Saturday 24 September 2022

விகிதத்தைப் பற்றி அறிந்து கொள்வோமா?

விகிதத்தைப் பற்றி அறிந்து கொள்வோமா?

எண்களைப் பற்றிப் பார்த்து விட்டோம். வடிவங்களைப் பார்த்து விட்டோம். அடுத்து நாம் பார்க்க வேண்டிய தலைப்பு என்ன என்பது குறித்து நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்தானே?

அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய விகிதம் பற்றிப் பார்ப்போமா?

இதென்ன புது சொல்லாக இருக்கிறது என்று நினைத்து விடாதீர்கள்.

சொல் வேண்டுமானாலும் புதிதாக இருக்கலாம். ஆனால் அதன் உள்ளடக்கம் நாம் நன்கு அறிந்ததுதான்.

எண்களைப் பற்றிப் பார்க்கும் போது விகிதமுறு எண்கள் பற்றிப் பார்த்திருப்போமோ? அதுதான் விகிதம்.

நாம்தான் கணக்கு என்றால் எண்கள் என்று முன்பே அறிந்து வைத்திருக்கிறோமே!

எண்களில் விகித முறு எண்களை வாழ்வியலோடு தொடர்புபடுத்திப் பார்த்தால் அதுதான் விகிதம்.

இன்னும் குறிப்பாகச் சொன்னால் பின்ன எண்கள்தான் விகிதம் என்றும் சொல்லலாம்.

பின்னம் என்றால் என்ன?

இரண்டு எண்களுக்கு இடையே ஒரு வகுத்தல் குறி போட்டு விட்டால் அதுதான் பின்னம். அல்லது இரண்டு எண்களுக்கு இடையே ‘/‘ இப்படி ஒரு குறி போட்டு விட்டாலும் அது பின்னம்தான்.

இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இரண்டு எண்களை வகுத்தல் மூலமாக ஒப்பிடுவதுதானே பின்னம்? அதுதான் விகிதமும் கூட.

அதாவது விகிதம் என்பது வகுத்தல் மூலமாக இரண்டு எண்களை ஒப்பிடுவதுதான். இந்த ஒப்பீடு அன்றாட வாழ்க்கையில் பல விதங்களில் பயன்படுகிறது. அதற்காகத்தான் நாம் விகிதத்தைப் பற்றிப் பார்க்க இருக்கிறோம்.

இந்த விகிதத்தைக் கொண்டே லாப – நட்ட கணக்குள், தள்ளுபடி கணக்குகள், வட்டிக் கணக்குகள் வரை போட முடியும். அதுவும் மிக எளிதாக. அதைத்தான் சுருக்க முறை (ஷார்ட் கட்) கணக்கீடுகளாகப் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பதை அறிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.

அப்படியானால் அதைப் பற்றித் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும் என்று இப்போது நீங்கள் சொல்வது என் காதுகளுக்குக் கேட்கிறது.

சரி இப்போது ஏதேனும் ஒரு பின்னம் சொல்லுங்கள் பார்ப்போம்.

¼ என்கிறீர்களா?

மிகவும் சரி.

இதை அப்படியே 1 : 4 என எழுதிக் கொண்டால் அதுதான் விகிதம்.

இப்போது நாம் என்ன செய்திருக்கிறோம் என்று பாருங்கள். மேலும் கீழும் இருந்த எண்களை பக்கத்துப் பக்கத்தில் எழுதிக் கொண்டோம். இடையில் ‘:’ என்ற முக்காற்புள்ளியை இட்டுக் கொண்டோம். அவ்வளவுதானே?

¼ ஐ 1 : 4 என்றுதான் எழுதிக் கொள்ள வேண்டுமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது உங்களுக்குச் சிரமமாகவோ சங்கடமாகவோ தோன்றினால் 1 : 4 என்பதை ¼ என எழுதிக் கொள்ளுங்களேன். அதாவது விகிதத்தில் இருப்பதை பின்ன வடிவிற்குக் கொண்டு வந்து கணக்கைப் போடுங்களேன். எந்தத் தவறும் வந்து விடாது.

பக்கத்துப் பக்கத்தே எழுதி இடையில் முக்காற் புள்ளிதான் இட வேண்டும் என்ற அவசியம் இல்லை. பின்னமாகவே எழுதிக் கொள்ளலாம். பின்னத்திற்குப் பொருந்தும் எல்லா பண்புகளும் விகிதத்திற்குப் பொருந்தும். விகிதத்திற்குப் பொருந்தும் எல்லா பண்புகளும் பின்னத்திற்குப் பொருந்தும். ஏனென்றால் இரண்டும் ஒன்றுதான். வடிவங்கள்தான் வேறு வேறு.

இப்போது விகிதம் பற்றியும் விகிதத்தின் வடிவம் பற்றியும் அறிந்து கொண்டோமா? இந்த விகிதத்தில் இரண்டு வகைகள் இருக்கின்றன. அதைப் பற்றி நாளை பார்ப்போம்.

*****

No comments:

Post a Comment