Saturday, 29 March 2025

மறக்க முடியாத மன்மோகன் சிங்!

மறக்க முடியாத மன்மோகன் சிங்!

இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக, திட்ட கமிஷசனின் துணைத் தலைவராக, சர்வதேச நிதி அமைப்புகளில் பணியாற்றியவராக, இந்தியாவின் நிதி அமைச்சராக, இந்தியாவின் பிரதமராக பலவித பொறுப்புகளில் இருந்த மன்மோகன் சிங் மறக்க முடியாத மனிதராவார். அவர் நேருவுக்குப் பின் பரந்த வாசிப்பனுபவம் நிறைந்த பிரதமரும் கூட.

அவர் ஏன் மறக்க முடியாத மனிதராகிறார் என்பதற்குக் காரணங்கள் இருக்கின்றன.

1980 கால கட்டங்களில் இந்தியப் பொருளாதாரம் மோசமாக இருந்தது. விலைவாசி கடுமையாக உயர்ந்தது. பணவீக்கமும் அதிகரித்தது.

இது 1990 வரை நீடித்தது. அப்போது கூட நாட்டின் பணவீக்கம் 16 சதவீதத்துக்கு மேல் இருந்தது. பட்ஜெட் பற்றாக்குறை 12 சதவீதத்துக்கு மேல் எகிறியது. ஏற்றுமதி வர்த்தகமும் குறைவாகவே நீடித்தது.

சோவியத் யூனியன் சிதறிய பிறகு ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்வதிலும் இந்தியாவுக்கு அப்போது சிக்கல் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் வளைகுடா நாடுகளின் போர் காரணமாக ஈராக், குவைத் போன்ற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலும் பிரச்சனை ஏற்பட்டது. கச்சா எண்ணெயின் விலையும் மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்தது.

வளைகுடா போர் காரணமாக அங்கு வேலை செய்து கொண்டிருந்த இந்தியர்கள் பலரும் நாடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் மூலமாக வந்து கொண்டிருந்த அந்நிய செலாவணியும் குறைந்தது.

அத்துடன் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பும் குறைந்தது.

இரண்டு வாரங்களுக்கு மேல் கச்சா எண்ணெயும் உரமும் இறக்குமதி செய்ய முடியாத அளவுக்குச் செலவாணி வீழ்ச்சி கண்டது.

சர்வதேச நிதியத்திடமிருந்து கடன், ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து கடன், இங்கிலாந்து வங்கிகளில் தங்கம் அடகு என்று இந்தியா சமாளித்துக் கொண்டிருந்த நேரம் அது.

அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவ் ஒரு முக்கிய முடிவை எடுத்தார்.

அரசியல் அனுபவம் இல்லாத, ஆனால் பொருளாதார அறிவு பெற்றிருந்த மன்மோகன் சிங்கை நிதியமைச்சர் ஆக்கினார்.

மன்மோகன் சிங் ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் பொருளாதாரப் படிப்பு படித்தவர். சர்வதேச நிதி அமைப்புகளில் பணியாற்றியவர். ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவர். திட்ட கமிஷனின் துணைத் தலைவராக இருந்தவர்.

மன்மோகன் சிங் துணிந்து புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தார்.

இறக்குமதி மீதான தீர்வையைக் குறைத்தார்.

லைசென்ஸ் ராஜ் முறையை மாற்றி அமைத்தார்.

அந்நிய நேரடி முதலீட்டை 51 சதவீதம் வரை அனுமதித்தார்.

உர மானியத்தின் அளவைக் குறைத்தார்.

வட்டி விகிதங்களை முடிவு செய்து கொள்ளும் உரிமைகளை வங்கிகளுக்கே அளித்தார்.

இந்திய ரூபாயின் மதிப்பைக் குறைத்து ஏற்றுமதிக்கு ஊக்கம் தந்தார்.

இவையெல்லாம் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் அவர் செய்தது.

அவர் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு வருமான வரி விலக்கு அளித்தார்.

அமெரிக்காவோடு அணு ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொண்டு, அணுமின் உற்பத்தியை அதிகரித்தார்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம், ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் போன்றவை இவர் காலத்தில் அறிவிக்கப்பட்டவையே.

இந்தியாவின் பொருளாதாரத்தைத் தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்று மாற்றியமைத்தவர் மன்மோகன் சிங்தான்.

அவர் அப்படி ஒரு மாற்றத்தைச் செய்தது, அப்போது பெரும் விமர்சனத்தைக் கொண்டு  வந்தது. அப்படி அவர் செய்யவில்லை என்றால்இந்தியப் பொருளாதாரம் தலைகீழாக மாறியிருக்கும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

எது எப்படியோ?

ஒரு நிதி அமைச்சராக, பிரமராக மன்மோகன் சிங் மறக்க முடியாத நேர்மையான மனிதரும், அசாத்தியமான ஆளுமையும் ஆவார்.

*****

No comments:

Post a Comment