Wednesday, 14 September 2022

பள்ளி மேலாண்மைக் குழு அறிய வேண்டியதும் அமைக்க வேண்டியதும்

பள்ளி மேலாண்மைக் குழு அறிய வேண்டியதும் அமைக்க வேண்டியதும்

ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. பள்ளியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டைக் கண்காணிக்கவும் உறுதிப்படுத்தவும் அமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழுவில் தலைவர், செயலர் உள்ளிட்ட இருபது உறுப்பினர்கள் இடம் பெறுவர்.

பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களால் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுப்பினர்களால் தலைவரும் துணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பர். பள்ளியில் தலைமையாசிரியர் செயலராகச் செயல்படுவார்.

பள்ளி மேலாண்மைக் குழு குழந்தைகளுக்கான பின்வரும் உரிமைகள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். இவ்வுரிமைகளை மனதில் பதிய வைத்துக் கொள்வதற்காக வா-வ-பா-ப (வாவ்வா பாப்பா) என்ற எழுத்துச் சுருக்கத்தைக் கருத்தில் கொள்ளலாம். இதன்படி,

முதல் வா – என்பது வாழ்வதற்கான உரிமை,

இரண்டாவது வ – என்பது வளர்ச்சிக்கான உரிமை,

மூன்றாவது பா – என்பது பாதுகாப்பிற்கான உரிமை,

நான்காவது ப – என்பது பங்கேற்பதற்கான உரிமை.

இந்நான்கு விதமான உரிமைகளையும் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் பெற்றிருப்பதைப் பள்ளி மேலாண்மைக் குழு உறுதி செய்ய வேண்டும்.

அடுத்ததாகப் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களைத் தலைவராகக் கொண்டு 4 விதமான குழுக்கள் அமைக்க வேண்டும். இக்குழுவின் உறுப்பினர்களாகப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இருக்க வேண்டும். ஒரு குழுவிற்கு 3 முதல் 5 பெற்றோர்கள் வரை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துக் கெள்ளலாம்.

நான்கு குழுக்களின் விவரமாவது,

1. மாணவர் சேர்க்கை மற்றும் இடைநிற்றல் தவிர்த்தல் குழு

2. கற்றல் மேம்பாட்டுக் குழு

3. மேலாண்மைக் குழு

4. கட்டமைப்புக் குழு

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தங்கள் பணத்தைச் செலவழித்துதான் பள்ளியை மேம்படுத்த வேண்டும் என்று கருதிக் கொள்ளக் கூடாது. பள்ளிக்காகப் பணத்தைத் தன்னார்வமாக வழங்குவது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என்றாலும் பள்ளிக்காகவும் பள்ளியின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காகவும் தங்களது நேரம், உழைப்பு மற்றும் ஆலோசனைகளை வழங்கியும் பள்ளியை மேம்பாடு அடையச் செய்யலாம்.

ஒவ்வொரு பள்ளியையும் பெற்றோர்களும் பொது மக்களும் ‘நம் பள்ளி! நம் பெருமை!’ என்ற உணரச் செய்வது பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் கையில் உள்ளது என்றால் அது மிகையாகாது.

*****

No comments:

Post a Comment