Saturday, 8 March 2025

இலவசம் ஒரு நாள் கொல்லும்! – உழைப்பை உணர்த்தும் உன்னத கதை!

இலவசம் ஒரு நாள் கொல்லும்! –

உழைப்பை உணர்த்தும் உன்னத கதை!

உழைத்துப் பெறுவதற்கே மதிப்பு இருக்கும்.

உன்னதமான ஒருமதிப்பு இருக்கும்.

இலவசமாகப் பெறுவதற்கு என்ன மதிப்பு இருக்கும்?

உழைப்பு உங்களை எந்நாளும் வாழ வைக்கும்

இலவசம் உங்களை வாழ வைக்காது. ஒரு நாள் உங்களைக் கொல்லும்.

ஆம்!

புகைப் பிடித்தல், மது அருந்துதல் மட்டும் உயிரைக் கொல்லும் என்று நினைக்காதீர்கள். இலவசமும் கொல்லும்.

இதை விளக்கும்படியான கதை ஒன்றைக் காண்போமா?

தேனீக்கள் சுறுசுறுப்பானவை. மலருக்கு மலர் தேடிச் சென்று தேனைச் சேகரிப்பவை. கடும் உழைப்பில் தேன் கூட்டை உருவாக்குபவை. இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்ததுதானே?

இந்தச் சுறுசுறுப்பான தேனீக்களைப் பார்த்து, இப்படி ஏன் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்று நினைத்தன ஈக்கள். உழைப்பில்லாமல் எப்படி வாழலாம் என்று யோசித்தன.

இந்த உலகில் எல்லாவற்றுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்தானே. அந்த ஈக்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அந்த ஈக்கள் ஒரு தேன் பாட்டிலைப் பார்த்தன. அந்தத் தேன் பாட்டில் மட்டும் சாய்ந்தால் அதிலிருந்து வழியும் தேனை எந்தக் கஷ்டமில்லாமல் உண்ணலாம் என நினைத்தன.

அவற்றின் நல்ல நேரம், அந்த ஈக்கள் நினைத்தபடியே தேன் பாட்டில் கவிழ்ந்தது.

ஈக்கள் சந்தோசத்துடன் தேனை பருகின, உண்டன, ஆனந்த கூத்தாடின. வயிறு கொள்ளும் மட்டும் இன்னும் இன்னும் என்று ஆசை ஆசையாக உண்டன.

அதற்கு மேல் உண்ண முடியாது எனும் நிலை வந்த போது அங்கிருந்து பறந்து செல்ல முயன்றன.

ஆனால், அவற்றால் பறக்க முடியவில்லை. அவற்றின் உடல் எங்கும் தேன் ஒட்டிக் கொண்டிருந்தது. அத்துடன் இறக்கைகளிலும் ஒட்டிக் கொண்டிருந்தது. அந்தத் தேனை விட்டு நகர முடியாமல் அதில் மாட்டியே இறந்து போயின அத்தனை ஈக்களும்.

உழைப்பில்லாமல் எதையும் பெற முயன்றால் அந்த ஈக்களின் நிலைதான் யாராக இருந்தாலும் ஏற்படும். ஈயாக இருந்தாலும் அல்லது அது நீயாக இருந்தாலும் அதுதான் ஏற்படும்.

இதே போலத்தான் உழைப்பில்லாமல் இலவசங்கள் மூலமாகவே வாழ நினைத்தால் அந்த ஈக்களைப் போல முடிவில் இலவசங்களில் மாட்டிக் கொண்டு அதனாலேயே வாழ்க்கையை இழக்க வேண்டியதாகி விடும்.

இப்போது புரிகிறதா? இலவசம் ஒரு நாள் கொல்லும். உழைப்பே எந்நாளும் வெல்லும்.

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment