Saturday, 1 March 2025

முடியும் என்றால் முடியும்! – ஒரு தன்னம்பிக்கை கதை!

முடியும் என்றால் முடியும்! – ஒரு தன்னம்பிக்கை கதை!

கல்லென்றால் அது கல்.

கடவுள் என்றால் அது கடவுள் என்பார்கள்.

பார்க்கும் பார்வைதான் உங்களுக்கு இந்த உலகை உருவாக்குகிறது.

அது போல, முடியும் என்றால் உங்களால் முடியும்.

முடியாது என்றால் உங்களால் முடியாது.

இதை விளக்கும்படியான கதை ஒன்றை அறிவோமா?

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஒரு பூங்காவில் சோர்ந்து போய் அமர்ந்திருந்தார் ஒரு தொழிலதிபர்.

அப்போது அங்கே வந்த இன்னொரு தொழிலதிபர் அவரை விசாரித்தார்.

முடிவில், உன் சோர்வைப் போக்க உனக்கு என்ன தேவை என்றார்?

ஒரு கோடி ரூபாய் பணம் இருந்தால் நஷ்டத்தில் இருக்கும் என் தொழிலை லாபத்திற்குக் கொண்டு வந்து விடுவேன் என்றார் சோர்வுற்றிருந்த தொழிலபதிபர்.

கவலைப்படாதே. இதோ ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை. இதை வைத்துக் கொள். அடுத்த வருடம், இதே மாதம், இதே நாள், இதே நேரம். நான் இங்கே வருவேன். அப்போது இந்த ஒரு கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுத்தால் போதும் என்று கூறிவிட்டு விசாரித்த தொழிலபதிபர் சென்று விட்டார்.

சோர்வுற்றிருந்த தொழிலபதிபருக்கு உற்சாகம் வந்து விட்டது.

உடனே தனது நிறுவனத்துக்குச் சென்றார்.

தன் ஊழியர்களிடம் பேசினார்.

ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை வந்திருக்கும் செய்தியைச் சொன்னார்.

ஊழியர்களுக்கும் உற்சாகம் வந்து விட்டது.

இருந்தாலும், அந்தத் தொழிலபதிபர் அந்த ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை இப்போது பயன்படுத்தப் போவதில்லை. இதை அப்படியே பெட்டியில் வைத்துப் பூட்டப் போகிறேன் என்றார்.

ஊழியர்களுக்கு அதிர்ச்சி.

அப்போது அவர் சொன்னார், நாம் நஷ்டமடைந்ததற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து முதலில் சரி செய்வோம். தேவைப்பட்டால் நாம் இந்தக் காசோலையைப் பயன்படுத்துவோம் என்றார்.

ஊழியர்கள் ஒத்துக் கொண்டனர். ஒவ்வொருவரும் நஷ்டம் அடைந்ததற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து சரி செய்யத் துவங்கினர்.

வெகு விரைவிலேயே அந்த நிறுவனம், கோடிக் கணக்கான ரூபாயாக இருந்த கடனை அடைத்து, கோடிக்கணக்கான லாபம் சம்பாதிக்கும் நிறுவனமாக மாறியது.

ஓராண்டு முடிந்து அந்த நாள் வந்த போது இப்போது நட்டத்திலிருந்து லாபத்திற்குத் திரும்பிய தொழிலதிபர் அந்தப் பூங்காவிற்குச் சென்றார்.

தனக்கு ஒரு கோடி ரூபாய் காசோலை கொடுத்த தொழிலதிபரைத் தேடினார்.

அவர் வரவே இல்லை.

அந்தக் காசோலையை எடுத்துக் கொண்டு போய் வங்கியில் விசாரித்தார்.

அது செல்லாத காசோலை என்றார்கள் வங்கியாளர்கள்.

ஒரு செல்லாத காசோலையா தன்னை நட்டப் பாதையிலிருந்து லாபப் பாதைக்குத் திருப்பியது? என யோசித்தார் அந்தத் தொழிலதிபர்.

தன்னிடம் ஒரு கோடி இருப்பதாக நம்பிய நம்பிக்கையும், எப்படி நட்டம் வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று அந்தக் காசோலை தந்த தன்னம்பிக்கையும்தான் தன்னை மாற்றியது என்பதை உணர்ந்தார்.

எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை எப்படி தன்னை மாற்றியது என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் போதும், எத்தகைய சூழ்நிலையிலிருந்தும் மேலேழ முடியும் என்பது அவருக்குப் புரிந்தது. உண்மைதானே?

ஆகவே முடியும் என்றே நினையுங்கள். உங்களால் முடியும்.

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம்.

இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment