சி,
5. ஆழிக்கிணறு,
6. உறைகிணறு,
7. ஊருணி,
8. ஊற்று,
9. ஏரி,
10. ஓடை,
11. கட்டுக்கிணறு,
12. கடல்,
13. கண்மாய்,
14. கலிங்கு,
15. கால்,
16. கால்வாய்,
17. குட்டம்,
18. குட்டை,
19. குண்டம்,
20. குண்டு,
21. குமிழி,
22. குமிழி
ஊற்று,
23. குளம்,
24. கூவம்,
25. கூவல்,
26. வாளி,
27. கேணி,
28. சிறை,
29. சுனை,
30. சேங்கை,
31. தடம்,
32. தனிக்குளம்,
33. தாங்கல்,
34. திருக்குளம்,
35. தொடுகிணறு,
36. தெப்பக்குளம்,
37. நடைகேணி,
38. நீராழி,
39. பிள்ளைக்
கிணறு,
40. பொங்கு
கிணறு,
41. பொய்கை,
42. மடு,
43. மடை,
44. மதகு,
45. மறுகால்,
46. வலயம்,
47. வாய்க்கால்.
*****
Friday, 20 September 2019
அன்றன்றே அன்றன்றை முடிப்போம் / இன்று ஒரு கதை
ஒரு காட்டில் ஒரு சிங்கம் இருந்தது.
அதே காட்டில் நான்கு எருதுகளும் இருந்தன.
கொழுகொழுவென்று இருந்த எருதுகளைப் பார்த்த
சிங்கத்துக்கு எருதுகளைச் சாப்பிட ஆசை உண்டானது.
நான்கு எருதுகளும் ஒன்றாக மேய்ந்து கொண்டிருக்கும்
நேரமாகப் பார்த்து எருதுகளைச் சாப்பிடப் போனது சிங்கம்.
சிங்கத்தைப் பார்த்த நான்கு எருதுகளும்
அதை முட்டித் தூக்கியதில், காட்டுக்கு வெளியே பஞ்சாய்ப் பறந்து போய் விழுந்தது.
காட்டுக்கு வெளியே விழுந்த சிங்கம் யோசித்தது.
எருதுகள் தனித்தனியாய் மேயும் போது வேட்டையாடிச்
சாப்பிடுவது என தீர்மானித்தது.
அப்படியே தனித்தனியாய் எருதுகள் மேய்ந்த
போது ஒவ்வொன்றாய் வேட்டையாடிச் சாப்பிட்டது.
தனித்தனியாய் இருந்த எருதுகளை சிங்கம்
அசால்ட்டாய் வேட்டையாடி, ஆசை தீர சாப்பிட்டது.
படிப்பில் நீங்கள் சிங்கமாக இருக்கலாம்.
பாடங்கள் எருதுகளைப் போல இருக்கலாம்.
எருதுகளை மொத்தமாய் வேட்டையாட நினைத்தால்
நீங்கள் சிங்கமாகவே இருந்தாலும் தூக்கி வீசப்படுவீர்கள்.
ஒவ்வொன்றாய் வேட்டையாடினால் மொத்த எருதுகளையும்
வேட்டையாடி முடிப்பீர்கள்.
படிப்புச் சிங்கங்களே! நமது பாட எருதுகளும்
அப்படித்தான்! மொத்தமாய்ச் சேர்த்து வைத்துப் படிக்க நினைத்தால் பாடங்கள் உங்களை விழுங்குவது
போல இருக்கும். ஒவ்வொன்றாய்ப் படிக்கும் போது பாடங்களை நீங்கள் விழுங்குவது போல
இருக்கும்.
அன்றன்று படிக்க வேண்டியதை அன்றன்றே முடிப்போம்!
பாடங்கள் ஒவ்வொன்றையும் ஆசை தீர வேட்டையாடி ருசிப்போம்!
*****
கதையின் யூடியூப் இணைப்பிற்குக் கீழே
சொடுக்கவும் :
Wednesday, 18 September 2019
உணவுக் கடை வைப்போமா? / எளிய கணித அணுகுமுறைகள்
உணவுக் கடை வைப்போமா? / எளிய கணித அணுகுமுறைகள்
மாணவர்களைப் பெருக்கல் வாய்பாட்டைப் படிக்க
வைப்பதும் அதை மனப்பாடம் செய்ய வைப்பதும் ஒரு வகைச் சவால்தான். ஏன் அவர்கள் வாய்பாட்டை
நன்றாகப் படித்து மனதில் பதிய வைக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை உணர செய்து விட்டால்
அவர்களாகவே வாய்பாட்டைப் படித்து மனதில் பதிய வைத்துக் கொண்டு விடுவார்கள். அதற்கான
செயல்பாடுதான் இந்த 'உணவுக் கடை வைப்போமா?' என்ற செயல்பாடு.
வகுப்பறைக்குச் சென்றதும் நான் கரும்பலகையில்
இப்படி எழுதுகிறேன்.
"இன்றைய உணவு விலை விவரம்
இட்டிலி - ரூ. 4
தோசை - ரூ. 8
காபி - ரூ. 9"
- இப்படி எழுதி விட்டு மாணவர்களைப்
பார்த்து இன்று நான் இரண்டு இட்டிலி, ஒரு தோசை, ஒரு காபி சாப்பிட்டேன் என்றால் நான்
எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று புரியாததைப் போல தலையைச் சொரிகிறேன். மாணவர்கள்
நான் சாப்பிட்ட கணக்கைக் கொண்டு ரூ. 25 என்று கூறுகிறார்கள். ஆசிரியர் கஷ்டப்படுவதை
எந்த மாணவர்களால் பொறுக்க முடியும் என்பதால் உடனடியாக கஷ்டப்பட்டாவது பெருக்கிக் கூட்டி
விடையைச் சொல்லி விடுகிறார்கள் பிள்ளைகள்.
இப்போது நான் மாணவர்களைப் பார்த்துச்
சொல்கிறேன். "இப்போது நான் சாப்பிட்டு விட்டேன். நீங்களும் உங்கள் இஷ்டத்துக்குச்
சாப்பிட்டு விட்டு எவ்வளவு ரூபாய்க்குச் சாப்பிட்டீர்கள்? என்ற கணக்கைச் சொல்லுங்கள்!"
என்கிறேன்.
ஒரு மாணவர் எழுந்திரித்து, "அய்யா!
நான் நான்கு இட்டிலி, மூன்று தோசை, இரண்டு காபி சாப்பிடுகிறேன்!" என்று சொல்லி
விட்டு, "நந்நான்கு பதினாறு, மூவெட்டு இருபத்து நான்கு, இரண்டொன்பது பதினெட்டு
ஆக ஐம்பத்தெட்டு" என்கிறார். இதை அவர் மெதுவாக சொல்வது என்றாலும் அதற்கான காலத்தை
அவருக்குத் தந்து நான் காத்திருக்கிறேன்.
இப்படியே ஒவ்வொரு மாணவராக இட்டிலி, தோசை,
காபியை இஷ்டத்துக்குச் சாப்பிட்டு விட்டு கணக்கைச் சொல்கிறார்.
திடீரென ஒரு மாணவர் எழுந்திரித்து,
"நான் நூறு இட்டிலி, ஐம்பது தோசை, இருபத்தைந்து காபி!" என்று சொல்லி அதற்கும்
கணக்கு சொல்லி விடையைச் சொல்கிறார்.
வகுப்பறை வேடிக்கையாக அதே நேரத்தில் வினோதமாகப்
போகிறது. அன்றிலிருந்து கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளுக்காக நாங்கள்
கடை வைக்க ஆரம்பித்து விட்டோம்.
உணவுக் கடையில் ஆரம்பித்த நாங்கள் பல்வேறு
கடைகளை வைத்துக் கொண்டே போகிறோம்.
நீங்களும் உணவுக் கடை வைக்கிறோம். வித
விதமாக சாப்பிடுகிறோம்.
ஜவுளிக் கடை வைக்கிறோம். வித விதமாக உடுத்துகிறோம்.
கடை வைத்தால் போதும் கணக்கிற்கான விடையை
மாணவர்களே கண்டுபிடித்துச் சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
இந்த எண்ணோடு இந்த எண்ணைக் கூட்டு, இந்த
எண்ணைக் கழி, இந்த எண்ணைப் பெருக்கு, இந்த எண்ணை வகுத்துப் பார் என்று சொல்வதை விட
இம்முறை மாணவர்களை எளிமையாக கூட்டச் செய்கிறது, பெருக்கச் செய்கிறது. மாணவர்கள் யோசிக்க
ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் எங்கே யோசிக்க ஆரம்பிக்கிறார்களோ அங்கேயே அவர்களின் கற்றல்
வெற்றி பெற்றதாகி விடுகிறது. அதைத் தாண்டி எதையும் ஆசிரியர் சொல்ல வேண்டிய அவசியம்
இல்லாமல் அவர்களாகவே சந்தேகங்களைக் கேட்டுக் கேட்டுக் கற்றுக் கொள்கிறார்கள்.
நாங்கள் கடை வைத்து விளையாடு இம்முறையை
'கணக்குக் கடை' என்று செல்லமாகப் பெயர் வைத்து கொண்டாடுகிறோம். நீங்களும் கொண்டாடலாம்.
இந்த முறை உங்களுக்குப் பிடித்திருந்தால்
சொல்லுங்கள்!
உங்களுக்கு ஏதேனும் அனுபவம் இருந்தாலும்
பகிர்ந்து கொள்ளுங்கள்!
மற்றுமொரு நாளில் மற்றுமொரு எளிமையான
கணித அணுகுமுறையோடு சந்திப்போம்!
*****
Monday, 16 September 2019
சந்திராயன் - பயோடேட்டா
சந்திராயனைப் பற்றிக் கேட்டு சில நாட்கள்
பிள்ளைகள் தொலைத்து எடுத்து விட்டார்கள்.
எந்தப் பிள்ளைகளிடம் நிலவில் பாட்டி வடை
சுடும் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தோமோ, அதே பிள்ளைகளிடம் சந்திராயன் கதையைப்
பற்றிப் பேசுவதைப் பற்றி நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. பிள்ளைகளும் நிலவில்
பாட்டி வடை சுட்ட கதையைக் கேட்பதிலிருந்து சந்திராயனின் கதையைக் கேட்பதற்கு மாறி விட்டார்கள்.
சந்திராயனின் கதை என்பது சந்திராயனின்
கதை மட்டுமா என்ன? சந்திராயனோடு இன்று உலகமே தேடித் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கும்
தமிழர் சிவனின் கதை, மயில்சாமி அண்ணாதுரையின் கதை, அவர்களுக்கெல்லாம் முன்னோடியான
அப்துல்கலாமின் கதை என்று எவ்வளவு கதைகள்.
அதோடு இவர்கள் எல்லாரும் அரசுப் பள்ளியிலிருந்து
படித்து உச்சம் தொட்டவர்கள் என்ற இன்னொரு கதையும் அல்லவா இருக்கிறது! அரசுப் பள்ளியின்
அற்புதமான மாணவச் செல்வங்களால் சாத்தியமான கனவல்லவா சந்திராயன் என்பது.
இந்தப் பிள்ளைகள் கேட்கிறார்கள்,
"சந்திராயன் 2 லிருந்து சிக்னல் எப்படிங்கய்யா கட் ஆனது? செல்போன் டவர் போல
அங்க ஏதும் டவர்லாம் வெச்சிருக்காங்களய்யா?" கேட்க கேட்க பரவசமாக இருக்கிறது.
நம் பிள்ளைகள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இப்படிக் கேள்வி கேட்கிறார்களே! எப்படிப்
பதில் சொல்வது என்று திருக்குவளை அண்ணா பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக ராம்
பிரகாஷ் ஐயாவிடம் கேட்டேன்.
அவர் சொன்ன செய்திகளைச் சொன்னால் மற்ற
பிள்ளைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் இல்லையா!
சந்திராயன் - 2 ஐப் பற்றிப் பார்ப்பதற்கு
முன் சந்திராயன் - 1 ஐப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
சந்திராயன் - 1 வெற்றிகரமாக நிலவைச் சுற்றி
சாதனைப் படைத்தது. நிலவில் தண்ணீர் இருப்பதை அதுதான் உலகிற்கு முதன் முதலாக உறுதிப்படுத்தியது.
உலகின் மிகப் பெரிய விண்வெளி ஆய்வகமாகக் கருதப்படும் நாசாவால் உறுதிப்படுத்த முடியாததை
ஆதாரப்பூர்வமாக அதுதான் உறுதிப்படுத்தியது.
அந்த வகையில் சந்திரயான் - 1 இன் வெற்றி
உலகையே இந்தியாவை நோக்கித் தலைநிமிர்ந்து பார்க்க வைத்தது.
இப்போது சந்திராயன் - 2 க்கு வந்து விடலாம்.
சந்திராயன் - 1க்குப் பிறகு இப்போது நிலவைச் சுற்றுவதும், படம் பிடிப்பதும் இந்தியாவுக்கு
எளிதாகி விட்டது.
நிலவில் இறங்குவதுதான் அடுத்த இலக்கு.
அதற்கான இந்தியாவின் திட்டம்தான் சந்திராயன் - 2.
சந்திரயான் - 2 இன் பயணம்,
1. ஆர்பிட்டர்,
2. லேண்டர்,
3. ரோவர்
என்ற மூன்று
அட்டகாசமான ஆய்வுக்கருவிகளோடு ஆரம்பித்தது. முதலாவதாகச் சொன்ன ஆர்பிட்டர் நிலவைச்
சுற்றும். அதை வெற்றிகரமாக இந்தியா செய்து விட்டது. ஆர்பிட்டர் அற்புதமாக நிலவைச் சுற்றி
போட்டோக்களை எடுத்துத் தள்ளுகிறது. இரண்டாவதாக லேண்டரும், மூன்றாவதாக லேண்டருக்குள்
இருக்கும் ரோவரும் நிலவில் இறங்கி நடந்து ஆய்வு செய்யும். இந்த இரண்டையும் நிலவுக்குள்
இறக்கும் போதுதான் தகவல் தொடர்பு அறுந்து விட்டது.
நிலவில் தரையிறக்குவதை ஷாப்ட் லேண்டிங்
என்று சொல்கிறார்கள். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா சாதித்த இந்தச் சாதனையை அதை விட
வலுவாக இந்தியா சாதிக்க நினைத்தது. இந்த மூன்று நாடுகளும் நிலவில் தரையிறக்காத தென்துருவத்தை
இதற்காகத் தேர்ந்தெடுத்தது இந்தியா. தென்துருவத்தில் ஷாப்ட் லேண்டிங் செய்வது சவாலானது
என்று தெரிந்தும் இந்தியா அதைத் தேர்ந்தெடுத்து முயற்சித்தது. ஏனென்றால் தென்துருவத்தில்தான்
தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
அதற்காகத்தான் இந்தியா அதைத் தேர்ந்தெடுத்தது.
இப்போது தகவல் தொடர்பு அறுந்திருக்கிறது.
அதைத் தொடர்பு கொள்ள இந்தியா முயற்சித்துக் கொண்டிருக்கிறது. நாசாவும் முயற்சிக்கிறது.
978 கோடி மதிப்புள்ள ஆய்வு சந்திராயன்
- 2.
உலகின் எந்த நாட்டின் அறிவுத் துணையும்,
தொழில் நுட்ப உதவியும் இல்லாமல் இந்தியா தன்னுடைய சொந்த அறிவு மற்றும் தொழில்நுட்பத்
துணையோடு இதைச் செய்திருக்கிறது.
இப்போது சந்திராயன் - 2 இன் லேண்டரின்
தகவல் தொடர்பு விட்டுப் போயிருந்தாலும், வருங்காலத்தில் நிலவு இந்தியாவுக்குத் தொட்டு
விடும் தூரம்தான்.
நிலா நிலா ஓடி வா! என்று பாடிய நாம் விரைவில்
நிலாவில் ஓடிப் பிடித்து விளையாடலாம்.
நிலவே என்னிடம் நெருங்காதே என்ற திரைப்பாடலை
மாற்றி நிலவே உன்னை நெருங்கி விட்டோம் என்று பாடலாம்.
அதற்கான அத்தனைச் சாத்தியக்கூறுகளையும்
நம் விஞ்ஞானிகள் செய்யத்தான் போகிறார்கள்.
உங்களுக்கு இந்தத் தகவல்கள் பயனுடையதாக
இருந்தால் மகிழ்ச்சி. நீங்களும் உங்களுக்குத் தெரிந்த தகவல்களையும், அனுபவங்களையும்
பகிர்ந்து கொள்ளுங்கள்! கூடுதலான தகவல்களையும், விவரங்களையும் பிள்ளைகளிடம் கொண்டு
போய் சேர்ப்போம்!
*****
Sunday, 15 September 2019
மாணவர்களுக்கான நேர நிர்வாகம் / நேர நிர்வாகம்
மாணவர்களுக்கான நேர நிர்வாகம் / நேர
நிர்வாகம்
பொதுவாக எல்லாருக்கும் தெரிந்த செய்திகள்
என்றாலும் நேர மேலாண்மை, ஆளுமைத் திறன் பயிற்சி சார்ந்த செய்திகள் நகர்ப்புற மாணவர்களுக்கானது
என்பது போல ஒரு தோற்றம் இருக்கிறது. கிராமப்புற மாணவர்களுக்கு அதன் நுட்பங்கள் அதிகம்
தெரிவதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறது.
அதனால் பலருக்கும் தெரிந்த செய்திகளாக
இருந்தாலும் இது போன்ற நேர நிர்வாகம் மற்றும் ஆளுமைத் திறன் பயிற்சிப் பற்றியும் கொஞ்சம்
எழுதுங்கள் என்று நம் நண்பர்கள் ஒரு யோசனையை முன் வைத்தனர். அதன் பயன் கிராமப்புற
மாணவர்களுக்குப் போய் சேர வேண்டும் என்பது அவர்களது நோக்கம். கிராமப்புற பள்ளிகளில்
பணியாற்றும் நம் ஆசிரிய நண்பர்கள் நம் வலைபூவோடு நெருங்கிய தொடர்பில் இருப்பதால்
அவர்கள் மூலமாக அந்தச் செய்திகள் அப்பிள்ளைகளைச் சென்றடையும் என்பது அவர்களுடைய கருத்து.
இது போன்ற விசயம் தெரிந்த நம் வலைப்பூவின்
நண்பர்கள் இதைப் படித்துக் கடுப்பாகி விடுவீர்கள் என்பது தெரிந்தாலும் நண்பர்களின்
யோசனையில் இருக்கும் தார்மீக நியாயத்தை மறுக்க முடியவில்லை. ஆகவே விவரம் அறிந்த நண்பர்கள்
இதைத் தொடர்ந்து வாசிப்பதைத் தவிர்த்து விடலாம். ஆகவே தலைப்பிடும் போதே தலைப்புக்கு
அருகில் / போட்டு நேர நிர்வாகம் அல்லது ஆளுமை என்று போட்டு விடலாம் என்று இருக்கிறேன்.
இனி மாணவர்களுக்கான நேர நிர்வாகம் பற்றிக்
காண்போம்.
நம் நேர நிர்வாகம் வேலைக்கானது. நம் வேலைகளைச்
சரியான நேரத்துக்குள் முடிக்க முடியுமானால் நாம் சரியான நேர நிர்வாகத்தைக் கடைபிடிக்கிறோம்
எனலாம்.
நமது வேலைகளை நேரத்திற்குள் முடிக்க முடியாமல்
தடுமாறுகிறோம் என்றால் நம் நேர நிர்வாக அணுகுமுறையை மாற்றிப் பார்க்கலாம்.
நேரமும் வேலையும் ஒன்றுக்கொன்று நேரடித்
தொடர்பில் உள்ளது. அதாவது நாம் செய்யும் வேலைகள் நேரத்தோடும், நேரம் நாம் செய்யும்
வேலைகளோடும் தொடர்பு கொண்டுள்ளது.
நாம் செய்யும் வேலைகளிலிருந்தே நாம் நேர
நிர்வாகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் நாம் செய்யும் வேலைகளை,
1. முக்கியம்,
2. அவரசம் என இரண்டாகப் பகுத்துக் கொள்ளலாம்.
இப்போது முக்கியம் அவசரம் என்று இந்த
இரண்டு தலைப்புகளை வைத்துக் கொண்டு வேலைகளை,
1. முக்கியமான அவசரமான வேலைகள்,
2. முக்கியமில்லாத ஆனால அவசரமாக முடிக்க
வேண்டிய வேலைகள்,
3. முக்கியமான ஆனால் அவசரமில்லாத வேலைகள்,
4. முக்கியமும் இல்லாத அவசரமும் இல்லாத
வேலைகள்
என
நான்காகப் பிரித்து விடலாம்.
முக்கியமான அவசரமான வேலைகளை அப்போதே செய்து
முடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. நாளை தேர்வு எனும் போது இன்று அதற்காகப் படிக்க
வேண்டியிருப்பது என்பது முக்கியமான மற்றும் அவசரமான வேலையாகும். அதை தள்ளிப்போடவோ,
தவிர்க்கவோ முடியாது என்பதால் அது முக்கியமான அவசரமான வேலையின் இடத்தில் வரும். நாம்
செய்யும் வேலைகளில் முதன்மையாக முக்கியமாக முடிக்க வேண்டிய பட்டியிலில் முதலிடத்தில்
இருப்பவை இந்த வகை வேலைகள்தான்.
இரண்டாவதாக முக்கியமில்லாத ஆனால அவசரமான
வேலைகள். குறிப்பிட்ட நேரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டிய ஒப்படைப்புகள், செயல்திட்டங்கள்,
புள்ளிவிவரங்கள் போன்றவைகள் இந்த இரண்டாம் வகைப் பட்டியலில் அடங்கும். அந்த ஒப்படைப்புகளோ,
செயல்திட்டங்களோ, புள்ளிவிவரங்களோ உங்களுக்கு முக்கியம் இல்லாதவைகளாகப் படலாம். உங்களது
ஆர்வத்தையோ, சிந்தனையையோ தூண்டக் கூடியதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் குறித்த நேரத்தில்
அது சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசரம். குறித்த கால கெடுவைத் தாண்டி அவைச் சமர்ப்பிக்கப்பட்டால்
அது ஏற்றுக் கொள்ளப்படாத நிலையை அடைந்து விடக் கூடும். ஆதலால் இது போன்ற வேலைகளைச்
செய்வதை நம் வேலைப் பட்டியலின் நேர நிர்வாக மேலாண்மையில் இரண்டாவதாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
மூன்றாவதாக முக்கியமான ஆனால் அவசரம் காட்டத்
தேவையில்லாத வேலைகள். எல்லா வேலைகளும் அடிப்படையில் இந்த நிலையில் இருந்தே இரண்டாவது
அல்லது முதல் நிலையை நோக்கி நகர்கின்றன. ஆகையால் மூன்றாவது நிலையில் இருக்கும் இந்த
வகை வேலைகளை அவ்வபோது தள்ளிப்போடாமல் சன்னமாக செய்து கொண்டே வந்தால் எந்த வேலையையும்
அவசர அவசரமாக செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவே ஏற்படாது. உதாரணத்துக்கு தேர்வுக்கு ஒரு
மாத காலம் இருக்கும் போது சன்னமாகப் படிக்க வேண்டியது முக்கியம். இந்த வேலையை உடனடியாகப்
படித்து ஓரிரு நாட்களில் முடிக்க வேண்டிய அவசரம் இல்லைதான். ஆனால் படித்துக் கொண்டே
இருக்க வேண்டியது முக்கியம். பிறகு தேர்வு நெருங்க சில நாட்கள் இருக்கும் போது பார்த்துக்
கொள்ளலாம் என்று நினைத்தால் அவசரம் காட்ட வேண்டாத முக்கியமான இந்த வேலையானது அவசரம்
மற்றும் முக்கியமாக முடிக்க வேண்டிய முதல் நிலைக்கு நகர்ந்து பதற்றத்தையும், பரபரப்பையும்
உண்டாக்கி விடும். ஆகையால் நம் வேலைப்பட்டியிலில் இந்த வகை வேலைகள் மூன்றாவது இடத்தில்
இருக்க வேண்டும். மூன்றாவது இடத்தில் இருக்கும் இவ்வேலை சிறிது சிறிதாக அன்றன்றைக்குக்
குறிப்பிட்ட அளவில் முடிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
நான்காவதாக முக்கியமும் இல்லாத அவசரமும்
காட்ட வேண்டாத வேலைகள். தொலைக்காட்சிப் பார்த்தல், கிரிக்கெட் மேட்ச் பார்த்தல், வெட்டி
அரட்டை அடித்தல் போன்ற வேலைகள் எல்லாம் இந்த வகையறாவில் வரும். இந்த வேலைகள் பெரும்பாலும்
எந்த முக்கியத்துவமும் இல்லாதவை. அவசரம் அவசரமாக அப்போதே செய்து முடிக்க வேண்டும்
என்ற கட்டாயம் இல்லாதவை. இந்த நான்காம் வகை வேலைகளை ஒரு பொழுதுபோக்காக நேரம் கிடைக்கும்
போது பார்த்துக் கொள்ளலாம். முக்கிய வேலைகளைச் செய்து முடிக்க வேண்டிய நிலையில் இந்த
நான்காம் வகை வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் வீணாகப் போகப் போவது நமது நேரம்தான்.
இது போன்ற வேலைகளுக்கு நம் நேர நிர்வாகத் திட்டமிடலில் கடைசி இடம்தான் கொடுக்க வேண்டும்.
அதாவது நேரம் இருந்தால் அன்றைக்கு இந்த வேலைகளை ஒரு பொழுதுபோக்காகச் செய்யலாம். இல்லையென்றால்
விட்டு விடலாம். அதனால் எந்தப் பாதிப்பும் வந்து விடப் போவதில்லை.
நேர நிர்வாகத்தில் வேலைக்கானத் திட்டமிடல்
முக்கியமானது. முக்கியமான வேலையைச் செய்து முடிக்க வேண்டிய நிலையில் நாம் செய்ய வேண்டியது
முதல் வகை வேலையா, இரண்டாம் வகை வேலையா, மூன்றாம் வகை வேலையா, நான்காம் வகை வேலையா
என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
நாளை தேர்வுக்குப் படிக்க வேண்டிய நிலையில்
முக்கியமான அவசரமான அந்த வேலையைத்தான் நாம் பார்க்க வேண்டியிருக்கும். அதை விடுத்து
நான்காம் வகையான முக்கியமும் அவசரமும் இல்லாத தொலைக்காட்சிப் பார்த்தலை அப்போது தேர்வு
செய்து செய்து கொண்டிருக்க முடியாது. ஒருவேளை அப்படிச் செய்தால் தேர்வின் தோல்விக்குப்
பின், செய்யத் தவறிய அந்த வேலையை மறுபடியும் முக்கியமான அவசரமான வேலையாகக் கருதிச்
செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். முறையாக அப்போதே அந்த வேலையை முக்கியமான
அவசரமான வேலையாகக் கருதிச் செய்திருந்தால் அதே வேலையை மீண்டும் செய்து காலத்தை அதற்காக
மறுபடியும் ஒதுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காதுதானே.
ஆக நேர நிர்வாகத்தில் வேலைகளைச் சரியான
பட்டியல்படி சரியாக நிர்வகிக்க வேண்டும். எந்த வேலைகளுக்கு முதன்மை கொடுத்து செய்ய
வேண்டுமோ அந்த வேலைக்கு முதன்மை கொடுத்தும், எந்த வேலையை நேரம் கிடைக்கும் பாது செய்து
கொள்ளலாமோ அந்த வேலையை நேரம் கிடைக்கும் போதும் செய்வதில் விழிப்பாகவும், கவனமாகவும்
இருக்க வேண்டும்.
நேர நிர்வாகத்தில் வேலைக்கான இப்பட்டியல்
உங்களுக்கு நிறையவே உதவக்கூடும். நீங்கள் செய்யக் கூடிய அனைத்து வேலைகளையும் இந்த நான்கு
வகை வேலைகளுக்குள் அடக்கி விடலாம். அவ்வாறு அடக்கிய பிறகு எந்தெந்த வேலைகளை எந்தெந்த
நேரத்தில் எப்போது செய்ய வேண்டும் என்ற தெளிவு உங்களுக்கு வந்து விடும்.
நேர நிர்வாகத்தில் வேலை பற்றி இக்கருத்து
உங்களுக்கு நிறையவே உதவக் கூடும். இது போன்ற உங்களுக்குத் தெரிந்த கருத்துகளையும்
பகிர்ந்து கொள்ளுங்கள். அது எவ்வளவு மிக எளிமையான கருத்தாக இருந்தாலும், அனைவரும்
அறிந்த கருத்தாக இருந்தாலும் நம் வலைப்பூவைப் படிப்பவர்களுக்கு அது நிச்சயம் பயன்தரும்
என்று நம்புகிறேன்.
மாணவர்களுக்கான இந்நேர நிர்வாகக் கருத்தை
தொகுத்துக் கூறும் கீழே உள்ள யூடியூப் காணொலியும் உங்களுக்கு உதவக் கூடும். காணொலியைச்
சொடுக்கிப் பாருங்கள்!
*****
Friday, 13 September 2019
உனது எண்ணோடு விளையாடு / எளிய கணித அணுகுமுறைகள்
உனது எண்ணோடு விளையாடு / எளிய கணித
அணுகுமுறைகள்
பிள்ளைகளுக்குக் கதை சொல்வதைப் போலவே
கணிதம் கற்றுக் கொடுக்கும் எளிமையான முறைகள் பற்றி எழுதினால் என்ன? என்று நண்பர்கள்
கேட்கிறார்கள். கணிதத்தைச் சுவாரசியமாகக் கற்றுக் கொடுப்பது பற்றி நான் என்னுடைய நண்பர்கள்
மூலம் பெற்றது அநேகம். அதை அநேக நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதன் அவசியத்தை உணர்கிறேன்.
அதே நேரத்தில் இந்தப் பகிர்தலில் ஏற்படும் குறைகளை நான் அறிந்து இருக்கிறேன். அந்த
முறைகள் அநேகமாக பலருக்கும் தெரிந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும். பலருக்கும்
தெரிந்த முறைகளைத் தாண்டி புதுமையான எளிமையான கணிதக் கற்பித்தல் பற்றி பகிர்வது என்பது
சவாலானதாகும். எனினும் பகிர்தல் என்ற அடிப்படையில் பகிரும் போது இப்பகிர்தல் மூலமாக
மேலும் சிறந்த கற்பித்தல் முறைகள் நண்பர்களாகிய உங்கள் மூலம் வர வாய்ப்புகள் இருக்கின்றன.
அதைப் பகிர்தலின் மிகப் பெரிய லாபமாகக் கருதுகிறேன். அதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு
இப்பகிர்தலை ஆரம்பிப்பதுதான் சரியாக இருக்கும்.
கணிதத்தில் மெல்ல மலரும் மாணவர்கள் எனப்படும்
மெல்ல கற்கும் மாணவர்கள் சவாலானவர்கள். ஆறாம் வகுப்பிற்கு வந்த பின்னும் அவர்களுக்குக்
கூட்ட, கழிக்க, பெருக்க, வகுக்க கற்றுக் கொடுக்க வேண்டிய அசாதாரணமான கற்பித்தல் சூழ்நிலையை
எதிர்கொள்வதிலிருந்து நாம் ஆரம்பிக்கலாம்.
அவர்களுக்கு எண்கள் என்றால் பயமாக இருப்பதால்,
அவர்களுடைய எண்களிலிருந்து ஆரம்பிக்கலாம். அவர்களுக்கு என்று வரிசை எண் இருக்கும் இல்லையா!
ஒன்று, இரண்டு, மூன்று,.... என.
ஒவ்வொரு மாணவரையும் அவர்களுக்குரிய எண்ணைச்
சொல்லச் சொல்லி அந்த எண்ணோடு இரண்டைக் கூட்டிச் சொல்ல வைப்பதிலிருந்துதான் நான்
இந்த மாணவர்களை எதிர்கொள்கிறான்.
உதாரணத்துக்கு ஏழு என்ற வரிசை எண்ணுள்ள
மாணவன் தன்னுடை ஏழு என்ற எண்ணைச் சொல்லி அதோடு இரண்டைக் கூட்டி ஒன்பது என்று சொல்ல
வேண்டும். இப்படியே வகுப்பறை முழுவதும் உள்ள மாணவர்களைக் கூற செய்கிறேன்.
அதைத் தொடர்ந்து அவர்களது வரிசை எண்ணிலிருந்து
இரண்டைக் கழித்துக் கூறச் செய்கிறேன். அதைத் தொடர்ந்து அவர்களது வரிசை எண்ணை இரண்டால்
பெருக்கிக் கூறச் செய்கிறேன். அதைத் தொடர்ந்து அவர்களது வரிசை எண்ணை இரண்டால் வகுத்து
ஈவு, மீதியைக் கூறச் செய்கிறேன்.
இன்று இரண்டால் அவர்களது வரிசை எண்ணில்
கணித அடிப்படைச் செயல்களைச் சொல்ல செய்த பிறகு அடுத்தடுத்த நாட்களில் அவர்களது வரிசை
எண்ணில் மூன்றால், நான்கால், ஐந்தால்,... என்று ஒவ்வொரு நாளாக ஒவ்வொரு எண்ணைக் கொண்டு
கணித அடிப்படைச் செயல்களைச் சொல்ல செய்கிறேன்.
இது பிள்ளைகளிடம் நல்ல மாற்றத்தை உண்டு
பண்ணுகிறது.
இதைத் தொடர்ந்து அவர்களது தேர்வு எண்ணை
எடுத்துக் கொண்டு இதே போல இரண்டால் கூட்டச் செய்தல், கழிக்கச் செய்தல், பெருக்கச்
செய்தல், வகுக்கச் செய்தல் என்று நான்கு வகை கணித அடிப்படைச் செயல்களை மனதுக்குள் செய்ய
வைத்து சொல்ல வைக்கிறேன். அதைத் தொடர்ந்து மூன்றால், நான்கால், ஐந்தால்,... என்று
ஒவ்வொரு நாளும் அவர்களது தேர்வு எண்களோடு விளையாட்டுதான்.
அந்த எண் அவர்களது எண்களாக இருப்பதால்
அந்த எண்ணோடு ஒரு குறிப்பிட்ட எண்ணைக் கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்துப் பார்ப்பது
பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
நீங்களும் இதை முயன்று பார்க்கலாம். உங்களது
அனுபவத்தைச் சொல்லுங்கள்.
மற்றுமொரு நாளில் வேறொரு எளிய கணித அணுகுமுறையோடு
சந்திப்போம்.
*****
Subscribe to:
Posts (Atom)








