Wednesday, 5 March 2025

கிரேக்க எண் கட்டமைப்பைத் தரை மட்டமாக்கிய பிதாகரஸ்!

கிரேக்க எண் கட்டமைப்பைத் தரை மட்டமாக்கிய பிதாகரஸ்!

கணிதம் என்ற சொல் அறிமுகமானவர்களுக்குப் பிதாகரஸ் என்ற சொல் தெரியாமல் இருக்காது. அந்த அளவுக்குக் கணிதத்தோடு நெருக்கமானவர் பிதாகரஸ்.

அவர் ஒரு தனிமனிதராக மட்டுமல்லாமல் ஒரு சமூகமாகவே இயங்கியவர். சமூகம் என்றால் அவரைச் சுற்றி ஒரு கணிதச் சமூகமும் இயங்கியது, கூடவே மதச் சமூகமும் இயங்கியது.

அவரைப் பின்பற்றியோர் பிதாகரியன்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர் ஸ்தாபித்த மதத்தின் பெயர் பிதாகரியனியம்.

பிதாகரஸ்க்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அது என்னவென்றால் எண்கள் உலகை ஆள்கின்றன என்பதாகும்.

பிதாகரஸைப் பின்பற்றியவர்களில் பத்தில் ஒரு பங்கு அறிவாளிகள், பத்தில் ஒன்பது பங்கு மடையர்கள் என்ற கூற்றும் நிலவுகிறது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பிதாகரியனியம் என்பது பகுதியளவு கணிதம் சார்ந்தும், பகுதியளவு மதம் என்ற பெயரில் மூட நம்பிக்கை சார்ந்தும் இயங்கியதுதான் அதற்குக் காரணம்.

பிதாகரியனிய மதத்தினருக்கு வித்தியாசமான பல நம்பிக்கைகள் இருந்தன. ஒரு சிலவற்றைத் தெரிந்து கொண்டால் மேற்படி கூற்றின் உண்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

பித்தாகரியனியத்தைப் பின்பற்றியோர் கடைபிடித்த சில நம்பிக்கைகள் யாதெனில்,

பீன்ஸ் சாப்பிடக் கூடாது.

கீழே விழுந்து விட்டதை எடுக்கக் கூடாது.

வெள்ளைச் சேவலைத் தொடக் கூடாது.

இரும்பால் நெருப்பைக் கிளறக் கூடாது.

முழு ரொட்டியைச் சாப்பிடக் கூடாது.

இறைச்சியில் இதயத்தைச் சாப்பிடக் கூடாது.

நெடுஞ்சாலைகளில் நடக்கக் கூடாது.

விளக்கருகே கண்ணாடி பார்க்கக் கூடாது.

எப்படியிருக்கின்றன அவரது பிதாகரியனிய நம்பிக்கைகள்? இந்த நம்பிக்கைகள் எப்படி இருந்தாலும் கணித உலகைப் பொருத்த வரை பிதாகரஸ் மறக்க முடியாதவர். அதற்குக் காரணங்கள் இருக்கின்றன.

முதன்மையான காரணம் என்னவென்றால் கணிதத்தில் நிரூபணத்தின் அவசியத்தையும் இன்றியமையாமையையும் வலியுறுத்தியவர் பிதகாரஸ்தான்.

இரண்டாவது மிக முக்கிய காரணம், அவர் தந்த தேற்றம். அவர் தந்தப் பிதாகரஸ் தேற்றம் மூலமாகத்தான் எல்லா எண்களும் விகிதமுறு எண்கள் என்ற கிரேக்கர்கள் அதுவரை கட்டியிருந்த எண் கட்டமைப்பு தரை மட்டமானது. எல்லா எண்களும் விகிதமுறு எண்கள் அல்ல, விகிதமுறா எண்களும் இருக்கின்றன என்பதே அதற்குப் பின்புதான் கிரேக்கர்களுக்குத் தெரிய வந்தது.

ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணப் பக்கத்தின் வர்க்கமானது மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்குச் சமம் என்பதுதான் பிதாகரஸ் தந்த தேற்றமாகும். இத்தேற்றத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனியர்களும், சீனர்களும் அறிந்திருந்ததாகக் கணித வரலாறு சொன்னாலும் இதற்கான நிரூபணத்தைத் தந்தவர் பிதாகரஸ்தான்.

இந்தத் தேற்றத்தைப் பல முறைகளில் நிரூபிக்கலாம். சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட நிரூபணங்கள் இந்தத் தேற்றத்துக்கு உள்ளன. அதிக நிரூபணங்கள் கொண்ட கணிதத்தேற்றமும் இதுதான். கணித உலகின் முன்னோடியான முதன்மையான தேற்றமும் இதுதான். மிக அதிக பயன்பாடுகள் கொண்ட தேற்றமும் இதுதான். கணிதத்தின் நம்பர் 1 தேற்றமும் இதுதான்.

இந்தத் தேற்றத்தை நாம் ஒரு முறையில் அதாவது நீங்கள் பாடப்புத்தகத்தில் பார்க்காத வேறொரு முறையில் நாம் நிரூபிப்போம். அதற்கு நாளை வரை காத்திருங்கள்.

*****

Tuesday, 4 March 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 05.03.2025 (புதன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) இன்று நடைபெற இருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கௌரவம் பார்க்காமல் கலந்து கொள்ள முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

2) இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர் குடும்பங்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் ரூ. 350/- நிவாரணத் தொகை ரூ. 500/- ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

3) ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்புப் பணி மே மாதம் தொடங்க உள்ளது.

4) இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனத்துக்கு (ஐஆர்சிடிசி) நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

5) தமிழகம் முழுவதும் 1000 பேருந்துகளை இயற்கை எரிவாயுவால் இயங்கும் பேருந்துகளாக மாற்ற தமிழக அரசு போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

6) வெப்ப வாத பாதிப்பைத் தடுப்பதற்கான வழிமுறைகளை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

7) கிளாம்பாக்கம் தொடர்வண்டி நிலையம் மே மாதம் முதல் இயங்கும்.

8) கவிஞர் நந்தலாலா உடல் நலக்குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் காலமானார்.

9) வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெண்கள் கடன் வாங்குவது 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

10) ரஷ்யா தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் என உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

English News

1) The Chief Minister has called on all parties to attend the all-party meeting to be held today.

2) The Chief Minister has ordered that the daily compensation of Rs. 350/- given to the families of fishermen arrested by the Sri Lankan Navy be increased to Rs. 500/-.

3) The census of Asian lions is to begin in May.

4) The Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) has been granted Navaratna status.

5) The Tamil Nadu government transport department has planned to convert 1000 buses across Tamil Nadu to natural gas-powered buses.

6) The Public Health Department has issued guidelines to prevent heat stroke.

7) The Kilampakkam railway station will be operational from May.

8) Poet Nandalala passed away in a Bengaluru hospital due to ill health.

9) Women have increased their borrowing from banks and financial institutions by 22 percent.

10) Ukrainian President Volodymyr Zelensky has announced that Ukraine will only be ready for talks if Russia stops its aggression.

Monday, 3 March 2025

இன்று தேசிய பாதுகாப்பு தினம் – மார்ச் 4

இன்று தேசிய பாதுகாப்பு தினம் – மார்ச் 4

1971, மார்ச் 4 இல் தொழிலாளர்களுக்கான தேசிய பாதுகாப்பு அமைப்பு (கௌன்சில்) நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் உள்ளது.

1972லிருந்து தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. தற்போது 2025 இல் நாம் கொண்டாடுவது 54 ஆவது தேசிய பாதுகாப்பு தினமாகும்.

தொழிலாளர்கள் விபத்தின்றிப் பாதுகாப்பான முறையில் பணியாற்றிடவும், உடல் நலனும் சுற்றுச்சூழலும் பாதிக்காத வண்ணம் இயங்கிடவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நாளானது நாடு தழுவிய அளவில் கொண்டாடப்படுகிறது.

இத்தினம் கொண்டாடப்படுவதன் நோக்கங்கள் :

1) பாதுகாப்பு கலாச்சாரத்தை ஊக்குவித்தல்

2)  பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரித்தல்

3) பணியிட விபத்துகளைக் குறைத்தல்

4) பாதுகாப்பு விதிகளை உறுதி செய்தல்

5) பாதுகாப்பு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் ஆகியனவாகும்.

விபத்துகளுக்கான எதிர்வினையை விட பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை இவ்விழிப்புணர் தினம் ஊக்குவிக்கிறது. அத்துடன் சமூக, பொருளாதார முன்னேற்றத்தில் பாதுகாப்பின் பங்கை வலியுறுத்துகிறது. மேலும் உடல், மனம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பாதுகாப்பை வலியுறுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாகப் பாதுகாப்பு விதிகளுக்கு இணக்கமாகச் செயல்படுவதை வலுபடுத்த ஆவன செய்கிறது.

*****

 

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 04.03.2025 (செவ்வாய்)

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 04.03.2025 (செவ்வாய்)

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1) நாகை புதிய பேருந்து நிலையத்தில் 105 புதிய பேருந்துகளின்  சேவையைத் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.

2) பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களைப் பதற்றமின்றித் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

3) நான் முதல்வன் திட்டத்தில் 41.3 லட்சம் மாணவர்கள் இதுவரை பயன் பெற்றுள்ளனர்.

4) மார்ச் 8 இல் இளையராஜா லண்டனில் நடத்த உள்ள சிம்பொனி இசை நிகழ்வுக்குத் தமிழக முதல்வர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

5) தமிழக வரவு செலவுத் திட்டத்தோடு (பட்ஜெட்) பொருளாதார ஆய்வறிக்கையையும் தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

6) நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் தவறாது  பங்கேற்க முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

7) போதைப் பொருள்களுக்கான எதிரான போராட்டத்தில் மத்திய அரசு தீவிரமாகச் செயல்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

8) வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9) அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக ஆங்கிலத்தை அறிவித்து உத்தரவிட்டார் டொனால்ட் டிரம்ப்.

10) 97 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. அனோரா திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்றது.

English News

1) The Tamil Nadu Chief Minister inaugurated the service of 105 new buses at the Nagai New Bus Stand.

2) The Chief Minister has advised students writing public exams to face them with confidence without tension.

3) 41.3 lakh students have benefited so far under the ‘Naan Muthalvan’ scheme.

4) The Tamil Nadu Chief Minister personally met and congratulated Ilayaraja for the symphony music event to be held in London on March 8.

5) The Tamil Nadu government plans to present the Economic Survey along with the Tamil Nadu Budget.

6) The Chief Minister has invited all parties to participate in the all-party meeting to be held tomorrow.

7) Home Minister Amit Shah has said that the central government is working hard in the fight against drugs.

8) The Meteorological Department has said that the temperature in Tamil Nadu will increase by up to 3 degrees Celsius in the coming days.

9) Donald Trump has declared English as the official language of the United States.

10) The 97th Academy Awards ceremony was held in Los Angeles. The film Anora won 5 Oscars.

Sunday, 2 March 2025

ஆஸ்கர் விருதுகள் - 2025

ஆஸ்கர் விருதுகள் - 2025

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நட்சத்திரங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்புடன் தொடங்கியது 2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் விழா.

சிறந்த துணை நடிகர், துணை நடிகை பிரிவுகளில் கீரன் கல்கின், ஜோ சல்டானா ஆஸ்கர் விருதுகளை வென்றனர்.

சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதை 'THE SUBSTANCE' திரைப்படம் தட்டிச் சென்றது.

சிறந்த திரைக்கதை பிரிவுகளில் அனோரா மற்றும் கான்க்ளேவ் படங்கள், ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றன.

சிறந்த அனிமேஷன் பிரிவில் FLOW திரைப்படம் மற்றும் IN THE SHADOW OF THE CYPRESS குறும்படம் ஆஸ்கர் விருதுகளை வென்றது.

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதினை தட்டி சென்றது I'M NOT A ROBOT.

சிறந்த ஒலி, சிறந்த காட்சி விளைவுகள் என 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதினை தட்டி சென்றது DUNE இரண்டாம் பாகம்.

சிறந்த ஆவண படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது 'NO OTHER LAND'

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை 'A Real Pain' படத்திற்காக கீரன் கல்கின் வென்றார்.

சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது `Wicked' படத்திற்காக பால் டேஸ்வெல்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

*****

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 03.03.2025 (திங்கள்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. எட்டு லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

2) 2023 அக்டோபர் 1க்குப் பிறகு பிறந்தவர்கள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

3) நாளை முதல் (மார்ச் 4) தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயங்கும், தாம்பரம் வரை இயங்காது.

4) உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

5) சென்னை, கொளத்தூரில் பெரியார் மருத்துவமனையைத் திறந்து வைத்து முதல்வர் பார்வையிட்டார்.

6) வீட்டுவசதி வாரியத்தின் 1500 புதிய குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார்.

7) கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து 6 மாவட்ட ஆட்சியர்களைத் துரித நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

8) மகா கும்பமேளா தேசிய உணர்வுக்குப் புத்துயிர் அளித்துள்ளதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

9) சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களைக் கண்காணிக்க நுண்சில்லுகளை (மைக்ரோசிப்) பொருத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

10) சுங்கத்துறை மற்றும் சரக்கு சேவைத் துறை அதிகாரிகள் கைது செய்யும் அதிகாரத்தை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது.

11) மார்ச் 31க்குப் பிறகு டில்லியில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

12) பிப்ரவரி மாத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 1.84 லட்சம் கோடி ரூபாயாகும்.

13) இந்தியாவின் தனிநபர் நுகர்வு கடந்து ஆண்டுகளை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

14) தங்க அட்டை குடியுரிமைத் திட்டத்தின் கீழ் இந்தியர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியில் அமர்த்தலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

English News

1) The Class XII public examinations begin today. Eight lakh 21 thousand 57 students are appearing for the exam.

2) Birth certificate has been made mandatory for those born after October 1, 2023 to obtain a passport.

3) From tomorrow (March 4), South District buses will run only up to Kilampakkam and will not run up to Tambaram.

4) The Chief Minister has announced that the differently-abled will be given appointed representation in local bodies.

5) The Chief Minister inaugurated the Periyar Hospital in Kolathur, Chennai and inspected it.

6) The Chief Minister inaugurated 1500 new flats of the Housing Board.

7) The Chief Minister has ordered 6 District Collectors to take immediate action following the heavy rain warning.

8) The Prime Minister has said that the Maha Kumbh Mela has revived national sentiment.

9) Chennai Corporation has started a project to implant microchips to track dogs on the roads.

10) The Supreme Court has confirmed the arrest powers of Customs and Excise Department officials.

11) It has been announced that fuel will not be supplied to vehicles more than 15 years old in Delhi after March 31.

12) Goods and Services Tax (GST) collection in February is Rs 1.84 lakh crore.

13) India's per capita consumption has doubled compared to the previous years.

14) US President Donald Trump has said that Indians can be employed by US companies under the Golden Card citizenship scheme.

Saturday, 1 March 2025

முடியும் என்றால் முடியும்! – ஒரு தன்னம்பிக்கை கதை!

முடியும் என்றால் முடியும்! – ஒரு தன்னம்பிக்கை கதை!

கல்லென்றால் அது கல்.

கடவுள் என்றால் அது கடவுள் என்பார்கள்.

பார்க்கும் பார்வைதான் உங்களுக்கு இந்த உலகை உருவாக்குகிறது.

அது போல, முடியும் என்றால் உங்களால் முடியும்.

முடியாது என்றால் உங்களால் முடியாது.

இதை விளக்கும்படியான கதை ஒன்றை அறிவோமா?

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஒரு பூங்காவில் சோர்ந்து போய் அமர்ந்திருந்தார் ஒரு தொழிலதிபர்.

அப்போது அங்கே வந்த இன்னொரு தொழிலதிபர் அவரை விசாரித்தார்.

முடிவில், உன் சோர்வைப் போக்க உனக்கு என்ன தேவை என்றார்?

ஒரு கோடி ரூபாய் பணம் இருந்தால் நஷ்டத்தில் இருக்கும் என் தொழிலை லாபத்திற்குக் கொண்டு வந்து விடுவேன் என்றார் சோர்வுற்றிருந்த தொழிலபதிபர்.

கவலைப்படாதே. இதோ ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை. இதை வைத்துக் கொள். அடுத்த வருடம், இதே மாதம், இதே நாள், இதே நேரம். நான் இங்கே வருவேன். அப்போது இந்த ஒரு கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுத்தால் போதும் என்று கூறிவிட்டு விசாரித்த தொழிலபதிபர் சென்று விட்டார்.

சோர்வுற்றிருந்த தொழிலபதிபருக்கு உற்சாகம் வந்து விட்டது.

உடனே தனது நிறுவனத்துக்குச் சென்றார்.

தன் ஊழியர்களிடம் பேசினார்.

ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை வந்திருக்கும் செய்தியைச் சொன்னார்.

ஊழியர்களுக்கும் உற்சாகம் வந்து விட்டது.

இருந்தாலும், அந்தத் தொழிலபதிபர் அந்த ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை இப்போது பயன்படுத்தப் போவதில்லை. இதை அப்படியே பெட்டியில் வைத்துப் பூட்டப் போகிறேன் என்றார்.

ஊழியர்களுக்கு அதிர்ச்சி.

அப்போது அவர் சொன்னார், நாம் நஷ்டமடைந்ததற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து முதலில் சரி செய்வோம். தேவைப்பட்டால் நாம் இந்தக் காசோலையைப் பயன்படுத்துவோம் என்றார்.

ஊழியர்கள் ஒத்துக் கொண்டனர். ஒவ்வொருவரும் நஷ்டம் அடைந்ததற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து சரி செய்யத் துவங்கினர்.

வெகு விரைவிலேயே அந்த நிறுவனம், கோடிக் கணக்கான ரூபாயாக இருந்த கடனை அடைத்து, கோடிக்கணக்கான லாபம் சம்பாதிக்கும் நிறுவனமாக மாறியது.

ஓராண்டு முடிந்து அந்த நாள் வந்த போது இப்போது நட்டத்திலிருந்து லாபத்திற்குத் திரும்பிய தொழிலதிபர் அந்தப் பூங்காவிற்குச் சென்றார்.

தனக்கு ஒரு கோடி ரூபாய் காசோலை கொடுத்த தொழிலதிபரைத் தேடினார்.

அவர் வரவே இல்லை.

அந்தக் காசோலையை எடுத்துக் கொண்டு போய் வங்கியில் விசாரித்தார்.

அது செல்லாத காசோலை என்றார்கள் வங்கியாளர்கள்.

ஒரு செல்லாத காசோலையா தன்னை நட்டப் பாதையிலிருந்து லாபப் பாதைக்குத் திருப்பியது? என யோசித்தார் அந்தத் தொழிலதிபர்.

தன்னிடம் ஒரு கோடி இருப்பதாக நம்பிய நம்பிக்கையும், எப்படி நட்டம் வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று அந்தக் காசோலை தந்த தன்னம்பிக்கையும்தான் தன்னை மாற்றியது என்பதை உணர்ந்தார்.

எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை எப்படி தன்னை மாற்றியது என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் போதும், எத்தகைய சூழ்நிலையிலிருந்தும் மேலேழ முடியும் என்பது அவருக்குப் புரிந்தது. உண்மைதானே?

ஆகவே முடியும் என்றே நினையுங்கள். உங்களால் முடியும்.

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம்.

இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி!

வணக்கம்!

*****