இணையவழி சூதாட்ட விளையாட்டுகள் வேண்டாமே!
இணையவழி
சூதாட்ட விளையாட்டுகள் (ஆன்லைன் சீட்டாட்டம் போன்றவை) முதலில் பணத்தைப் பரிசாக வழங்கி
விளையாடத் தூண்டுகின்றன. துவக்கத்தில் சில வெற்றிகளையும் தந்து பணத்தை வழங்குகின்றன.
வெற்றி பெற்ற ஆர்வத்தாலும் பணத்தைச் சம்பாதித்து விட்ட தன்னம்பிக்கையாலும் விளையாடத்
தொடங்குபவர்கள் அதற்கு மேல் வெற்றி பெற முடியாமல் பணத்தைப் படிப்படியாக இழக்கத் தொடங்குவர்.
பணத்தை
இழக்கத் தொடங்கியதும் பயந்து பின்வாங்க வேண்டும் அல்லவா! ஆனால் அதை செய்ய மாட்டார்கள்.
விட்ட பணத்தைப் பிடிக்கிறேன் பார் என்று கையிலிருக்கும் பணத்தைப் போட்டு மேலும் மேலும்
விளையாட ஆரம்பிப்பார்கள். அப்படி விளையாடியும் பணத்தை இழப்பார்கள்.
அத்தோடு
விட்டோம் என்று விட மாட்டார்கள். அடுத்த கட்டமாகச் சேமிப்பு மற்றும் முதலீடுகளை எடுத்து
விளையாட ஆரம்பித்து, அதிலும் தோல்வி கண்டு பணத்தை இழப்பார்கள்.
இத்தோடாவது
விட்டோம் என்று விடுவார்களா என்றால், அடுத்ததாகக் கடன் வாங்கி விளையாட ஆரம்பிப்பார்கள்.
அதிலும் தோல்வி கண்டு பணத்தை இழப்பார்கள்.
முடிவில்
கடன் தொல்லை தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.
ஆகவே
இது போட்ட சூதாட்ட விளையாட்டுகள் எப்போதும் வேண்டாம். இதைத்தான் திருவள்ளுவர்,
“வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.” (குறள்,
931)
என்கிறார்.
சூதில்
வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி வேண்டாம் என்கிறார். ஏனென்றால், அது மீனானது தூண்டிலில்
இருக்கும் புழுவை உணவாகப் பெற்றது போல என்கிறார். மீனுக்கு உணவு கிடைத்திருக்கலாம்.
ஆனால் அதில் தூண்டிலில் இருக்கும் உணவு. அதற்கு ஆசைப்பட்ட மீனுக்கு என்ன கதி நேரிடும்
என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அந்த மீன் தூண்டில் போட்டவருக்கு உணவாவது போல, சூதில்
வென்றதாக நினைப்பரும் சூதாட்ட நிறுவனங்களின் ஆசைத் தூண்டிலுக்குப் பலியாகி விடுவர்.
ஆகவே
வேண்டாமே இணைய வழி சூதாட்ட விளையாட்டுகள் மீது நாட்டம்!
No comments:
Post a Comment