Monday, 18 March 2024

சரியான படிப்பு முறையை அமைத்துக் கொள்வது எப்படி?

சரியான படிப்பு முறையை அமைத்துக் கொள்வது எப்படி?

நல்ல மாணவர் ஒருவர் தனக்கான படிப்பு முறையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும்?

இதற்கான விடையைக் கீழ்காணும் படிநிலைகள் மூலமாகச் செய்து கொள்ளலாம். அவையாவன,

1. படிப்பதற்கு உகந்த நேரத்தைக் கண்டறிந்து அந்த நேரத்தில் படித்தல் :

அதிகாலை நேரத்தை மனப்பாடம் செய்ய வேண்டிய பாடப்பகுதிகளைப் படிப்பதற்காக அமைத்துக் கொள்ளலாம். மாலை நேரங்களில் கணக்குகளைச் செய்து பார்க்குமாறு அமைத்துக் கொள்ளலாம். இரவு உணவுக்குப் பின் படிப்பதாக இருந்தால் துணைப்பாடம், கதை வடிவிலான பாடங்களைப் படிப்பதற்குத் திட்டமிட்டுக் கொள்ளலாம்.

2. படிப்பதற்கேற்ற சூழ்நிலையை அமைத்துக் கொள்ளுதல் :

படிக்கும் சூழ்நிலை அமைதி நிறைந்ததாகவும், தொலைக்காட்சி மற்றும் அலைபேசி போன்ற கருவிகளால் இடையீடுகள் மற்றும் குறுக்கீடுகள் இல்லாத வகையிலும் அமைத்துக் கொள்வது நல்லது.

3. படிப்பதற்கேற்ற திட்டமிடலைச் செய்து கொள்ளுதல் :

பாடப்பகுதிகளைப் பிரித்துக் கொண்டு மாதந்தோறும் எவ்வளவு படித்து முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். பிறகு அம்மாத பாடப்பகுதிகளை வாரந்தோறும் எவ்வளவு படித்து முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். வாரந்தோறும் படிக்க வேண்டிய பாடப்பகுதிகளை நாள்தோறும் எவ்வளவு படித்து முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இப்படி திட்டமிட்டுக் கொள்வதன் மூலமாகப் பாடங்களைத் தேர்வு நெருங்குவதற்குள் பதற்றமோ, பரபரப்போ இன்றி படித்து முடித்து விடலாம்.

4. படிப்பதற்கேற்ற நுட்பங்கள் மற்றும் வியூகங்கள் அமைத்துக் கொள்ளுதல் :

கடினமான பாடப்பகுதிகளை மனதில் பதிய வைத்துக் கொள்வற்கான நுட்பங்கள் நிறைய உள்ளன. உதாரணமாகக் கிட்டப்பார்வைக்கு எந்த லென்ஸ், தூரப்பார்வைக்கு எந்த லென்ஸ் என்ற குழப்பம் நேரிடும் போது ‘கிட்ட குழி எடுத்துத் தூரக் குவி’ என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தி கிட்டப்பார்வைக்கு குழி லென்ஸ் என்றும் தூரப்பார்வைக்குக் குவி லென்ஸ் என்றும் குழப்பமில்லாமல் சரியான பதிலை அளிக்கலாம். இது போன்ற நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும். கணிதங்களில் சூத்திரங்கள், வேதியியலில் தனிம வரிசை அட்டவணை, தாவரவியல் மற்றும் விலங்கியலில் வகைபாட்டு அட்டவணை போன்றவற்றைத் தெளிவாக அறிந்து கொள்ளும் போது பல பக்கமுள்ள செய்திகளை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்பது அவற்றைப் படிப்பதில் உள்ள வியூகம். இது போன்ற நுட்பங்கள் மற்றும் வியூகங்களை அறிந்து கொண்டு படிப்பது சிறந்த முறையில் எளிமையாகப் படிப்பதற்கு உதவும்.

5. மனதில் இருத்திக் கொள்வதற்கேற்ற குறிப்புகள் தயாரித்தல் :

அன்றன்று நடக்கும் பாடங்களைப் பற்றி உடனடியாகக் குறிப்பெழுதி வைத்துக் கொள்வது நல்லது. அத்துடன் பாடப்பகுதிகளைப் படிக்கும் போது அவற்றைத் தமக்குப் புரியும் வகையில் குறிப்பாக எழுதி வைத்துக் கொள்வதும் நல்லது. குறிப்புகள் தயாரித்துப் படிக்கும் போது தேர்விற்கு முன்பாக முழுப் பாடத்தையும் படித்த திருப்தி உண்டாகும். மிக அதிகப் பக்க அளவு உள்ள பாடங்களைப் படிக்கும் போது குறிப்புகள் பெரிதும் உதவக் கூடியன.

6. சுய மதிப்பீட்டுத் தேர்வுகளை எழுதிப் பார்த்தல் :

தேர்வை எழுதுவதற்கு முன்பாக கடந்து ஆண்டு வினாத்தாள்கள் அல்லது மாதிரி வினாத்தாள்களைப் பயன்படுத்திச் சுயமாக ஒரு தேர்வை எழுதிப் பார்த்து விட்டு தேர்வை எழுதுவது நல்லது. இதனால் அத்தேர்வைக் குறித்த நேரத்தில் எழுதி முடித்து விட முடியுமா? எழுதும் போது என்ன மாதிரியான இடர்பாடுகள் நேரிடும்? என்பன போன்ற வினாக்களுக்கு விடை கண்டறிந்து பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ள முடியும்.

7. மனஅழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுதல் :

எந்நேரமும் படிப்பு என்றில்லாமல் படிப்பதற்கு இடையே அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை உங்கள் மனதுக்குப் பிடித்த பாடல் கேட்டல், நடனம் ஆடுதல், விருப்பமான விளையாட்டை விளையாடுதல், இயற்கையை ரசித்தல், நடைபயிற்சி செய்தல், நண்பர்களோடு அரட்டை அடித்தல் போன்றவற்றில் உங்களுக்குப் பிடித்தமான ஒன்றைச் செய்வதன் மூலமாக மனதை இறுக்கமடையாமல் தளர்வாக வைத்துக் கொள்ள முடியும். வாரத்திற்கு ஒரு முறை திரைப்படம் பார்ப்பது உங்களுக்கு மகிழ்ச்சி தரும் அனுபவமாக இருக்குமானால் வாரம் ஒரு முறை திரைப்படம் பார்த்து உங்களைத் தளர்வாக வைத்துக் கொள்ளலாம்.

8. தேர்வில் வெற்றி பெறுவதற்கேற்ப எழுதும் முறைகளை அமைத்துக் கொள்ளுதல் :

படிப்பதைப் போன்றே படித்ததைத் தேர்வில் வெளிப்படுத்துவதும் ஒரு திட்டமிட்ட செயல்பாடே. வினாவிற்குரிய விடைகளை எப்படி எழுதுவது என்பதை நன்கு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். பத்தி பத்தியாக எழுத வேண்டிய வினாக்களுக்கு பத்தி பத்தியாகவும், எண்களிட்டுக் குறிப்புகளாக எழுத வேண்டிய வினாக்களுக்கு குறிப்புகளாகவும் விடை எழுத வேண்டும். தேவையான இடங்களில் அடிக்கோடிட்டுக் காட்டுதல், படங்கள் வரைந்து விளக்குதல் போன்றவற்றையும் செய்ய வேண்டியிருக்கும். இது போன்ற எழுதும் முறைகளைக் கையாள வேண்டும்.

இந்த எட்டுப் படிநிலைகளைச் சரியாக அமைத்துக் கொள்வதன் மூலமாக ஒரு மாணவர் தனக்கான சரியான படிப்பு முறையை வகுத்துக் கொள்ளலாம். சரியான படிப்பு முறையைப் பழக்கப்படுத்திக் கொண்டு, அதை தன்னுடைய வழக்கமாக்கிக் கொண்டால் எத்தகையப் படிப்பினையும் படித்து எத்தகையை தேர்வினையும் எழுதி மாணவர்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல வெற்றி காண முடியும்.

*****

Saturday, 16 March 2024

டிஜிட்டல் ஆப்களில் கடன் வாங்க வேண்டாம்!

டிஜிட்டல் ஆப்களில் கடன் வாங்க வேண்டாம்!

டிஜிட்டல் ஆப்களில் கடன் வாங்க வேண்டாம் என்பதற்கான முக்கியமான காரணம், டிஜிட்டல் ஆப்களின் கடனுக்கான வட்டி விகிதம் 40 சதவீதத்திற்கு மேல். இது கிரெடிட் கார்டுக்கான வட்டி விகிதத்தை விட அதிகம். மேலும் கிரெடிட் கார்டுக்கான வட்டி விகிதம் என்பது ஓராண்டு என்ற கால அளவை அடிப்படையாகக் கொண்டவை. கடன் ஆப்களின் வட்டி விதிகம் என்பது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் என்ற கால அளவை உடையவை.

டிஜிட்டல் ஆப்கள் மூலம் கடன் வாங்குபவர்கள் பெரும்பாலும் டிஜிட்டல் அறிவோ, ஆங்கில அறிவோ இல்லாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு இந்த கடன் ஆப்கள் மட்டும் எப்படியோ அறிமுகமாகி விடுகின்றன. பெரும்பாலும் கல்வி அறிவற்ற தினக் கூலிகள், மாணவர்கள், சிறு வணிகர்கள் போன்றோர் இந்த கடன் ஆப்களில் சிக்கிக் கொள்கிறார்கள்.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடன் ஆப்கள் ப்ளே ஸ்டோரில் புழங்குகின்றன. இவற்றில் பதிவு செய்யப்பட்டவையும் இருக்கின்றன, பதிவு செய்யப்படாதவையும் இருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து இயங்கும் ஆப்களும் இருக்கின்றன.

இந்தக் கடன் ஆப்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இயங்குவதால் அதன் விதிமுறைகள், வட்டி விகிதம் போன்றவை பற்றி பலரும் அறிந்து கொள்வதில்லை. கடன் வாங்கும் அவசரத்தில் இருக்கும் பலர் இவற்றைப் படித்துப் பார்ப்பதையும் விரும்புவதில்லை.

விளையாட்டு ஆப்பை டவுன்லோட் செய்து விளையாடுவது போலப் பலரும் கடன் ஆப்பை டவுன்லோட் செய்து கடன் வாங்கி சிக்கிக் கொள்கிறார்கள்.

இப்படிக் கடன் வாங்கிச் சிக்கிக்கொள்வதால் என்ன நேரிடும் என்றால் பத்தாயிரம் கடனைக் குறித்த காலத்தில் கட்டினாலும 14000 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். ஒரு வேளை கட்டத் தவறினால் அபராதம் விதிக்கப்பட்டு பத்தாயிரம் கடனை இருபதாயிரம், முப்பதாயிரம் என்று கட்ட வேண்டியிருக்கும்.

கடனைக் கட்டாமல் மேலும் தவிர்க்க நினைத்தால் கடன் தந்த நிறுவனம் உங்களுடைய உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் அலைபேசியில் உங்களைப் பற்றிய ஆபாசமான, அசிங்கமான செய்திகளை அனுப்பத் துவங்கும். கடன் ஆப் நிறுவனங்களுக்கு எப்படி அவர்களுடைய எண்கள் தெரியும் என்றால் நீங்கள் கடனுக்கான ஆப்பை டவுன்லோட் செய்யும் போதே, உங்கள் தொடர்பில் உள்ள அத்தனை எண்களையும் கடன் ஆப் உறிஞ்சி எடுத்துக் கொண்டு வைத்து விடும்.

அத்துடன் உங்களுக்குப் பொய்யான போலீஸ் அறிக்கைகள் மற்றும் லீகல் நோட்டீஸ்களையும் அனுப்பும். இதனால் உங்களை மான பங்கப்படுத்தும் மற்றும் தற்கொலைக்குத் தூண்டும். கடனைக் கட்டினால் அன்றி உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை இல்லை என்று ஒரு வழி செய்து விடும்.

நாட்டில் நடைபெறும் பொருளாதார மோசடிகளில் கால்வாசிக்கு மேல் கடன் ஆப்களில் நடைபெறுகின்றன என்பதால் இது குறித்து எச்சரிக்கையாக இருங்கள். கடன் ஆப்களில் கடன் வாங்காமல் இருங்கள்.

இத்தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற பயனுள்ள தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

*****

Friday, 15 March 2024

வாகனங்களின் டயர் விவரம் குறித்து அறிந்து கொள்வோமா?

வாகனங்களின் டயர் விவரம் குறித்து அறிந்து கொள்வோமா?

ஒவ்வொரு வாகன வகை டயரின் பக்கவாட்டில் அது குறித்த தகவல்கள் இடம் பெற்றிருக்கும். பக்கவாட்டில் இடம் பெற்றிருக்கும் தகவல்கள் முலமாக அந்த டயர் செல்வதற்கான வேகம், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்ற விவரங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, டயரின் பக்கவாட்டில் நீங்கள் 1415 என்ற எண்ணைக் கண்டால, இதன் பொருள், அந்த டயர் 2015 ஆம் ஆண்டின் பதினான்காவது வாரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதாகும்.

ஒரு டயர் உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு டயருக்கும் ஒரு குறிப்பிட்ட வேக கட்டுபாட்டு அளவு உண்டு. வாகனங்கள் செல்லும் வேக அளவுக்கு ஏற்ப டயர்களைப் பயன்படுத்த வேண்டும். 150 கி.மீ. வேகத்தில் செல்லும் வாகனத்தில் 120 கி.மீ. வேக வரம்பிற்கான டயர்களைப் பயன்படுத்தக் கூடாது. டயரின் பக்கவாட்டில் இதற்கான எழுத்து குறியீடு இடம் பெற்றிருக்கும்.

L என்ற எழுத்து காட்டும் அதிகபட்ச வேகம் 120 கி.மீ.

M என்ற எழுத்து காட்டும் அதிகபட்ச வேகம். 130 கி.மீ.

N என்ற எழுத்து காட்டும் அதிகபட்ச வேகம் 140 கி.மீ.

P என்ற எழுத்து காட்டும் அதிகபட்ச வேகம் 150 கி.மீ.

Q என்ற எழுத்து காட்டும் அதிகபட்ச வேகம் 160 கி.மீ.

R என்ற எழுத்து காட்டும் அதிகபட்ச வேகம் 170 கி.மீ.

H என்ற எழுத்து காட்டும் அதிகபட்ச வேகம் 210 கி.மீ.

V என்ற எழுத்து காட்டும் அதிகபட்ச வேகம் 240 கி.மீ.

W என்ற எழுத்து காட்டும் அதிகபட்ச வேகம் 270 கி.மீ.

Y என்ற எழுத்து காட்டும் அதிகபட்ச வேகம் 300 கி.மீ.

இனி டயரைப் பார்க்கும் போதெல்லாம் அதன் பக்கவாட்டில் இடம் பெற்றிருக்கும் எண்கள் மற்றும் எழுத்துகளைக் கொண்டு டயர் பற்றிய மேற்படி விவரங்களை அறிந்து கொள்ளுங்கள். இத்தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற பயனுள்ள தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

*****

Thursday, 14 March 2024

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு - NMMS 2023 – 2024 திருவாரூர் மாவட்டமும் பிற மாவட்டங்களும்

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு - NMMS 2023 – 2024

திருவாரூர் மாவட்டமும் பிற மாவட்டங்களும்

2023 – 2024 ஆம் கல்வியாண்டில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு எனப்படும் NMMS தேர்வினைத் தமிழகமெங்கும் எட்டாம் வகுப்பு பயிலும் 2,25,490 மாணவர்கள் எழுதியுள்ளனர். இத்தேர்வில் உதவித்தொகை பெறுவதற்குத் தகுதியானவர்கள் 5890 மாணவர்கள் மட்டுமே. ஆனால் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள உதவித்தொகை பெறுவதற்கான மாணவர்களின் எண்ணிக்கை 6695 ஆகும். இன்னும் 805 மாணவர்கள் உதவித் தொகை பெறுவதற்கான வாய்ப்பு இருந்தும் அதற்கான தகுதி மதிப்பெண்களைப் பெறாத காரணத்தால் தமிழகம் 805 மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கான வாய்ப்பை இழந்துள்ளது.

உதவித்தொகை பெறுவதற்குத் தமிழகமெங்கும் உள்ள மாவட்டங்களில் தேர்வான மாணவர்களின் வரிசையில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. தர்மபுரி இரண்டாம் இடத்திலும், தூத்துக்குடி மூன்றாம் இடத்திலும் உள்ளது.

திருவாரூர் மாவட்டம் முப்பதாவது இடத்தில் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் தேர்வான மாணவர்களின் எண்ணிக்கை 73 ஆகும். இந்த எண்ணிக்கை என்பது மாவட்டத்தைப் பொருத்த அளவில் தமிழகமெங்கும் தேர்வானவர்களோடு ஒப்பு நோக்கும் போது ஒன்றரை சதவீதத்திற்கும் குறைவாகும்.

திருவாரூர் மாவட்டத்தில் 405 நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பதின்மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட எட்டாம் வகுப்பு மாணவர்கள் பயில்கிறார்கள். அந்த எண்ணிக்கையோடு ஒப்பு நோக்கும் போது தேர்வானவர்களின் எண்ணிக்கை தோராயமாக அரை சதவீத அளவாகும்.

தேர்வான மாணவர்களின் தரவுகளை ஒப்பு நோக்கும் போது மனத்திறன் தேர்வு எனப்படும் MAT இல் தேர்வு பெற்றவர்களை விட படிப்பறிவுத் திறன் தேர்வு எனப்படும் SAT தேர்வில் தேர்வு பெறாமல் வாய்ப்பை இழந்தவர்கள் அதிகம்.

இதற்கு ஒரு நல்ல தீர்வாக ஏழாம் வகுப்பின் முப்பருவ மற்றும் எட்டாம் வகுப்பின் முதல் இரு பருவ கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை நன்கு பயில்வதும், அவற்றில் போதுமான அளவுக்குப் பயிற்சி பெறுவதும் உதவும்.

மற்றொரு தீர்வாகத் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்விற்கு முன்பாகப் பத்து மாதிரித் தேர்வுகள் எழுதிப் பார்ப்பதும் பயனுள்ளதாக அமையும்.  

இவ்விரு தீர்வுகளும் திருவாரூர் மாவட்ட மாணவர்களை மட்டுமல்லாது தமிழகமெங்கும் பயிலும் பல்வேறு மாவட்ட மாணவர்களை அதிக அளவில் இத்தேர்வில் தேர்வு பெறச் செய்து கல்வி உதவித் தொகையினைப் பெற உதவும்.

வரும் கல்வியாண்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தையும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தகுதி பெற்று பயன்படுத்திக் கொள்ள துணை நிற்போமாக!

*****

Wednesday, 13 March 2024

சர்வதேச ‘பை’ (π) தினம்

சர்வதேச ‘பை’ (π) தினம்

சர்வதேச ‘பை’ (π) தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

π இன் தோராய மதிப்பான 3.14 இல் 3 என்பது மூன்றாவது மாதமான மார்ச்சையும் 14 என்பது 14 வது நாளையும் குறிப்பதாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச ‘பை’ தினம் மார்ச் மாதம் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு நாட்டிலும் π இன் மதிப்பானது பழங்காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அதற்கான வடிவத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர் வில்லியம் ஜோன்ஸ் ஆவார். இவர் அறிவியல் அறிஞரான நியூட்டனின் நண்பர் ஆவார். இவர் π இன் இந்த வடிவத்தை 1706 இல் அறிமுகப்படுத்தினார். கணித அறிஞர் ஆய்லர் இந்த வடிவத்தைப் பிரபலப்படுத்தியவர் ஆவார்.

சர்வதேச ‘பை’ (π) தினத்தை அமெரிக்கா இயற்பியலரான லாரி ஷா என்பவர் சான் பிரான்சிஸ்கோவில் முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். இதனால் இவர் ‘பிரின்ஸ் ஆப் பை’ எனவும் அழைக்கப்படுகிறார்.

‘பை’ (π) ஒரு விகிதமுறா எண் என்பதை நாம் அறிவோம். இதன் தோராய மதிப்பு பல தசம இலக்கங்களுக்கு நீளக் கூடியது. பொதுவாகக் கணக்குகளில் இதன் மதிப்பை 22/7 எனவோ அல்லது 3.14 எனவோ எடுத்துக் கொண்டு செய்கிறோம்.

‘பை’ (π) இன் தோராய மதிப்பை  3.141592653589793238462643383279502884197… என எழுதிக் கொண்டே போகலாம். இப்படியாக 22 டிரில்லியன் இலக்கங்கள் வரை கண்டறிந்துள்ளார்கள் என்பது ஆச்சரியமான விசயம் இல்லையா!

‘பை’ (π) இன் தோராய மதிப்பை  நாம் 22/7 குறிப்பிடுவதைப் பாபிலோனியர்கள் 31/8 என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்பது மற்றோர் ஆச்சரியமான விசயம்.

இன்னும் ஓர் ஆச்சரியமான விசயம் என்னவென்றால் ‘பை’ (π) தினம்தான் ஐன்ஸ்டீனின் பிறந்த தினமும். ஆம் ஐன்ஸ்டீன் பிறந்தது 14.03.1879 ஆகும்.

‘பை’ (π) தினத்தைப் பற்றி அறிய வந்து எவ்வளவு கணித விவரங்களைத் தெரிந்து கொண்டோம் பார்த்தீர்களா? இந்தத் தகவல்கள் உங்களுக்குப் பயனுள்ள வகையில் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி!

வணக்கம்!

*****

Tuesday, 12 March 2024

ஆசிரியர்களுக்குப் பயன்படும் செயற்கை நுண்ணறிவு தளங்கள்

ஆசிரியர்களுக்குப் பயன்படும் செயற்கை நுண்ணறிவு தளங்கள்

ஆசிரியர்களுக்குப் பயன்படும் செயற்கை நுண்ணறிவு தளங்கள் (Artificial Intelligence) இணைய தளத்தில் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு தளமும் பாடத்திட்டத்தை வடிவமைப்பது, கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகளுக்கு துணை செய்வது என்று பல விதங்களில் உதவியாக இருக்கின்றன. அப்படி சில தளங்களின் இணைப்புகளை இங்கு காண்போம். ஆசிரியர்கள் இத்தளத்தற்குச் சென்று தோண்டித் துருவிப் பார்த்து செயற்கை நுண்ணறிவை எவ்விதம் தங்கள் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பாடத்தயாரிப்புக்குப் பயன்படும் Curipod இணையதளம் :

 https://curipod.com/generators/Full-lesson/g/753d7c32-4f9b-42bf-bb53-12419c28425d

மதிப்பீடுகளுக்குப் பயன்படும் Conkev இணையதளம் :

 https://www.conker.ai/

ஆங்கில ஆசிரியர்களுக்குப் பயன்படும் Twee இணையதளம் :

 https://twee.com/

படிவங்கள் நிரப்புதலில் பயிற்சி தரும் Forms App இணையதளம் :

 https://forms.app/

விளையாட்டு முறையில் கற்பிக்க, மதிப்பிட பயன்படும் Gibbly இணையதளம் :

 https://www.gibbly.co/

*****

Monday, 4 March 2024

வங்கிகளில் உடனடி வேலைவாய்ப்பு பெற படிக்க வேண்டிய நிறுவனம்!

வங்கிகளில் உடனடி வேலைவாய்ப்பு பெற படிக்க வேண்டிய நிறுவனம்!

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத், மஷாப் டேங்க் பகுதியில் உள்ளது IDRBT. அதாவது Institute for Development and Research in Banking Technology. இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியின் நிர்வாக்ததின் கீழ் இக்கல்வி நிறுவனம் நடத்தப்படுகிறது.

இந்நிறுவனம் வங்கி தொடர்பான பல்வேறு பொறியியல், தகவல் தொழில்நுட்ப படிப்புகளை வழங்குகிறது. பொறியியல் படித்தவர்கள், முதுநிலை கணினியியல், கணினி பயன்பாடுகள் போன்ற படிப்புகளைப் படித்தவர்கள் மேற்கொண்டு இந்நிறுவனங்களில் படிக்கலாம். இதற்காக GATE தேர்வு எழுதி தேர்வு பெற்றிருக்க வேண்டும்.

வங்கிகளுக்கென்றே இயங்கும் கல்வி நிறுவனம் என்பதால் இந்நிறுவனத்தின் பாடத்திட்டத்தை வேறெங்கும் படிக்க இயலாது.

வங்கிகளில் உடனடி வேலைவாய்ப்புகளை விரும்புவோரும், வங்கிகளில் பணியாற்றும் உயர்பதவியை அடைய விரும்பும் ஊழியர்களும் இந்நிறுவனத்தில் பயின்று தங்கள் கனவுகளை விரைவாக அடையலாம்.

இந்நிறுவனங்களில் பயின்று வேலை வாய்ப்பைப் பெறுவோரின் குறைந்தபட்ச ஆண்டு வருமானம் ஒன்பது லட்சமாக உள்ளது. இந்நிறுவனம் தொடர்பான மேலதிக விவரங்களைப் பெறவும், இந்நிறுவனம் வழங்கும் படிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.idrbt.ac.in/

*****