Monday, 31 March 2025

தொடக்கப் பள்ளிக்கான புதிய தேர்வு கால அட்டவணை

தொடக்கப் பள்ளிக்கான புதிய தேர்வு கால அட்டவணை

கோடை வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு தொடக்கப் பள்ளிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்து புதிய தேர்வு கால அட்டவணையைத் தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தேர்வுகள் ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி அன்று நிறைவு பெறுகின்றன. இத்ததேர்வு கால அட்டவணையைக் கீழே காணவும்.


Sunday, 30 March 2025

எட்டாம் வகுப்பு - இயல் – 4 - திருப்புதல்

எட்டாம் வகுப்பு

இயல் – 4

திருப்புதல்

1) கல்வி அழகே அழகு – மனப்பாடப் பகுதி

கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்

மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – முற்ற

முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே

அழகுக்கு அழகுசெய் வார்.

 

2) நீதிநெறி விளக்கப் பாடல் கூறும் கருத்துகள் யாவை?

1)  ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட நகைக்கு அழகூட்ட வேறு மணிகள் தேவையில்லை.

2)  கற்றோருக்குக் கல்வியே அழகாகும். எனவே அவருக்கு அழகூட்ட வேறு எதுவும் தேவையில்லை.

 

3) திரு.வி.க சங்கப்புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்களைக் கூறுக.

1)  இளங்கோவடிகள்

2)  திருத்தக்கத் தேவர்

3)  திருஞான சம்பந்தர்

4)  ஆண்டாள்

5)  சேக்கிழார்

6)  கம்பர்

7)  பரஞ்சோதி

 

4) காப்பியக் கல்வி குறித்து திரு.வி.க கூறுவன யாவை?

1)  வாழ்க்கைக்குரிய இன்பங்களுள் காப்பிய இன்பமும் ஒன்றாகும்.

2)  காப்பிய இன்பத்தை அனுபவிக்க பல தமிழ் இலக்கியங்கள் உள்ளன.

3)  இயற்கை ஓவியமாகப் பத்துப்பாட்டு உள்ளது.

4)  இயற்கை இன்பக்கலமாகக் கலித்தொகை உள்ளது.

5)  இயற்கை வாழ்வில்லமாகத் திருக்குறள் உள்ளது.

6)  இயற்கை இன்ப வாழ்வு நிலையங்களாகச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் உள்ளன.

7)  இயற்கைத் தவமாகச் சிந்தாமணி உள்ளது.

8)  இயற்கை அன்பாகப் பெரிய புராணம் உள்ளது.

9)  இயற்கைப் பரிணாமமாகக் கம்பராமாயணம் உள்ளது.

10)  இந்நூல்களைப் படித்து காப்பிய இன்பத்தை அனுபவிக்க வேண்டும்.

 

 

5) நூலகம் – கட்டுரை எழுதுக.

முன்னுரை :

  ‘கற்க கசடற’ எனும் வள்ளுவர் வாக்கிற்கு இணங்க நூல்கள் பலவற்றைக் கற்க துணை நிற்பது நூலகமாகும். இக்கட்டுரையில் நூலகம் குறித்துக் காண்போம்.

நூலகத்தின் தேவை :

  பாடப்புத்தகங்களைத் தாண்டி அறிவு பெற நூலகம் தேவையாகிறது. ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளவும் நூலகம் உதவுகிறது.

நூலகத்தின் வகைகள் :

  பள்ளி நூலகம், பொது நூலகம், ஆராய்ச்சி நூலகம், நடமாடும் நூலகம் என அறிவை வளர்த்துக் கொள்ள பல வகை நூலகங்கள் உள்ளன.

நூலகத்தில் உள்ளவை :

  நூலகத்தில் இலக்கியம், கலைகள், அறிவியல், வரலாறு, மருத்துவம், ஆன்மீகம், பொறியியல் என பல துறை நூல்களும் இடம் பெற்றிருக்கும்.

படிக்கும் முறை :

  நூலகத்தில் சத்தம் போட்டு படிக்கக் கூடாது. அமைதியாகப் படிக்க வேண்டும். வாசிக்கும் நூல்களின் முக்கிய கருத்துகளைக் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.

முடிவுரை :

  மலர்களை நாடிச் செல்லும் வண்டுகளைப் போல, இனிப்பைத் தேடிச் செல்லும் எறும்புகளைப் போல நாமும் நூலகத்தை ஆர்வத்தோடு நாடி, ஊக்கத்தோடு தேடிச் சென்று பயன் பெறுவோம்.

*****

Saturday, 29 March 2025

மறக்க முடியாத மன்மோகன் சிங்!

மறக்க முடியாத மன்மோகன் சிங்!

இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக, திட்ட கமிஷசனின் துணைத் தலைவராக, சர்வதேச நிதி அமைப்புகளில் பணியாற்றியவராக, இந்தியாவின் நிதி அமைச்சராக, இந்தியாவின் பிரதமராக பலவித பொறுப்புகளில் இருந்த மன்மோகன் சிங் மறக்க முடியாத மனிதராவார். அவர் நேருவுக்குப் பின் பரந்த வாசிப்பனுபவம் நிறைந்த பிரதமரும் கூட.

அவர் ஏன் மறக்க முடியாத மனிதராகிறார் என்பதற்குக் காரணங்கள் இருக்கின்றன.

1980 கால கட்டங்களில் இந்தியப் பொருளாதாரம் மோசமாக இருந்தது. விலைவாசி கடுமையாக உயர்ந்தது. பணவீக்கமும் அதிகரித்தது.

இது 1990 வரை நீடித்தது. அப்போது கூட நாட்டின் பணவீக்கம் 16 சதவீதத்துக்கு மேல் இருந்தது. பட்ஜெட் பற்றாக்குறை 12 சதவீதத்துக்கு மேல் எகிறியது. ஏற்றுமதி வர்த்தகமும் குறைவாகவே நீடித்தது.

சோவியத் யூனியன் சிதறிய பிறகு ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்வதிலும் இந்தியாவுக்கு அப்போது சிக்கல் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் வளைகுடா நாடுகளின் போர் காரணமாக ஈராக், குவைத் போன்ற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலும் பிரச்சனை ஏற்பட்டது. கச்சா எண்ணெயின் விலையும் மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்தது.

வளைகுடா போர் காரணமாக அங்கு வேலை செய்து கொண்டிருந்த இந்தியர்கள் பலரும் நாடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் மூலமாக வந்து கொண்டிருந்த அந்நிய செலாவணியும் குறைந்தது.

அத்துடன் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பும் குறைந்தது.

இரண்டு வாரங்களுக்கு மேல் கச்சா எண்ணெயும் உரமும் இறக்குமதி செய்ய முடியாத அளவுக்குச் செலவாணி வீழ்ச்சி கண்டது.

சர்வதேச நிதியத்திடமிருந்து கடன், ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து கடன், இங்கிலாந்து வங்கிகளில் தங்கம் அடகு என்று இந்தியா சமாளித்துக் கொண்டிருந்த நேரம் அது.

அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவ் ஒரு முக்கிய முடிவை எடுத்தார்.

அரசியல் அனுபவம் இல்லாத, ஆனால் பொருளாதார அறிவு பெற்றிருந்த மன்மோகன் சிங்கை நிதியமைச்சர் ஆக்கினார்.

மன்மோகன் சிங் ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் பொருளாதாரப் படிப்பு படித்தவர். சர்வதேச நிதி அமைப்புகளில் பணியாற்றியவர். ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவர். திட்ட கமிஷனின் துணைத் தலைவராக இருந்தவர்.

மன்மோகன் சிங் துணிந்து புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தார்.

இறக்குமதி மீதான தீர்வையைக் குறைத்தார்.

லைசென்ஸ் ராஜ் முறையை மாற்றி அமைத்தார்.

அந்நிய நேரடி முதலீட்டை 51 சதவீதம் வரை அனுமதித்தார்.

உர மானியத்தின் அளவைக் குறைத்தார்.

வட்டி விகிதங்களை முடிவு செய்து கொள்ளும் உரிமைகளை வங்கிகளுக்கே அளித்தார்.

இந்திய ரூபாயின் மதிப்பைக் குறைத்து ஏற்றுமதிக்கு ஊக்கம் தந்தார்.

இவையெல்லாம் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் அவர் செய்தது.

அவர் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு வருமான வரி விலக்கு அளித்தார்.

அமெரிக்காவோடு அணு ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொண்டு, அணுமின் உற்பத்தியை அதிகரித்தார்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம், ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் போன்றவை இவர் காலத்தில் அறிவிக்கப்பட்டவையே.

இந்தியாவின் பொருளாதாரத்தைத் தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்று மாற்றியமைத்தவர் மன்மோகன் சிங்தான்.

அவர் அப்படி ஒரு மாற்றத்தைச் செய்தது, அப்போது பெரும் விமர்சனத்தைக் கொண்டு  வந்தது. அப்படி அவர் செய்யவில்லை என்றால்இந்தியப் பொருளாதாரம் தலைகீழாக மாறியிருக்கும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

எது எப்படியோ?

ஒரு நிதி அமைச்சராக, பிரமராக மன்மோகன் சிங் மறக்க முடியாத நேர்மையான மனிதரும், அசாத்தியமான ஆளுமையும் ஆவார்.

*****

Friday, 28 March 2025

திருக்குறள் – பொது அறிவு வினாக்கள் 21

திருக்குறள் – பொது அறிவு வினாக்கள் 21

1) ‘உயர்ந்த ஞானத்தைப் புகட்டும் செம்மொழிகளின் தொகுப்பு திருக்குறள்’ எனக் கூறியவர் யார்?

ஆல்பர்ட் சுவைட்சர்.

 

2) ‘தெய்வப்புலமைத் திருவள்ளுவர் உரைத்த மெய்வைத்த சொல்’ எனத் திருக்குறளைப் புகழும் நூல் எது?

நெஞ்சு விடு தூது.

 

3) திருக்குறளைத் திருவள்ளுவப்பயன் எனச் சிறப்பித்துக் கூறுபவர் யார்?

நச்சினார்க்கினியர்.

 

4) ‘திருக்குறள் அது மன்பதைக்குப் பொது’ என்றவர் யார்?

திரு. வி. க.

 

5) ‘எல்லாப் பொருளும் இதன்பால் உள’ எனத் திருக்குறளைப் புகழ்ந்தவர் யார்?

மதுரை தமிழ்நாகனார்.

 

6) ‘நீதி திருக்குறளை நெஞ்சார்ந்த தம் வாழ்வில் ஓதித் தொழுது எழுக ஓர்ந்து’ எனக் கூறியவர் யார்?

கவிமணி தேசிய விநாயகம்.

 

7) ‘வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வைத்தார் உள்ளுவவெல்லாம் அளந்தார் ஓர்ந்து’ என்பது யார் கூற்று?

பரணர்.

 

8) திருக்குறளைத் தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்தவர் யார்?

வைத்தியநாத பிள்ளை.

 

9) திருக்குறளில் அமைச்சியலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?

32.

 

10) பரிமேலழகர் உரையுடன் திருக்குறளை முதன் முதலாக இராமானுஜ கவிராயர் பதிப்பித்த ஆண்டு எது?

1840.

 

11) திருவள்ளுவர் விருது நிறுவப்பட்ட ஆண்டு எது?

1986.

தமிழ் மேம்பாட்டு ஆணையம் சார்பாக இந்த விருது வழங்கப்படுகிறது.

இவ்விருதை முதலில் பெற்றவர் குன்றக்குடி அடிகளார்.

இரண்டாவதாகப் பெற்றவர் கி.ஆ.பெ. விசுவநாதம்.

மூன்றாவதாகப் பெற்றவர் ச. தண்டபாணி தேசிகர்.

நான்காவதாகப் பெற்றவர் வ.சுப.மாணிக்கம்.

 

12) திருக்குறள் முதல் முதலில் எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது?

மலையாளம் (1595)

 

13) முதல் திருக்குறள் மாநாடு எப்போது நடைபெற்றது?

1941.

நடத்தியவர் : வீ. முனுசாமி.

நடந்த இடம் : சேலம்.

 

14) முதன் முதலில் திருக்குறளைப் பள்ளிகளில் அறிமுகம் செய்த முதலமைச்சர் யார்?

ஓமந்தூரார்.

 

15) ‘இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’ என்றவர் யார்?

பாரதிதாசன்.

 

16) திருக்குறளைத் தந்தை தந்த தாய்ப்பால் முப்பால் என்றவர் யார்?

அறிவுமதி.

 

17) திருக்குறளில் உடைமை என அமையும் அதிகாரங்கள் எத்தனை?

10.

 

18) மணக்குடவர் உரையை விரும்பிய தமிழ் அறிஞர் யார்?

வ.உ.சிதம்பரம்.

 

19) திருவள்ளுவரை மானுடக் கவிஞன் என்றவர் யார்?

ஜி.யு. போப்.

 

20) குறள் பீடம் விருது எந்த அமைப்பால் வழங்கப்படுகிறது?

செம்மொழி தமிழாய்வு நிறுவனம்.

 

21) திருக்குறளில் இடம் பெறாத எண் எது?

9.

Saturday, 22 March 2025

இணையவழி சூதாட்ட விளையாட்டுகள் வேண்டாமே!

இணையவழி சூதாட்ட விளையாட்டுகள் வேண்டாமே!

இணையவழி சூதாட்ட விளையாட்டுகள் (ஆன்லைன் சீட்டாட்டம் போன்றவை) முதலில் பணத்தைப் பரிசாக வழங்கி விளையாடத் தூண்டுகின்றன. துவக்கத்தில் சில வெற்றிகளையும் தந்து பணத்தை வழங்குகின்றன. வெற்றி பெற்ற ஆர்வத்தாலும் பணத்தைச் சம்பாதித்து விட்ட தன்னம்பிக்கையாலும் விளையாடத் தொடங்குபவர்கள் அதற்கு மேல் வெற்றி பெற முடியாமல் பணத்தைப் படிப்படியாக இழக்கத் தொடங்குவர்.

பணத்தை இழக்கத் தொடங்கியதும் பயந்து பின்வாங்க வேண்டும் அல்லவா! ஆனால் அதை செய்ய மாட்டார்கள். விட்ட பணத்தைப் பிடிக்கிறேன் பார் என்று கையிலிருக்கும் பணத்தைப் போட்டு மேலும் மேலும் விளையாட ஆரம்பிப்பார்கள். அப்படி விளையாடியும் பணத்தை இழப்பார்கள்.

அத்தோடு விட்டோம் என்று விட மாட்டார்கள். அடுத்த கட்டமாகச் சேமிப்பு மற்றும் முதலீடுகளை எடுத்து விளையாட ஆரம்பித்து, அதிலும் தோல்வி கண்டு பணத்தை இழப்பார்கள்.

இத்தோடாவது விட்டோம் என்று விடுவார்களா என்றால், அடுத்ததாகக் கடன் வாங்கி விளையாட ஆரம்பிப்பார்கள். அதிலும் தோல்வி கண்டு பணத்தை இழப்பார்கள்.

முடிவில் கடன் தொல்லை தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

ஆகவே இது போட்ட சூதாட்ட விளையாட்டுகள் எப்போதும் வேண்டாம். இதைத்தான் திருவள்ளுவர்,

“வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்

தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.” (குறள், 931)

என்கிறார்.

சூதில் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி வேண்டாம் என்கிறார். ஏனென்றால், அது மீனானது தூண்டிலில் இருக்கும் புழுவை உணவாகப் பெற்றது போல என்கிறார். மீனுக்கு உணவு கிடைத்திருக்கலாம். ஆனால் அதில் தூண்டிலில் இருக்கும் உணவு. அதற்கு ஆசைப்பட்ட மீனுக்கு என்ன கதி நேரிடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அந்த மீன் தூண்டில் போட்டவருக்கு உணவாவது போல, சூதில் வென்றதாக நினைப்பரும் சூதாட்ட நிறுவனங்களின் ஆசைத் தூண்டிலுக்குப் பலியாகி விடுவர்.

ஆகவே வேண்டாமே இணைய வழி சூதாட்ட விளையாட்டுகள் மீது நாட்டம்!

Friday, 21 March 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 22.03.2025 (சனி)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) மார்ச் 1 ஆம் தேதி தொடங்கிய அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தைக் கடந்தது.

2) தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு ஏப்ரல் 21 வரை விண்ணப்பிக்கலாம்.

3) திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்துக்குத் தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினர்.

4) குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக முதல்வர் எச்சரித்துள்ளார்.

5) சென்னையில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ தொடர்வண்டி வெற்றிகரமாக இயக்கிச் சோதிக்கப்பட்டது.

6) செயற்கை நுண்ணறிவு மற்றும் தவறான தகவல்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்.

7) தமிழகத்தின் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

8) மார்ச் 25 வரை தமிழகத்தல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9) உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் இந்தியா 118 ஆவது இடத்தில் உள்ளது.

10) அமெரிக்காவில் 60 ஆயிரம் ராணுவப் பணியாளர்கள் திடீர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

11) அமெரிக்காவின் மத்திய கல்வி அமைச்சகத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலைத்துள்ளார். இது அமெரிக்காவின் பொதுக்கல்வியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

12) அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

13) போர்நிறுத்தத்துக்கு உக்ரைன் சம்மதித்துள்ள நிலையில் ரஷ்யாவும் சம்மதம் தெரிவித்துள்ளது.

14) ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது.

English News

1) The enrollment of students in government schools that began on March 1 has crossed one lakh.

2) Applications can be made till April 21 for the post of driver and conductor of the Tamil Nadu Transport Corporation.

3) The Chief Minister of Tamil Nadu laid the foundation stone of the Kalaignar Library and Knowledge Centre in Trichy.

4) The Chief Minister of Tamil Nadu has warned that strict action will be taken against the culprits, whoever they may be.

5) The driverless automated metro train has been successfully tested in Chennai.

6) The President has announced that the public should be aware of the effects of artificial intelligence and misinformation.

7) The temperature in Tamil Nadu is likely to increase by up to 4 degrees Celsius.

8) The Meteorological Department has said that there is a possibility of moderate rain in Tamil Nadu till March 25.

9) India is at 118th place in the list of happiest countries in the world.

10) 60 thousand military personnel have been suddenly dismissed in the United States.

11) US President Donald Trump has dissolved the US Department of Education. This is expected to cause a major setback in public education in the US.

12) US President Donald Trump has said that India will reduce tariffs on American goods.

13) Russia has also agreed to a ceasefire while Ukraine has agreed.

14) IPL Cricket festival starts today.

Thursday, 20 March 2025

எட்டாம் வகுப்பு - இயல் – 3 திருப்புதல்

எட்டாம் வகுப்பு

இயல் – 3

திருப்புதல்

1) நோயும் மருந்தும் – மனப்பாடப் பகுதி

பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி

தீர்தற்கு உரிய திரியோக மருந்துஇவை

ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார்

பேர்த்த பிணியுள் பிறவார் பெரிது இன்பம் உற்றே.

 

2) நோயின் வகைகள் மற்றும் அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?

நோய்கள் மூன்று வகைப்படும். அந்நோயின் வகைகளாவன,

1)  மருந்தினால் தீரக் கூடிய நோய்கள்,

2)  மருந்தினல் தீராத நோய்கள்,

3)  தீர்ந்தது போன்று தீராத நோய்கள்.

நோய்களைத் தீர்ப்பதற்கான மூன்று வகை மருந்துகளாவன,

1)  நல்லறிவு,

2)  நற்காட்சி,

3)  நல்லொழுக்கம்.

 

3) வருமுன் காப்போம் – மனப்பாடப் பகுதி

உடலின் உறுதி உடையவரே

              உலகில் இன்பம் உடையவராம்

இடமும் பொருளும் நோயாளிக்கு

              இனிய வாழ்வு தந்திடுமோ?

சுத்தம் உள்ள இடமெங்கும்

             சுகமும் உண்டு நீயதனை

நித்தம் நித்தம் பேணுவையேல்

             நீண்ட ஆயுள் பெறுவாயே!

காலை மாலை உலாவிநிதம்

             காற்று வாங்கி வருவோரின்

காலைத் தொட்டுக் கும்பிட்டுக்

             காலன் ஓடிப் போவானே!

 

4) உடல்நலத்துடன் வாழ கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

1)  காலையும் மாலையும் நடைபயிற்சி செய்ய வேண்டும்.

2)  நல்ல காற்றைச் சுவாசிக்க வேண்டும்.

3)  குளித்த பிறகே உண்ண வேண்டும்.

4)  இரவில் நன்றாக உறங்க வேண்டும்.

5)  அளவோடு உண்ண வேண்டும்.

6)  பசித்த பின்பு உண்ண வேண்டும்.

7)  நல்ல நீரைப் பருக வேண்டும்.

 

5) தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?

தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன,

1)  வேர்,

2)  இலை,

3)  உலோகங்கள்,

4)  பாஷாணங்கள்.

 

6) பள்ளிக்குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?

1)  வரும் முன் காக்கும் வாழ்வை வாழ வேண்டும்.

2)  சரியான உணவை உண்ண வேண்டும்.

3)  சரியான உடற்பயிற்சியினைச் செய்ய வேண்டும்.

4)  சரியான முறையில் உறங்க வேண்டும்.

5)  காய்கறிகள், கீரைகள், பழங்களை உண்ண வேண்டும்.

6)  சிறுதானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

7)  ஓடியாடி விளையாட வேண்டும்.

8)  அதிகாலையில் விழித்தெழ வேண்டும்.

 

7) எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்.

இது பெயரெச்சம், வினையெச்சம் என இரண்டு வகைப்படும்.

*****

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 21.03.2025 (வெள்ளி)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) தெருநாய் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்குப் பேரிடர் நிவாரண நிதியின் கீழ் இழப்பீடு வழங்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2) இந்தியாவில் சிறார்களால் இயக்கப்படும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

3) 2024 இல் தமிழகத்தில் 1540 கொலைகள் நடந்துள்ளதாக முதல்வர் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.

4) மாநிலங்கள் மீது எந்த மொழியும் திணிக்கப்படாத என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

5) அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் எண்ணமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

6) இரண்டாயிரம் ரூபாயில் மாநகரப் பேருந்துகளில் பயணிக்கும் மாதாந்திர பயண அட்டை சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

7) உச்சநீதி மன்றத்தின் 6 பேர் நீதிபதிகள் கொண்ட குழு மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க உள்ளது.

8) நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.

English News

1) The Tamil Nadu government has announced that compensation will be provided under the Disaster Relief Fund for cattle killed by stray dogs.

2) Tamil Nadu ranks first in India in accidents caused by vehicles driven by minors.

3) The Chief Minister has informed the Legislative Assembly that 1540 murders took place in Tamil Nadu in 2024.

4) The Central Government has stated that no language will be imposed on the states.

5) The Central Government has stated that it has no intention of increasing the retirement age of government employees.

6) A monthly travel card for travelling in city buses for Rs 2,000 has been introduced in Chennai.

7) A 6-member Supreme Court panel is to meet the affected people in Manipur.

8) Ukraine has agreed to an unconditional ceasefire.

மூன்றாம் பருவ வினாத்தாள்கள் – 2024

மூன்றாம் பருவ வினாத்தாள்கள் – 2024

2023 – 2024 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் பருவ வினாத்தாள்கள்

            ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான சென்ற கல்வியாண்டின் (2023 – 2024) மூன்றாம் பருவ வினாத்தாள்களைப் பெற கீழே உள்ள தொடர்புடைய இணைப்புகளைச் சொடுக்கவும்.

ஆறாம் வகுப்பு வினாத்தாள்களைப் பெற…

 Click Here to Download

ஏழாம் வகுப்பு வினாத்தாள்களைப் பெற…

 Click Here to Download

எட்டாம் வகுப்பு வினாத்தாள்களைப் பெற…

 Click Here to Download

*****

ஜீனோவின் முரண்பாடு – முதல் கருதுகோள்

ஜீனோவின் முரண்பாடு – முதல் கருதுகோள்

முயலுக்கும் ஆமைக்கும் போட்டி வைத்தால் எது ஜெயிக்கும்?

முயலுக்கும் ஆமைக்கும் போட்டி வைத்தால் முயலும் ஜெயிக்கலாம், ஆமையும் ஜெயிக்கலாம், ஆனால்முயலாமை ஜெயிக்காது என்று நீங்கள் சொல்லலாம்.

ஆனால், நாம் கேள்விப்பட்ட கதையில் முயல் தூங்கி விடுவதால் ஆமை ஜெயிக்கிறது. ஒரு வேளை முயல் தூங்காமல் இருந்திருந்தால், முயல் ஜெயித்திருக்கும் என்று கூறலாம்.

இப்படி ஒரு நிலைமையைக் கருத்தில் கொள்ளுங்கள்.

முயல் வேகமாக ஓடும் என்பதால், அதுவும் ஆமையை விட பத்து மடங்கு வேகமாக ஓடும் எனக் கருத்தில் கொண்டால்…

இந்தப் போட்டியே தவறானது என்று நீங்கள் சொல்லலாம்.

உண்மையில் இந்தப் போட்டியானது ஆமைக்கும் ஆமைக்கும் வைக்கப்பட வேண்டும். அல்லது முயலுக்கும் முயலுக்கும் வைக்கப்பட வேண்டும் என்று நீங்கள் கூறுவதில் தவறேதும் இல்லை.

ஆனால், நாம் நிலைமையை மேற்சொன்னபடி பரிசீலிப்போம்.

ஆமையை விட முயல் பத்து மடங்கு வேகமாக ஓடுவதாக நாம் கருத்தில் கொள்வோம்.

ஆமையை பத்து அடி முன்பாகவும், முயலைப் பத்து அடி பின்பாகவும் வைத்து போட்டியை ஆரம்பிப்போம்.

ஏன் இப்படி என்றால், இச்சமமற்ற போட்டியை ஒரு சமனுக்குக் கொண்டு வருவதற்காக எனக் கொள்வோம். ஆமைக்கு ஒரு சலுகையை இப்படி வழங்குவோம்.

இப்போது எது ஜெயிக்கும்?

முயல் பத்தாவது அடியை அடையும் போது ஆமை பதினொன்றாவது அடியை அடைந்திருக்கும் என வைத்துக் கொள்வோம்.

முயல் பதினொன்றாவது அடியை அடைந்திருக்கும் போது ஆமை 11.1 அடியை அடைந்திருக்கும்.

முயல் 11.1வது புள்ளியை அடைந்திருக்கும் போது ஆமை 11.11வது புள்ளியை அடைந்திருக்கும்.

முயல் 11.11வது புள்ளியை அடைந்திருக்கும் போது ஆமை 11.111வது புள்ளியை அடைந்திருக்கும்.

இப்படியே தொடர்ந்து கொண்டே போனால்…

என்ன நடக்கும்?

உண்மையில் இந்தப் போட்டியில் முயலானது ஆமையை ஜெயிக்க முடியாது என்பது ஒரு கருதுகோள்.

ஆமாம்! இது ஒரு கருதுகோள்தான்.

இதுவரை கணிதம் நன்றாகத்தானே போய்க் கொண்டிருந்தது. ஏன் இப்படி ஒரு முயல் ஆமை கதையைச் சொல்லி இப்படிப் (பாடாய்ப்) படுத்துகிறீர்கள் என்கிறீர்களா?

விசயம் இருக்கிறது.

அதற்கு நீங்கள் சில நாட்கள் இந்தப் படுத்துதல்களைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்.

காத்திருங்கள்.

நாளையும் படுத்துவோம்.

*****