Thursday, 2 July 2020

மரணத்தை மாற்றும் நம்பிக்கை!

மனதோடு வீசும் மென்காற்று :

மரணத்தை மாற்றும் நம்பிக்கை!
மரணம்
வாழ்வின் நம்பிக்கையை மாற்றிப் போடக் கூடியது
பிறக்கும் போதே இறப்பும் நிச்சயக்கப்பட்டு விடுகிறது என்றாலும்
பிரியமானவர்களின் மரணங்கள் நிலைகுழையச் செய்யக் கூடியவை.
நிலைகுழைவிலிருந்து மீள்வது சுலபமானதல்ல என்றாலும்
மரணத்தை மாற்றும் நம்பிக்கையோடு
வாழ்வெனும் பாதையில் ஒவ்வொரு மனிதரும்
பயணித்துதான் ஆக வேண்டியிருக்கிறது.

மரணத்திற்கு மாற்று கிடையாது
மரணத்திற்கு ஆறுதல் சொல்லி விட முடியாது
மரணத்தை எதிர்கொள்வதற்கு முன்
நம்மால் இயன்றதெல்லாம்
நம்பிக்கையையும், கனிவான புன்னகையையும்,
உற்சாகமூட்டும் வார்த்தைகளை வழங்க முடிவது மட்டுமே!
நம்பிக்கை, கனிவான புன்னகை, உற்சாகமான வார்த்தைகள் என்பவை
வாழ்வின் அஸ்திவாரங்கள்
மரணத்தை வெல்லக்கூடிய மகத்துவம் பெற்றவை.

மரணம் துயர் கொள்ள செய்யக் கூடியது
சோகத்தின் பிடியில் வீழ்த்தக் கூடியது
அழுகையின் அடியில் ஆழ்த்தக் கூடியது
பேரறிஞர்கள் இந்த மரணம் குறித்து
என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
'மரணத்திற்காக ஓரளவிற்கு மேல்
துயரம் கொள்ள வேண்டியதில்லை.
மரணத்தால் யாரையும் புதைக்கவில்லை
விதைக்கவே செய்கிறோம்!' என்கிறார்கள்.

மரணம் மனிதர்களைப் பிரிக்கிறது என்பதுதான்
மாற்றமில்லாத உண்மை.
இந்தப் பிரிவைத் தத்துவாதிகள்
எப்படிக் காண்கிறார்கள் தெரியுமா?
'மரணத்தால் யாரும் நம்மை விட்டுப் பிரியவில்லை.
அவர்கள் நமக்கு முன்பு சென்றிருக்கிறார்கள்.
நாம் அவர்களுக்குப் பின் செல்ல வேண்டியவர்கள்
அவ்வளவுதான்!'
என்கிறார்கள் தத்துவாதிகள்.

அன்பை, பாசத்தை, பிரியத்தைப் பொழிந்தவர்களின் மரணம்
மனதில் இருளைக் கவியச் செய்து விடுகிறது.
அந்த மாபெரும் இருளைக் கடப்பது சாமான்யமானதல்ல.
சிந்தனாவாதிகள் இது குறித்து
என்ன சொல்ல விழைகிறார்கள் தெரியுமா?
'ஒரு விளக்கை அணைத்தால் வெளிச்சம் மறைந்து விடுவதில்லை.
இன்னொரு விளக்கை நாம் ஏற்றாமல் போவதில்லை.
ஓர் இறப்பு ஒரு பிறப்பைத் தராமல் இருப்பதில்லை!" என்கிறார்கள்.

பூமியில் பிறந்த எல்லோரும் மரணிக்க வேண்டியவர்கள்தான்.
முன், பின், இடையில் என்று நிகழும் இந்த மரணங்கள்
ஒரு புரியாத புதிரை மனதிற்குள் விதைத்து விடுகிறது.
அவிழ்க்க முடியாத சிக்கல்தான் அது.
அதற்கான முடிச்சை அவிழ்க்கிறது
நிலையாமை குறித்த இந்தச் சிந்தனை
'எல்லோராலும் ஒரே சமயத்தில் சென்று விட முடியாது
ஒவ்வொருவராகச் சென்றுதான் ஆக வேண்டும்
எல்லோரும் மரணத்தைப் பின்தொடர்ந்துதான் ஆக வேண்டும்!'
என்கிறது அந்தச் சிந்தனை.

மரணம் தவிர்க்க முடியாதது என்றாலும்
மரணத்தை மாற்றும் நம்பிக்கைகளான
அன்பும், கருணையும், பரிவும் மரணமில்லாதது.
அன்பு, கருணை, பரிவு கொண்டோர்
மரணமில்லாத பெருவாழ்வு எய்தியவர்களாக
என்றென்றும் மானுடச் சமூகத்தின் மனதில்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
மரணம் மனிதர்களை அழிக்கலாம்
அன்பையும், கருணையையும், பரிவையும்
எப்படி அழிக்க முடியும்?
*****

Wednesday, 1 July 2020

சேரிடம் அறிந்து சேர்!

கதை சொல்லும் சேதி :

சேரிடம் அறிந்து சேர்!
            நல்லவர்களின் சேர்க்கையால் நன்மையும், தீயவர்களின் சேர்க்கையால் தீமையும் உண்டாவதாகக் கூறப்படுகிறது.
            ஒரு மனிதன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் சேர்க்கையாலும் நிகழ்கிறது. இதற்கு கெளரவர்களுடன் சேர்ந்த கர்ணின் சேர்க்கை ஓர் உதாரணமாகச் சொல்லப்படுகிறது. இதை விளக்கும்படியான ஒரு கதை.
            ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
            "ஒரு மனிதர் நல்லவராக நல்லவர்களோடு சேர வேண்டும். தீயவர்களோடு சேரும் போது நல்லவரும் தீயவராகி விடுகிறார்!" என்றார் ஆசிரியர்.
            அதைக் கேட்ட மாணவர் ஒருவர், "தீயவர் கூட்டத்தில் ஒரு நல்லவர் சேர்ந்து அத்தனை தீயவர்களையும் திருத்தி விட முடியாதா?" என்று கேட்டார்.
            அதைக் கேட்ட ஆசிரியர் சிரித்தார். அந்தக் கேள்விக்கான பதிலை செயல்விளக்கம் செய்து காட்ட நினைத்தார்.
            ஒரு பெரிய பாத்திரம் முழுவதும் பாலை நிரப்பி அதில் சிறு குவளை அளவு நீரைக் கலந்து, இப்போ பால் மாறியிருக்கிறதா? என மாணவர்களைப் பார்க்கச் சொன்னார் அந்த ஆசிரியர். மாணவர்களும் பார்த்து விட்டு இல்லை என்றனர்.
            அடுத்ததாக ஆசிரியர், அதே போல இன்னொரு பெரிய பாத்திரம் முழுவதும் நீரை நிரப்பி அதில் சிறு குவளை அளவு பாலைக் கலந்து, இப்போது பால் தண்ணீரை மாற்றியிருக்கிறதா? என மாணவர்களைப் பார்க்கச் சொன்னார். மாணவர்களும் பார்த்து விட்டு இல்லை என்றனர்.
            ஆசிரியர் இப்போது விளக்கினார், "ஒரு பாத்திரம் முழுவதும் இருந்த பாலில் சிறிது நீரை கலந்து போது பால் மாறவில்லை. ஆனால் ஒரு பாத்திரம் முழுவதும் இருந்த நீரில் சிறிது பாலைக் கலந்த போது பால் மாறி விட்டது. அதுதான் சேர்க்கையின் பலன். ஆகவே சேரிடம் அறிந்து சேர்வது முக்கியம்!"
            ஆகவேத்தான் இப்பிடிச் சொல்லப்படுகிறது,
            சேர்க்கை மனிதர்களைப் பாதிக்கிறது. நல்லவர்களோடு சேரும் மனிதர்கள் நல்லவர்களாகவும், தீயவர்களோடு சேரும் மனிதர்கள் தீயவர்களாகவும் மாறி விடுகின்றனர். சேரிடம் அறிந்து சேர்வது முக்கியம் எனப்படுகிறது.
*****

Monday, 29 June 2020

நம்பிக்கையால் கிடைக்கும் மதிப்பு!

மனதோடு வீசும் மென்காற்று :

நம்பிக்கையால் கிடைக்கும் மதிப்பு!
நம்பிக்கை வைரம் போன்றது
எப்போதும் மதிப்பு மிக்கது
வைரத்தை வசப்படுத்துவதுப் போல
நம்பிக்கையை வசப்படுத்துவதும்
எப்போதும் மதிப்பு மிக்கதும் உயர்வானதும் ஆகும்.
வாழ்க்கையின் நம்பிக்கையைக் கூட்ட
நம்பிக்கையைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

மனிதர்கள் மரிக்கலாம்
வானம் இல்லாமல் போகலாம்
பூமி புதையுண்டு போகலாம்
நம்பிக்கை அப்பிடி கிடையாது
சாசுவதமானது, நிரந்தரமானது.
நம்பிக்கை மேல் நம்பிக்கை கொள்ளுங்கள்
நம்பிக்கை இறவாமை உடையது!

விதைக்கும் அனைத்து விதைகளும்
முளை விட்டு விடுவதில்லை
மனதில் எழும் எண்ணங்கள் அனைத்தும்
சாதனை படைத்து விடுவதில்லை
உன்னதமான விதையே
உயர்வாக முளைத்தெழுகிறது
வைராக்யமான எண்ணமே
சாதனையாக உருபெறுகிறது
நம்பிக்கை விதைகளில் உன்னதமானது
செழுமையான வாழ்வைத் தரும் நம்பிக்கை என்பது
அளவிட முடியாத அட்சயப் பாத்திரம்.

தோற்கும் மனிதரும் பூமியில் ஒரு மனிதரே!
வெல்லும் மனிதரும் பூமியில் ஒரு மனிதரே!
இரண்டு மனிதர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்பது
அவர்களுக்கு இடையே இருக்கும்
வலிமையும், புத்துணர்ச்சியுமே ஆகும்.
புத்துணர்ச்சியோடும் வலிமையோடும்
உயிர்த்தெழச் செய்யும் வரம் நம்பிக்கையிடம் உள்ளது.
நம்பிக்கை புத்துணர்ச்சியின் ஊற்று.
நம்பிக்கை வலிமையின் கருப்பை.

வானம் அளக்க பறவைகளுக்குச் சிறகே பிரதானம்
கடலை அளக்க மீன்களுக்கு துடுப்பே பிரதானம்
வாழ்க்கைய அளக்க மனிதர்களுக்கு நம்பிக்கையே பிரதானம்
பறவைகளுக்குச் சிறகுகளைப் போல
மீன்களுக்குத் துடுப்புகளைப் போல
மனிதருக்கு நம்பிக்கை.

வாழ்க்கையின் மதிப்பு
வாழ்ந்ததைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது.
நம்பிக்கையே அங்கே அளவிடவும் மதிப்பிடவும்
பயன்படுகிறது.
நம்பிக்கையோடு வாழ்ந்ததைக் கொண்டுதான்
வாழ்க்கை மதிப்பிடப்படுகிறது.
நம்பிக்கையற்ற வாழ்க்கை மதிப்பிடுவதற்கான
தகுதிக்குரியதே இல்லை.
வாழ்க்கையின் மதிப்பை உயர்த்திக் கொள்ள
நம்பிக்கையோடு இருங்கள்!
நம்பிக்கை வைரத்தைப் போன்றது
வைடூரியத்தைப் போன்றது
ரத்தினத்தைப் போன்றது
வாழ்க்கையின் மதிப்பை
நம்பிக்கைக் கூட்டுகிறது
மனிதரின் மதிப்பை
நம்பிக்கை புகழ் ஏணியில் ஏற்றுகிறது.
*****


Sunday, 28 June 2020

வாழ்க்கையின் சிறகு நம்பிக்கை!

மனதோடு வீசும் மென்காற்று :

வாழ்க்கையின் சிறகு நம்பிக்கை!
பறவையின் நம்பிக்கை சிறகு
மனிதனின் சிறகு நம்பிக்கை
மனிதன் பறக்க முடியாது என்று நினைத்திருந்தால்
வானில் விமானம் ஓட்டியிருக்க முடியாது.
கடலைக் கடக்க முடியாது என்று நினைத்திருந்தால்
கடலில் கப்பல் விட்டிருக்க முடியாது.
முடியும் என்ற நம்பிக்கைதான்
விண்ணைத் தட்டவும்
கடலை எட்டவும் துணை நின்றிருக்கிறது.

வெற்றிக்கும் தோல்விக்கும் நதிமூலம், ரிஷிமூலம் எது தெரியுமா?
நம்பிக்கைதான்!
நம்பிக்கையோடு இருப்பவர்கள்
தோல்வியிலும் வெற்றியைக் காண்கிறார்கள்!
நம்பிக்கை இல்லாதவர்கள்
வெற்றியிலும் தோல்வியைக் காண்கிறார்கள்!
நம்பிக்கையின் துணையின்றி
உங்களால் வெற்றி பெற முடியாது.
நம்பிக்கையின் துணையிருந்தால்
உங்களால் தோற்க முடியாது.

மனதில் போராட்டங்கள்
வாழ்க்கையில் பிரச்சனைகள்
எதிலும் வெறுப்புகள்
எல்லாவற்றிலும் வேதனைகள்
எல்லார்க்கும் இருக்கிறது.
ஒரு சில எல்லாவற்றையும் எதிர்கொள்கிறார்கள்
ஒரு சிலர் ஒரு சிலதிலேயே தடுமாறுகிறார்கள்.
வாழ்க்கையில்
போராட்டங்கள், பிரச்சனைகள்,
வெறுப்புகள், வேதனைகள்
சூழவே செய்யும்.
நம்பிக்கையோடு எதிர்கொள்பவர்கள்
சிறகடிக்கிறார்கள்.
நம்பிக்கை இழப்பவர்கள் புதைகுழியில்
புதைகிறார்கள்.

வைரத்தின் மதிப்பு
அது
பூமிக்குள் புதையுண்டு
காத்திருந்த காலத்தின்
பொறுமையில் இருக்கிறது.
மனிதனின் மதிப்பு
தோல்விகளைக் கண்டு
துவண்டு விடாமல்
வெற்றிக்காக
நம்பிக்கையோடு காத்திருக்கும்
பொறுமையில் இருக்கிறது.
நம்பிக்கை எனும் உயர்ந்த பொருள்
இருக்கும் வரையில்
எவரும் தாழ்ந்து விடப் போவதில்லை.

எழுச்சியும் வீழ்ச்சியும்
நாம் கொள்ளும்
நம்பிக்கையில்தான் இருக்கிறது.
எழுச்சிக் கொள்வது என்பது
நம்பிக்கை கொள்வது
வீழ்ச்சி அடைவது என்பது
நம்பிக்கை இழப்பது.
நம்பிக்கை உள்ளவர்
ஒவ்வொரு வீழ்ச்சியிலும் எழுகிறார்.
நம்பிக்கை இல்லாதவர்
ஒவ்வொரு எழுச்சியிலும் வீழ்கிறார்.

இந்த உலகை யார் உருவாக்கியது என்றால்
கடவுள் என்பார் சிலர்,
தானாக உருவானது என்பார் சிலர்.
இந்த உலகை உருவாக்கியது நம்பிக்கைதான்!
பிரமாண்டமான செயல்கள்
நிகழ்ந்த முடியாத சாதனைகள்
கற்பனைக்கு எட்டாத வசதிகள் என்று
இந்த உலகை உருவாக்கியது நம்பிக்கைதான்.
ஆம்!
நம்மை, இந்த உலகை உருவாக்கியது
யார் என்று நினைக்கிறீர்கள்?
நிச்சயம் நம்பிக்கைதான்!
*****


நம்பிக்கையை நெருங்குங்கள்!

மனதோடு வீசும் மென்காற்று :

நம்பிக்கையை நெருங்குங்கள்!
நம்மை விழும் போது இறுக்கிப் பிடிப்பது
துவளும் போது தாங்கிப் பிடிப்பது
நம்பிக்கையே!

நம்பிக்கையை நெருங்குவதன் மூலம்
நம்மை நாமே நெருங்குகிறோம்.
நம்மிலிருந்து விலகி நிற்கும் நமக்கு
நம்மை நாமே நெருங்குவதற்கான ஏற்பாடு
நம்பிக்கையே!

வாழ்க்கையில் நிஜமான வேதனையையும், துன்பத்தையும்
தரக் கூடியது எது தெரியுமா?
இலட்சியத்தைக் கைவிடுவதும்,
கனவுகள் நிறைவேறாமல் போவதும்தான்.
அந்த வேதனைக்கும், துன்பத்திற்கும் மருந்திருக்கிறது
நம்பிக்கைதான் அந்த மாமருந்து.

இன்னல்களைக் கண்டு இடிந்துப் போகாதீர்கள்!
துயரங்களைக் கண்டு துவண்டுப் போகாதீர்கள்!
இன்னல்களால், துயரங்களால்
நாம் நம்பிக்கையை மிக அதிகமாக நெருங்குகிறோம்.
நமது நம்பிக்கை
இன்னல்களை இல்லாமல் போகச் செய்கிறது,
துயரங்களைத் துடைத்துத் தூர வீசி விட்டுப் போகிறது.

நோய்கள் நம்மை வாட்டலாம்
தோல்விகள் நம்மை வருத்தலாம்
வலிகள் நம்மை வேதனைப்படுத்தலாம்
தனிமைகள் நம்மை தளர்வுறச் செய்யலாம்
அவை நரகத்தின் படிகட்டுகள் அல்ல
நரகத்தைக் கடந்து
சொர்க்கத்தை நோக்கிச் செல்லும் படிகட்டுகள்
நம்பிக்கையோடு இருப்பவர்களுக்கு
சொர்க்கத்தின் படிகட்டுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.

நம்பிக்கை உள்ளவர்கள் எப்போதும் தோற்பதில்லை
சூரியன் மறைந்த பின்னும்
இருள் கவிந்த பின்னும்
தோல்விகள் சூழ்ந்த பின்னும்
நம்பிக்கை அணைவதில்லை
நம்பிக்கை தோற்பதில்லை
நம்பிக்கை நம்மோடு இருக்கும் வரை
தோல்விகள் தோல்விகளில்லை
நம்பிக்கையை இழந்து பெறும்
வெற்றிகளும் வெற்றிகளில்லை.

நமக்கு நம்பிக்கைத் தருவதை
வேறெந்தச் சக்தியாலும் தர முடியாது
நம்பிக்கை அசைக்க முடியாத சக்தி
தளராத மனதையும்
குறையாத பொறுமையையும்
நம்பிக்கையே நமக்குத் தருகின்றது.
தோல்வி வேண்டாத விருந்தாளியாக வரும் போது
நம்பிக்கை
வெற்றியை புதிய விருந்தாளியாக
கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது
நம்பிக்கையை நாம் கைவிடா வரை
வெற்றி நம்மை கைவிடுவதில்லை
நம்பிக்கையை நாம் கைவிடும் போதுதான்
வெற்றி நம்மை கைவிடுகிறது.
நம்பிக்கையை எப்போதும் கைவிடாதீர்கள்!
நம்பிக்கையை நெருங்குங்கள்
வெற்றி நம்மை நெருங்கும்!
*****



மூடநம்பிக்கைகள் முட்டாள்தனமானவை!

கதை சொல்லும் சேதி :

மூடநம்பிக்கைகள் முட்டாள்தனமானவை!
            மூடநம்பிக்கைகள் முட்டாள்தனமானவை மட்டுமல்ல, அபாயகரமானவையும் கூட. ஒரு மனிதன் மூடநம்பிக்கைகளை விடுத்து, தன் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும். அதை விளக்கும்படியான ஒரு கதை.
            ஓர் அரசர் இருந்தார். அவரிடம் ஒரு சோசியக்காரர் காலையில் எழுந்ததும் கழுதையின் முகத்தில் முழித்தால் அதிர்ஷ்டம் என்று கூறி விட்டுப் போய் விட்டார்.
            கழுதை முகத்தில் முழித்து ஒவ்வொரு நாளையும் அதிர்ஷ்ட நாளாக்க வேண்டும் என்று ஆசை கொண்டார் அரசர்.
            அரண்மனைப் பணியாளைக் கூப்பிட்டு ஒவ்வொரு நாளும் காலையில் கண் விழித்ததும் கண் முன்னே கழுதை இருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டு விட்டார் அரசர்.
            பணியாளும் மறுநாள் பொழுது விடிந்ததும் கழுதையைக் கொண்டு போயி அரண்மனை முன்னால் நிறுத்தி விட்டு, அரசரை எழுப்ப போனார்.
            அரசர் எழும்பி வந்துப் பார்த்தார். கழுதையைக் காணவில்லை. அரசர் வருவதற்குள் கழுதை எங்கோ விழுந்தடித்து ஓடி விட்டது.
            அரசர்க்குக் கோபம் வந்து விட்டது. அவர் அந்தக் காலத்து அரசர். அவர்களுக்குக் கோபம் வந்தால் எதற்கெடுத்தாலும் மரண தண்டனைதான்.
            அரசர் பணியாளுக்கு மரண தண்டனை விதித்து விட்டார். அதைக் கேட்டுப் பணியாள் பயந்து நடுங்கவில்லை, சிரிக்க ஆரம்பித்து விட்டார். அரசர்க்கு ஆச்சரியமாகப் போய் விட்டது.
            "ஏன் சிரிக்கிறாய்?" என்று பணியாளைப் பார்த்துக் கேட்டார் அரசர்.
            "நல்ல வேளையாக காலையில் கழுதை முகத்தில் நான் முழித்தேன். அதனால் நீங்கள் தப்பித்தீர்கள். அதனால் நான் மட்டும் சாகப் போகிறேன். நீங்களும் அதன் முகத்தில் முழித்திருந்தால் என்னோடு சேர்ந்து நீங்களும் சாக வேண்டியிருந்திருக்கும். இதுதான் கழுதை முகத்தில் முழிப்பதில் இருக்கும் அதிர்ஷ்டம் போலிருக்கிறது!" என்றார் அந்தப் பணியாள்.
            அரசர் உண்மையைப் புரிந்து கொண்டார்.
            அன்றிலிருந்து மூடநம்பிக்கைகள் முட்டாள்தனமானவை என்றும் அது போன்ற மூட நம்பிக்கைகளை நம்புவதில்லை என்றும் முடிவெடுத்துக் கொண்டார்.
            அதனால்தான் இப்பிடிச் சொல்லப்படுகிறது,
            மூடநம்பிக்கைகள் முட்டாள்தனமானவை மட்டுமல்ல, அபாயகரமானவையும் கூட. நீங்கள் மூடநம்பிக்கை மேல் நம்பிக்கையை விட உங்கள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் உயரலாம்.
*****