என் வட்டத்தைத் தொந்தரவு செய்யாதே!
ஆர்க்கிமிடிஸ்
சிசிலியில் உள்ள சிராக்குஸ்ஸில் பிறந்தவர், அலெக்ஸாண்டிரியாவில் கல்வி பயின்றவர். அவரது
தந்தையான பீடியாஸ் ஒரு வானியல் அறிஞர்.
ஆர்க்கிமிடிஸ்
நிறைய கணித வடிவங்களுக்கு பரப்பளவு மற்றும் கனஅளவு காண்பதற்கான முறைகளைக் கண்டறிந்துள்ளார்.
அவர்
வட்டத்தின் பரப்பளவைத் தோராயமாக அதே நேரத்தில் இயன்றவரை துல்லியமாகக் கணிக்கும் முறையை
எப்படிக் கண்டறிந்தார் என்பதை நாம் இதுவரை பார்த்தோம்.
அம்முறையிலிருந்து
π இன்
மதிப்பைத் தோராயமாகக் கணிக்க முடிந்தது என்பதையும் அறிந்தோம்.
மேலும்
இம்முறை தொகுமுறை கணிதம் வளர்ச்சி பெறுவதற்கும் பிற்காலத்தில் துணை புரிந்தது என்பதையும்
நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆர்க்கிமிடிஸ்
தன் வாழ்நாளைக் கணித ஆய்வுகளுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர் என்று சொன்னால் அது மிகையாகாது.
அத்துடன்
அவர் அந்நாட்டு மன்னருடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டவராக இருந்ததால், மன்னருக்குத்
தேவையான போர் உபகரணங்களையும் தயாரித்துக் கொடுத்திருக்கிறார்.
விவசாயிகளுக்கும்
அவர் தயாரித்துக் கொடுத்து திருகு பம்பானது குடிமக்கள் மேல் காட்டிய அவர் அக்கறைக்குச்
சாட்சி எனலாம். இன்றளவும் இம்முறையே தண்ணீர் இறைக்கும் பம்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
ஆர்க்கிமிடிஸ்
என்றதும் ‘யுரேகா’ என்ற சொல் உங்களுக்கு நினைவில் வராமல் இருக்காது. இன்றளவும் கண்டுபிடிப்பால்
ஏற்படும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் சொல்லாக அச்சொல்லே இருக்கிறது. அந்த வகையில்
ஆரக்கிமிடிஸைக் கண்டுபிடிப்பாளர்களின் கண்டுபிடிப்பாளர் எனப் புகழலாம்.
இந்த
உலகைப் புரட்டுவதற்குத் தனக்கு ஒரு நெம்புகோலும், அதற்கு ஓர் ஆதாரப் புள்ளியும் போதும்
என்றவர் ஆர்க்கிமிடிஸ். அந்த அளவுக்கு அறிவியலால் உலகையே மாற்ற முடியும் என்று உறுதியாக
நம்பினார் ஆர்க்கிமிடிஸ்.
அவருடைய
கணித ஆர்வத்துக்கு அளவே கிடையாது. கணிதத்தில் மூழ்கி விட்டால் அவருக்கு உலகமே மறந்து
விடும். அந்த ஆர்வமும் மறதியுமே தன்னுடைய நாடு எதிரிகளால் கைப்பற்றப்பட்டு விட்டது
என்பதைக் கூட அறியாமல் கணித ஆய்வில் அவரை மூழ்கிக் கிடக்க வைத்து விட்டது. அதுவே அவரது
உயிருக்கும் உலை வைத்து விட்டது.
ஆர்க்கிமிடிஸின்
நாட்டைக் கைப்பற்றிய எதிரி மன்னனுக்கு ஆர்க்கிமிடிஸின் புகழ் தெரிந்திருந்தது. அவன்
ஆர்க்கிமிடிஸ்க்கோ அவரது வீட்டிற்கோ எந்தச் சேதாரமோ ஏற்படக் கூடாது எனத் தனது சிப்பாய்களுக்குச்
சொல்லித்தான் அனுப்புகிறான். ஆனால், நடந்தது வேறு.
“இங்கே
யார் ஆர்க்கிமிடிஸ்?” என்று எதிரி நாட்டுச் சிப்பாய் தன்னைப் பற்றிதான் விசாரிக்கிறான்
என்பதைக் கூட அறியாமல் கணித ஆய்வில் மூழ்கிக் கிடந்த ஆர்க்கிமிடிஸ் ‘Don’t disturb
my circles’ என்கிறார்.
இவர்
யாராடா என்னைத் தொந்தரவு செய்யாதே என்று சொல்வது என்று கோபப்பட்ட அந்தச் சிப்பாயின்
வாளுக்கு ஆர்க்கிமிடிஸ் பலியாகி விட்டார்.
வாழ்க்கை
ஒரு வட்டம் என்பார்கள். வட்டத்தைக் கட்டம் கட்டி ஆராய்ந்த ஆர்க்கிமிடிஸின் வாழ்க்கை
வட்டத்தினாலேயே முடிந்து போனது.
வரலாற்றில்
நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த மனிதர்களைப் போல ஆர்க்கிமிடிஸைக் கணிதத்தத்திற்காக
உயிர்த்தியாகம் செய்த கணிதர் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
இப்படிக்
கணித உலகில் உணர்ச்சிபூர்வமான சம்பவங்களும் பல நடந்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து காண்போம்.
அடுத்து
நாம் எதைப் பார்க்க இருக்கிறோம் என்பதை அறிய நாளை வரை காத்திருங்கள்.
******
No comments:
Post a Comment