Sunday, 18 May 2025

7.5% இட ஒதுக்கீடு பற்றி அறிய வேண்டிய விளக்கங்கள்!

7.5% இட ஒதுக்கீடு பற்றி அறிய வேண்டிய விளக்கங்கள்!

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற உயர் படிப்புகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது குறித்து அறிய வேண்டிய முக்கிய விளக்கங்களை இங்கே காண்போம்.

விளக்கம் 1 :

7.5 இட ஒதுக்கீட்டில் பயன் பெற ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்திருக்க வேண்டும்.

விளக்கம் 2 :

 தனியார் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) இட ஒதுக்கீட்டின்படி படித்த குழந்தைகள் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளை அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்திருக்க வேண்டும். அவ்வாறு படித்தவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு உண்டு.

விளக்கம் 3 :

அரசுப் பள்ளியில் ஆங்கில வழியில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த குழந்தைகளுக்கும் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு உண்டு.

விளக்கம் 4 :

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு பொருந்தாது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை எந்த ஒரு வகுப்பில் சேர்ந்து மீண்டும் அரசுப் பள்ளியில் சேர்ந்தாலும் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடையாது. 7.5 இடஒதுக்கீடு சலுகையைப் பெற 6 முதல் 12 வரை அனைத்து வகுப்புகளிலும்  அரசுப் பள்ளியில் படித்திருக்க வேண்டும்.

இவ்விளக்கங்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம்.

*****

Saturday, 17 May 2025

குழந்தைக் கல்வியின் பிதாமகர் மாண்டிசோரி!

குழந்தைக் கல்வியின் பிதாமகர் மாண்டிசோரி!

மரியா மாண்டிசோரி ஆகஸ்ட் 31, 1870 இல் இத்தாலியில் பிறந்தவர். 1952 இல் அவர் மறைந்த போது உலகெங்கும் 70 ஆயிரம் மாண்டிசோரி பள்ளிகள் இயங்கின. இன்றைய குழந்தை மைய கல்விமுறைக்கு அவரது கல்வி முறையே அடித்தளம். இதுவே அவரது கல்வி முறையின் சாதனை.

மாண்டிசோரி 1939 இல் இந்தியா வந்திருக்கிறார். அன்னிபெசன்ட் அம்மையாரின் அழைப்பை ஏற்று இங்கு வந்த அவரை இந்தியா வெகுவாகக் கவர்ந்தது. இந்தியாவைத் தன்னுடைய இரண்டாம் தாய் வீடு என்று குறிப்பிட்டுள்ளார் மாண்டிசோரி.

அவர் அப்போது இந்திய விடுதலைப் போராட்டத்துக்குத் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்திருக்கிறார் என்பது நாம் அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய வியப்பான செய்தி. குழந்தைகளின் கல்வியோடு அவர் மக்களுக்கான சுதந்திரத்தையும் பெரிதும் மதித்தார்.

தாம் பயின்ற பல்கலைக்கழகத்தில் மருத்துவராய்ப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி மாண்டிசோரி. அவர் மனநோய் சிசிக்சைப் பிரிவில் மருத்துவராக இருந்தார். மனவளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்குக் கல்வியளிக்கும் முறையை ஆராய்ந்தார்.

1899 இல் இவரது கல்வி முறையில் பயின்ற மனவளர்ச்சி குன்றிய அறுபது குழந்தைகள் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றதுடன், சராசரியை விட அதிக மதிப்பெண்களையும் பெற்றனர். மாண்டிசோரியைத் இத்தாலி தேசமே கவனிக்க வைத்த நிகழ்வு இதுதான்.

1907 இல் குழந்தைகளின் இல்லம் என்ற பெயரில் தம்முடைய கல்வி முறையிலான பள்ளியை அவர் இத்தாலியின் தலைநகரான ரோம் நகரில் தொடங்கினார். அவரது கல்வி முறை உலகெங்கும் பரவத் தொடங்கியது.

மாண்டிசோரி கல்வி முறையில் ஆண்டுக்காண்டு அடுத்த வகுப்பு என்ற கட்டாயம் எல்லாம் கிடையாது. மூன்றாண்டுகளுக்கு ஒரு வகுப்பு என்கிற முறையையே அவர் முன்னெடுத்தார். குழந்தைகள் சுதந்திரமான, மனஅழுத்தமற்ற சூழ்நிலையில் கற்க அவ்வளவு கால அவகாசம் தேவை என்று அவர் கருதினார்.

மாண்டிசோரி தாய்மொழி வழிக் கல்வி முறையையே வலியுறுத்தினார். இந்தியாவில் தொடங்கப்பட்ட பெரும்பான்மையான மாண்டிசோரி பள்ளிகள் ஆங்கில வழியில் அமைந்ததால், அவர் ஆங்கிலக் கல்வியை வலியுறுத்தினாரோ என்ற ஐயப்பாடு உருவாகி விட்டது.

உண்மை என்னவென்றால், மாண்டிசோரிக்கு ஆங்கிலம் தெரியாது என்பது மட்டுமல்லாது, அவர் ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ளவும் விரும்பவில்லை என்பது ஆங்கிலக் கல்வி மோகத்தில் இருப்போர் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தியாகும்.

மாண்டிசோரி அம்மையார் மக்களின் சுதந்திரத்திற்காகவும், குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும் குரல் கொடுத்த முதன்மையான கல்வியாளர் ஆவார். இத்தாலியில் முசோலினியின் பாசிச ஆட்சி ஏற்பட்டுக் கல்வி கற்கும் குழந்தைகள் ராணுவப் பணிக்கு அனுப்பப்பட்ட போது, அதைக் கடுமையாக எதிர்த்தவர் மாண்டிசோரி. அதனாலேயே இத்தாலியிலிருந்து அவர் நாடு கடத்தப்பட்டார்.

1990 இல் சிசிலியில் சுரங்கங்களில் குழந்தைத் தொழிலாளர்களாய்ச் சித்திரவதைச் செய்யப்பட்ட குழந்தைகளைக் காப்பதற்காகப் போராடினார். 1949 இல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் குழந்தைகளைக் கல்விக் கூடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பதை ஓர் இயக்கமாக முன்னெடுத்தார்.

குழந்தைகளின் கல்விக்காகவும் அவர்களது சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்காகவும் இறுதி மூச்சு வரை உழைத்த மாண்டிசோரி அம்மையார் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் விருது வழங்கப்படவில்லை. விருது வழங்கப்படாதது, நோபல் பரிசின் சிறப்பைக் குறைத்திருக்கிறதே தவிர, மாண்டிசோரியின் புகழைக் குறைக்கவில்லை.

*****

Friday, 16 May 2025

தங்க நகைகளுக்குப் பதில் காகிதத் தங்கத்தில் முதலீடு செய்யலாம்!

தங்க நகைகளுக்குப் பதில் காகிதத் தங்கத்தில் முதலீடு செய்யலாம்!

தங்கம் நல்லதொரு முதலீட்டு சாதனம். தங்கத்தில் முதலீடு செய்வது புத்திசாலிதனம்.

தங்கத்திற்குப் பல சிறப்புகள் உள்ளன. தங்கமானது உடனடியாகப் பணமாக்கும் வசதி கொண்டது. தங்கத்தை வைத்து உத்திரவாதமின்றி கடன் பெறுவது எளிது. தங்கம் நடமாடும் சொத்து. கௌரவம் மற்றும் அந்தஸ்தின் அடையாளம்.

பெண் குழந்தைகள் பிறந்தால் பெற்றோர்கள் அவர்களின் திருமணத்திற்காகத் தங்க நகைகளை வாங்கிச் சேர்க்க ஆரம்பித்து விடுவது நம் நாட்டின் வழக்கம்.

இதனால், அந்த நகைகள் கல்யாணத்தின் போது பழைய நகைகளாக ஆகி விடும். அப்போது பழைய நகைகளை விற்று புதிய நகைகளை வாங்க நினைத்தால் செய்கூலி, சேதாரம், வரி போன்றவற்றால் 30 சதவீதத்துக்கும் மேல் இழப்பு ஏற்படும்.

கஷ்டப்பட்டு பணம் சேர்த்து, தங்கம் வாங்கி பிறகு அதை விற்று வாங்கினால் இப்படி ஒரு நிலைதான் ஏற்படும். இதை எப்படி தவிர்க்கலாம் என்கிறீர்களா?

தங்க நகைகளில் முதலீடு செய்வதற்குப் பதிலாகக் காகிதத் தங்கம் எனப்படும் கோல்ட் இ.டி.எப்பில் முதலீடு செய்யலாம். இப்படி செய்வதால் திருமணத்தின் போது காகிதத் தங்கத்தை விற்று பணமாக்கி, அதைக் கொண்டு விருப்பமான புதிய நகைகளை வாங்கிக் கொள்ளலாம்.

காகிதத் தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்க நகைகள் திருடு போகும் அபாயம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. தீ விபத்துகள் மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களிடமிருந்து காக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அது எண்ம வடிவில் அதாவது டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பாக இருக்கும்.

தங்கத்தின் விலை ஏறுவதற்கு ஏற்ப காகிதத் தங்கத்தின் விலையும் ஏறிக் கொண்டு இருக்கும் என்பதால் இது மிகச் சிறந்த முதலீட்டு முடிவாகும்.

இனி நீங்கள் தங்கம் வாங்க நினைத்தால், காகிகத் தங்கமாக வாங்குங்கள். அப்படி வாங்கினால் செய்கூலி, சேதாரம் எதுவும் இல்லை. நீங்கள் தங்க நகை வாங்க விரும்பும் போது, காகிதத் தங்கத்தை விற்று பணமாக்கிக் கொண்டு, நீங்கள் விரும்பிய நகையை அப்போதைய நவீன வடிவமைப்பில் புதுமை குறையாமல் வாங்கிக் கொள்ளலாம்.

Thursday, 15 May 2025

தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் சேர்வதற்குத் தேவையான ஆவணங்கள்!

தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் சேர்வதற்குத் தேவையான ஆவணங்கள்!

தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கான இணையவழி விண்ணப்பிக்கும் முறை தொடங்கியுள்ளது. இதற்குத் தேவையான ஆவணங்களின் விவரங்களைக் கீழே காணவும்.


Wednesday, 14 May 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (15.05.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (15.05.2025)

1) நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு மூன்று நாட்கள் முன்பே தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

2) 9,13,036 பேர் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதியுள்ளனர். இவர்களுள் 272 சிறைவாசிகளும் தேர்வை எழுதியுள்ளனர்.

3) மாணவர்கள்தான் தமிழகத்தில் கதாநாயகர்கள். அவர்கள் கதாநாயகர்கள் என்று இன்னொருவரைத் தேடி அலைய வேண்டியதில்லை எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

4) படிப்புதான் வாழ்க்கையை மாற்றக் கூடிய ஒரே திருப்புமுனை எனத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

5) உச்சநீதிமன்றத்தின் 52 ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்றார்.

6) தமிழகத்தில் தயாரிக்கப்படும் மருந்துகளின் அட்டைகளில் அவற்றின் நம்பகத் தன்மையை அறிந்து கொள்ள விரைவுத் துலங்கல் குறியீடு அச்சிடப்பட வேண்டும் என்று மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

7) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்துத் தலைமைத் தளபதி மற்றும் முப்படைத் தளபதிகள் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்தனர்.

8) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக அஜய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

9) போர் பதற்றம் காரணமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் மூடப்பட்டிருந்து பள்ளிகள், கல்லூரிகள் நேற்றிலிருந்து திறக்கப்பட்டன.

Education & GK News

1) The SSLC results will be out tomorrow. It is noteworthy that the results will be out three days before the announcement.

2) 9,13,036 people have written the 10th class examination. Out of these, 272 prisoners have also written the examination.

3) Students are the heroes of Tamil Nadu. They do not need to look for someone else to be the heroes, said School Education Minister Anbil Mahesh Poyyamozhi.

4) Deputy Chief Minister Udhayanidhi Stalin has said that education is the only turning point that can change life.

5) P.R. Kawai took oath as the 52nd Chief Justice of the Supreme Court.

6) The State Drug Control Authority has said that a QR code should be printed on the cards of medicines manufactured in Tamil Nadu to check their authenticity.

7) The Chief of Army and the three service chiefs met President Draupadi Murmu and briefed her on Operation Sindoor.

8) Ajay Kumar has been appointed as the Chairman of the Union Public Service Commission.

9) Schools and colleges, which were closed in the border areas of Jammu and Kashmir and Punjab states due to war tension, were opened from yesterday.

Sunday, 11 May 2025

கல்வி ஜனநாயகத்தின் பிதாமகர் ஜான் டூயி!

கல்வி ஜனநாயகத்தின் பிதாமகர் ஜான் டூயி!

ஜான் டூயி ஓர் அமெரிக்க கல்வியாளர். இவர் 1859 இல் பிறந்தார்.

சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கையை முதலில் ஆதரித்த தத்துவவியலாளர் ஜான் டூயி.

கல்வியானது ஜனநாயகப்படுத்தப்படாத கால கட்டத்தில், மதத்தின் ஆதிக்கத்திலிருந்து கல்வியை மீட்டு அரசாங்கத்தின் கடமையாகக் கல்வியை மாற்றியவர் ஜான் டூயி. இவர் மத சார்பான கல்வியைச் சமூக நோயாகப் பார்த்தார்.

தொடக்கக் காலத்தில் Pragmatist ஆக இருந்தார் டூயி. இவர் ஹெகல் முதல் இமானுவேல் கான்ட் வரையிலான தத்துவவியலாளர்களைக் கற்றறிந்தார்.

1903 இல் The school and the society என்ற நூலை வெளியிட்டார்.

1909 இல் How we think?, Democracy in Education முதலிய நூல்களை வெளியிட்டார்.

1915 இல் The schools of tomorrow வெளிவந்து கல்வியில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. இந்நூலின் தாக்கத்தால் பிரெஞ்சு அரசாங்கம் கிறித்துவ ஆலயங்களின் கட்டுப்பாட்டில் இருந்த கல்வியை அரசுடைமையாக்கியது. 1941க்குள் 27 நாடுகள் கல்வியை அரசின் கடமையாக ஏற்றன.

கல்வி கற்ற ஒருவரையே விடுதலை அடைந்த மனிதராக ஜான் டூயி குறிப்பிடுகிறார்.

கற்பித்தல் கற்றல் செயல்முறையில் பயிற்சி மாறுதலை விளக்கியவர் ஜான் டூயி.

இரண்டாம் உலகப் போரை எதிர்த்ததற்காக அமெரிக்க அரசால் சிறை வைக்கப்பட்டவர் ஜான் டூயி. அதன் காரணமாகச் சில காலம் சீனாவில் தமது கல்விச் செயல்பாடுகளை ஆற்றினார். அவ்வகையில்

ஜான் டூயி 1952 இல் காலமானார்.

*****

Saturday, 10 May 2025

இன எழுத்துகள் அறிவோமா?

இன எழுத்துகள் அறிவோமா?

நெல்லும் புல்லும் ஓரினம் என்பார்கள்.

அதுபோலவே சில எழுத்துகள் ஓரினமாகும். அப்படி ஓரினமாகும் எழுத்துகளை இன எழுத்து என்பர்.

எழுத்துகள் எப்படி இனமாகும்?

பிறக்கும் இடத்தால் இனமாகும்.

பிறக்கும் முயற்சியால் இனமாகும்.

மாத்திரை, வடிவம் ஆகியவற்றால் இனமாகும்.

உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடில் இனமாகும்.

அதாவது ‘அவுக்கு இன எழுத்து ஆ.

அளபெடையில் நெடிலுக்கு அருகில் இனமான குற்றெழுத்து வருவதைக் காணலாம்.

(எ.கா)

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னும் அவர். (குறள், 653)

மெய்யெழுத்துகளில் இடையின எழுத்துகளுக்கு இனமில்லை.

வல்லினத்துக்கு மெல்லினம் இனமாகும்.

அதாவது ‘க’வுக்கு இன எழுத்து ங.

‘திங்கள்’ எனும் சொல்லில் ஙகர  மெல்லினத்துக்கு அருகே ககர வல்லினம் அமைகிறது.

*****