Saturday, 3 September 2022

ஒற்றை எண்களுக்கும் வர்க்க எண்களுக்கும் உள்ள தொடர்பு

ஒற்றை எண்களுக்கும் வர்க்க எண்களுக்கும் உள்ள தொடர்பு

ஒற்றை எண்களை வரிசையாக எழுதிக் கூட்டிப் பாத்திருக்கிறீர்களா?

இப்போது கூட்டிப் பார்ப்போமா?

1 + 3 + 5 + 7 + 9 இதன் கூடுதலைப் பாருங்களேன்.

25 என்று வருகிறதா?

ஒன்றிலிருந்து முதல் ஐந்து ஒற்றை எண்களைக் கூட்டும் போது 25 கிடைக்கிறது. இது ஐந்தின் வர்க்கம் அல்லவா!

இப்போது ஒன்றிலிருந்து தொடங்கி ஆறு ஒற்றை எண்களை அதாவது 11 வரைக் கூட்டிப் பாருங்களேன்.

1 + 3 + 5 + 7 + 9 + 11 = 36

36 என்பது 6 இன் வர்க்கம் அல்லவா!

அப்படியானால் ஒன்றிலிருந்து தொடங்கி ஏழு ஒற்றை எண்களை அதாவது 13 வரைக் கூட்டினால் 7 இன் வர்க்கமான 49 வருமா என்றால் அப்படித்தான் வரும். வேண்டுமானால் கூட்டிப் பாருங்களேன்.

1 + 3 + 5 + 7 + 9 + 11 + 13 = 49

இப்போது கண்டுபிடித்து விட்டீர்களா?

ஒற்றை எண்களை ஒன்றிலிருந்து வரிசையாகத் தொடங்கிக் கூட்டும் போது எத்தனை ஒற்றை எண்களைக் கூட்டுகிறோமோ அதை எண்ணிக் கொண்டு அந்த எண்ணிக்கையை வர்க்கப்படுத்தினால் அதன் கூடுதல் கிடைத்து விடும்.

இதை நாம் ஒற்றை எண்களுக்கும் வர்க்கத்திற்கும் உள்ள தொடர்பு என்று கூறலாம்தானே.

எண்களைப் பாருங்களேன் ஒன்றுக்கு ஒன்று எவ்வளவு அழகியலோடு அற்புதமாகத் தொடர்பு கொள்கின்றன என்று.

ஒற்றைப் படை எண்களின் தொடர்வரிசையின் கூடுதல் இப்படி வர்க்கமாக அமைகிறது என்றால் இரட்டைப் படை எண்களின் கூடுதல் எப்படி அமையும் என்ற கேள்வி இப்போது உங்களுக்குள் எழுந்திருக்குமே. அதைக் கண்டுபிடித்து வையுங்கள். நாளைப் பார்ப்போம்.

*****

No comments:

Post a Comment