Thursday, 25 June 2020

உங்களை வழிநடத்தும் நம்பிக்கை!

மனதோடு வீசும் மென்காற்று :

உங்களை வழிநடத்தும் நம்பிக்கை!
உங்கள் வாழ்வை, மனதை
எது வழிநடத்துகிறது என்று தெரியுமா?
நம்பிக்கைத்தான் வழிநடத்துகிறது.

அசெளகரியங்கள் எங்கே இல்லை சொல்லுங்கள்!
துரதிர்ஷ்டங்கள் எங்கே இல்லை சொல்லுங்கள்!
காயங்கள் எங்கே இல்லை சொல்லுங்கள்!
வலிகள் எங்கே இல்லை சொல்லுங்கள்!
துக்கங்கள் எங்கே இல்லை சொல்லுங்கள்!
அவை எங்கும் எல்லா இடத்திலும் இருக்கின்றன
ஏனென்றால் வாழ்க்கை என்பது
அசெளகரியங்களும், துரதிர்ஷ்டங்களும்,
காயங்களும், வலிகளும், துக்கங்களும் சூழ்ந்ததுதான்.

புயல் வராது என்று சொல்வதற்கில்லை
பூகம்பம் நேராது என்று சொல்வதற்கில்லை
எரிமலை வெடிக்காது என்று சொல்வதற்கில்லை
அவை எப்போது வேண்டுமானால் தாக்கலாம்
வாழ்க்கை எப்போதும் அதனால் நிச்சயமற்றது
ஆனால் நம்பிக்கை எப்போதும் நிச்சயமானது.

நீங்கள் நல்லதே செய்தாலும்
தவறாகக் கருதப்படலாம்.
உதவியே செய்தாலும்
உபத்திரவமாக உணரப்படலாம்.
உதவும் முயற்சியில் தாக்கப்படலாம்
மரணத்தைத் தொட்டு விட்டும் வரலாம்
நம்பிக்கை எப்போதும் உங்களைக் காப்பாற்றும்
நம்பிக்கை தோற்காது
நம்பிக்கை சாகாது.

நம்பிக்கை சக்தி வாய்ந்தது, ஆற்றல் மிக்கது,
எப்போதும் எழுச்சி தரக் கூடியது.
அதன் ஒளி மகத்தானது, மகோன்னதமானது.
நம்பிக்கையின் பலத்தை, வலிமையை,
அதன் பேராற்றலை
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நம்பிக்கை கருணையோடு வழிநடத்தும்
புதியப் பாதையைக் காட்டும்
ஆறுதலை ஆலோசனையைத் தரும்.

நம்பிக்கையே மனித குலத்தை வழிநடத்துகிறது
உங்கள் வாழ்க்கையின் உன்னதமான நம்பிக்கையை
உங்கள் மனதிலிருந்து கண்டடையுங்கள்
நம்பிக்கையோடு நடக்கும் போது
நம்பிக்கையே உங்கள் கை பிடித்து வழிகாட்டும்.
நம்பிக்கையால் எந்த தொந்தரவும் உங்களை பயமுறுத்தாது.
எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் உண்டாகும்.
அதை தங்கம் என்பதா? வைரம் என்பதா?
பொக்கிஷம் என்பதா?
அதை விட இன்னும் மேலானது என்பதா?
அதனால்தான் அதை அடைந்தவர்கள்
மாபெரும் மனிதர்களாகிறார்கள்
உலகுக்கே வழிகாட்டுகிறார்கள்.
*****

Monday, 22 June 2020

பேரறிஞர் அண்ணாவின் மனிதநேயம்

பேரறிஞர் அண்ணாவின் மனிதநேயம்
வாசிக்கும் சங்கதிகளுள் எவ்வளவோ கண்களைக் கலங்க செய்து விடுகின்றன. அப்படி ஒரு சங்கதி!

பேரறிஞர் அண்ணாவுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது.
“மகாத்மா காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலம் தமிழ் நாட்டின் முதல்வர் நான்!” என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.
போப்பாண்டவர் சொன்னார், “அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!” என்று.  தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து, “உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்?” என்றார்.
“என்ன கேட்டாலும் தருவீர்களா?” என்று கேட்டார் அண்ணா. 
“கேளுங்கள் தருகிறேன்! என்றார் போப்பாண்டவர்.
“போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார். உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மோகன் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும்” என்று கேட்டார் அண்ணா.
“சரி!” என்று சொன்னார் போப்பாண்டவர்.

மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா.
போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்குச் சென்றார்.
ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், “யாருக்காகப் போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே?” என்று கேட்டார்.
“அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன்!” என்று சொன்னார் அன்னை இந்திரா.
நாஞ்சிலாரைச் சந்தித்த பின் ரானடேயிடம், “நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன்!” என்று சொன்னார் அன்னை இந்திரா.
உடைந்து போன ரானடே, “நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான்!” என்றார்.
அன்னை இந்திரா உடனடியாக ரானடே மற்றும் நாஞ்சிலாரை சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
அண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டார் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு.
போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தர்தான் நமது பேரறிஞர் அண்ணா.
•••••


Saturday, 20 June 2020

உண்மையாக இருப்பதன் கஷ்டம்!

கதை சொல்லும் சேதி :
உண்மையாக இருப்பதன் கஷ்டம்!

            மனிதர்கள் உண்மையாக இருப்பதை விரும்புவதில்லை. அப்படியே உண்மையாக இருப்பதை விரும்பினாலும் அவர்களின் ஆசைகள் அவர்களை அப்படி இருக்க விடுவதில்லை. இதை விளக்கும்படியான ஒரு கதை.
            ஒரு நாட்டின் அரசர் திடீரென்று இறந்து விட்டார். இறந்து விட்டார் என்றால் வாரிசு இல்லாமல் இறந்து விட்டார். அடுத்த அரசரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை.
            அடுத்ததாகத் தேர்ந்தெடுக்கப்படும் அரசர் நேர்மையானவராகவும், உண்மையானவராகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள் அமைச்சர்கள். அதற்காக ஒரு சோதனை வைப்பதென்றும், அதில் விருப்பமானவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்தார்கள் அமைச்சர்கள்.
            அந்த அறிவிப்பைக் கேட்டு அரசராக வேண்டும் என்ற ஆசையில் அறுபது பேர் வரை வந்து நின்றார்கள். அவர்கள் எல்லோர் கையிலும் பிடி நெல்லைக் கொடுத்து, மூன்று மாதக் காலத்தில் அதை யார் சிறப்பாக விளைவிக்கிறார்களோ அவரே அடுத்த அரசர் என்று சொன்னார்கள் ‍அமைச்சர்கள்.
            மூன்று மாதம் கழித்து அறுபது பேரும் விளைவித்திருந்த நெற்பயிரைப் பார்க்க போனார்கள் அமைச்சர்கள். பார்க்கப் போனால் அறுபது பேரில் ஐம்பத்து ஒன்பது பேர் மிகச் சிறப்பாக விளைவித்திருந்தார்கள்.
            ஒருவர் மட்டும் சிறப்பாக விளைவிக்கவில்லையா என்று கேட்டால், அவர் விளைவிக்கவே இல்லை. அவரிடம் அமைச்சர்கள் கேட்டதற்கு, தான் விதைத்த நெல் விளையவே இல்லை என்று பதில் தந்தார் அந்த அறுபதாவது ஆள்.
            அமைச்சார்கள் பார்த்தார்கள், அந்த அறுபதாவது ஆளுதான் அரசராக இருக்கப் பொருத்தமானவர் என்று அவரையே அரசராகத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். ஏனென்றால் அவர்தான் நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்து கொண்டார்.
            அமைச்சர்கள் கொடுத்த அவித்த நெல் விளையவில்லை என்று தெரிந்ததும் வேறு நெல்லைப் பயன்படுத்தி விளைவிக்க வேண்டும் என்று நினைக்காத ஒரே ஆள் அந்த அறுபதாவது ஆள் மட்டும்தான்.
            மற்ற ஐம்பத்து ஒன்பது பேரும் அமைச்சர்கள் கொடுத்த நெல் விளையவில்லை என்று தெரிந்ததும் வேறு நெல்லை விதைத்து சிறப்பாக விளைவித்திருந்தார்கள். அரசராக வேண்டும் என்ற ஆசையில் அவர்கள் உண்மைக்குப் புறம்பாக நடந்து கொண்டார்கள்.
            இதை வைத்துதான் மனிதர்கள் உண்மையாக இருப்பதை விரும்புவதில்லை என்றும், அவர்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று ஆசைபட்டாலும் அவர்களின் ஆசைகள் அவர்களை உண்மையாக இருக்க விடுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
            தற்போது உங்களிடம் ஒரு கேள்வி. அந்த அறுபது பேரில் நீங்கள் ஒருவராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?
            விளையாத நெல்லைக் கொடுத்த அமைச்சர்கள் மேல் வழக்குத் தொடுத்திருப்பேன் என்கிறீர்களா? அப்படியென்றால் இந்தக் காலத்துக்குப் பொருத்தமான அரசர் நீங்கள்தான்.
*****


Friday, 19 June 2020

எதனால் எது கெடும்?

எதனால் எது கெடும்?

01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.

16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும்  கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.

31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.
41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.

46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.


Wednesday, 17 June 2020

உங்கள் கடமை எதுவோ அதைச் செய்யுங்கள்!

கதை சொல்லும் சேதி :
உங்கள் கடமை எதுவோ அதைச் செய்யுங்கள்!

            உங்கள் கடமை எதுவோ அதைக் கண்ணும் கருத்துமாகச் செய்யுங்கள். அதிலிருந்து விலகுவதோ, வெகுமதிக்கு ஆசைப்படுவதோ உங்களைத் தகுதியற்றவர்களாக ஆக்கி விடும். இதை விளக்கும்படியான ஒரு கதை.
            ஓர் இரவு நேரக் காவலாளிக்கு கனவு வந்தது. கனவு வந்ததது என்றால் கடமையிலிருந்து விலகி விட்டார் என்றுதானே அர்த்தம்.
            அவரது கனவில் அவரது முதலாளி செல்லும் விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறி விடுகிறது. கனவிலிருந்து விழித்த காவலாளி தான் கடமையிலிருந்து விலகி தூங்கியதைக் கவனத்தில் கொள்ளவில்லை.
            அந்தக் கனவு பலிக்குமானால், அது குறித்து முதலாளியிடம் சொல்லி அவரைக் காப்பாற்றி விட்டால் வெகுமதி கிடைக்கும் என ஆசைப்பட்டார். அந்த ஆசை வந்ததும் முதலாளியிடம் சென்ற இரவுக் காவலாளி தன்னுடைய கனவைச் சொன்னார்.
            முதலாளியும் எதற்கும் இருக்கட்டுமே என்று அன்றை விமானப் பயணத்தை ரத்து செய்தார். இரவுக்காவலாளி சொன்னபடியே அவர் பயணம் செய்யவிருந்த விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது.
            முதலாளி உடனடியாக இரவுக்காவலாளியை அழைத்தார். வெகுமதி கொடுக்க அல்ல, வேலையிலிருந்து உடனடியாகத் தூக்க. அப்போது அந்த முதலாளி சொன்னார், "இரவுக் காவலாளியான நீ வேலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தால் என் முதலும் மூலதனமும் என்னாவது?"என்று.
            ஆகவேத்தான் இப்பிடிச் சொல்லப்படுகிறது, "உங்கள் கடமையிலிருந்து விலகுவதோ, வெகுமதிக்கு ஆசைப்படுவதோ உங்களைத் தகுதியற்றவர்களாக்கி விடும்!" என்று.
*****

Tuesday, 16 June 2020

அலுவலகக் கடிதங்களின் சுருக்கங்களின் விளக்கம்

அலுவலகக் கடிதங்களின் சுருக்கங்களின் விளக்கம்
அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் ந.க. எண், மூ.மு.எண் என்று எழுதி சில எண்களைக் குறிப்பிட்டு, நாளையும் அதில் குறிப்பிட்டு இருப்பார்கள்.
அதன் விளக்கம் :

ந. க. எண்
நடப்புக் கடித எண்
ஓ. மு. எண்
ஓராண்டு முடிவு எண்
மூ. மு. எண்
மூன்றாண்டு முடிவு எண்
நி. மு. எண்
நிரந்தர முடிவு எண்
ப. மு. எண்
பத்தாண்டு முடிவு எண்
தொ. மு. எண்
தொகுப்பு முடிவு எண்
ப. வெ. எண்
பருவ வெளியீடு எண்
நே. மு. எண்
நேர்முகக் கடித எண்

மேற்கண்ட சுருக்கங்களில் ந.க.எண்  (நடப்புக் கணக்கு எண்) மட்டுமே அதிகப் பயன்பாட்டில் உள்ளது ஆகும்.
நேர்முகக் கடிதம் என்பது கீழ்மட்ட அலுவலருக்கு, மேல்மட்ட அதிகாரி எழுதும் கடிதம் ஆகும். இது நேரடியாகப் பேசியதற்குச் சமம் என்பதால், அதற்கான பதிலை கீழ்மட்ட அலுவலர் விரைந்து  அளிக்க  வேண்டும்.
மேற்கண்டவாறு சுருக்கம் மற்றும் சுருக்க எண், நாள் இல்லாது வரும் கடிதங்களை அதிகாரப்பூர்வ கடிதங்களாக கருத இயலாது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.